Published:Updated:

திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்... கொள்ளை போகும் மக்கள் பணம்!

திவாலாகும் வங்கிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
திவாலாகும் வங்கிகள்

30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வங்கிக்கே இந்த நிலை

டிஜிட்டல் இந்தியா, கேஷ்லெஸ் இந்தியா... இந்த வார்த்தைகளெல்லாம் அடித்தட்டு இந்தியன் வரை உச்சரிக்கும் வார்த்தைகள் ஆகிவிட்டன. கேட்கத் தேனாக இனிக்கின்றன இந்த வார்த்தைகள். எல்லா பணப்பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற அரசின் இலக்கு மெல்ல மெல்ல நிறைவடையும் தருணம், நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியான யெஸ் பேங்க் பற்றி வெளிவரும் செய்தி மொத்த நம்பிக்கையையும் தகர்த்தியிருக்கிறது.

வங்கி மோசடிகள் ஒன்றும் புதிதல்ல. மத்திய அரசு அளித்துள்ள தரவுகளின்படி, 2012-2016 காலகட்டத்தில் மட்டும் 22,743 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பொதுத்துறை வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளது. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஐ.டி.பி.ஐ, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிகளில் 10,000 போலிக் கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கியது, 2011-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது.

2014-ம் ஆண்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பிபின் வோஹ்ரா, போலியான ஆவணங்கள் கொடுத்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,400 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. இதுமட்டுமன்றி, சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் லஞ்சம் வாங்கிக்கொண்டு 8,000 கோடி ரூபாய் கடன் கொடுத்தார் என்ற தகவலும் வெளிவந்தது.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2016-ம் ஆண்டில் சிண்டிகேட் வங்கியில் 380 போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, போலிக் காசோலைகள், புரிந்துணர்வு கடிதங்கள், எல்.ஐ.சி பாலிசிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் மோசடி நடந்தது வெளிவந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல்வேறு வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, 9,500 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிலேஷ் பரேக், 20 வங்கிகளை ஏமாற்றி இழப்பு உண்டாக்கியதாக, 2017-ம் ஆண்டில் சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேங்க் ஆஃப் மஹாராஷ்டி ராவின் முன்னாள் மண்டலத் தலைவர் மீதும், சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், 836 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது.

வங்கிகளை நிர்வகிப்பவர்கள், தொழிலதிபர் களுடனும் அரசியல்வாதிகளுடன் கைகோத்துக் கொண்டு மக்கள் பணத்தை வாரி இறைப்பதும் சூறையாடுவதும் தொடர்கதையாகிவரும் சூழலில், தற்போது யெஸ் பேங்க் திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது.

திவாலாகும் வங்கிகள்
திவாலாகும் வங்கிகள்

நாடு முழுவதும் 1,122 கிளைகள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கிவரும் இந்த பேங்க், தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்த வங்கியில் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இன்டர்நெட் பேங்கிங், UPI, ஆப் அனைத்தும் செயலிழந்துள்ளன. அதனால் மிகவும் பதற்றத்தோடு வங்கிகளில் வரிசையில் நின்று பணம் எடுத்துவருகின்றனர் யெஸ் பேங்க் வாடிக்கை யாளர்கள். சமீபத்தில் சரிவுக்குள்ளான பி.எம்.சி (PMC) வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வந்த நிலை தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற பதற்றமும் மக்களைச் சூழத் தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படிச் சரிந்தது யெஸ் பேங்க்?

இந்த வங்கியின் சரிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப் படுபவை, வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள்தாம். 2004-ம் ஆண்டு ராணா கபூர், அசோக் கபூர் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட வங்கிதான், யெஸ் பேங்க். 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலில் அசோக் கபூர் உயிரிழந்தார். ராணா கபூர் யெஸ் பேங்க்கின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இவர் தலைமையின்கீழ் பெரிய நிறுவனமாக வளர்ந்துவந்தது யெஸ் பேங்க். ஒரு வங்கி சிறப்பாகச் செயல்பட, கடன் கொடுக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், யெஸ் பேங்க் அந்த விஷயத்தில் கோட்டைவிட்டது. கடன் கேட்டு எந்த நிறுவனம் அணுகினாலும் ‘எஸ்’ மட்டுமே சொல்லும் ‘கர்ணனாக’ இருந்தது யெஸ் பேங்க்.

வங்கியின் சரிவுக்கு
முக்கிய காரணங்கள்
திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்...
கொள்ளை போகும் மக்கள் பணம்!

நிறுவனங்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுப்பதன்மூலம் வங்கியை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல முடியும் என ராணா கபூர் நம்பினார். ஆனால், இது பின்னாளில் இவ்வளவு பெரிய சரிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. இப்படி கடன் கொடுப்பதால் எதிர்பார்த்த வளர்ச்சி இருந்தாலும், அதிக வட்டியின் காரணமாக வாராக்கடனும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் அவரோ, சிறந்த மேலாண்மைக்காக விருதுகள் பெற்றுக்கொண்டிருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் தொடங்கி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வரை வாரக்கடன் பிரச்னைகளில் சிக்கிய முக்கிய நிறுவனங்கள் அனைத்துக்குமே கடன் கொடுத்திருந்தது யெஸ் பேங்க். இவை அனைத்துமே கடன் வாங்கும் அளவுக்கு நன்மதிப்பு இல்லாமல் இருந்த நிறுவனங்களே! பிற வங்கிகள் மறுத்த கடனை யெஸ் பேங்க் அளித்தது.

9,500 கோடி ரூபாய் கடன் பெற்று விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக, இந்திய வங்கிகளின் வாராக்கடன் விவரங்களைப் புரட்டியது ரிசர்வ் வங்கி. அனைத்து வங்கிகளும் இந்த விவரங்களை ரிசர்வ் வங்கிக்குச் சமர்ப்பித்தன. 2015-16 நிதியாண்டில் யெஸ் பேங்க் சார்பாக வாராக்கடன் தொகையாக 749 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கீட்டில் வாராக்கடன் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதன் பிறகு, யெஸ் பேங்க் மீது ரிசர்வ் வங்கி கண் பதித்தது.

2018-19ம் ஆண்டில் யெஸ் பேங்க்கின் வாராக்கடன் தொகை 3,277 கோடி ரூபாய். இவற்றில், ஐ.எல் & எஃப்.எஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களிடம் மட்டுமே 1,000 கோடி ரூபாய்க்குமேல் கடன் இருந்தது. வங்கியின் செயல்பாட்டை தீவிரமாகக் கண்காணித்துவந்த ரிசர்வ் வங்கி, களத்தில் இறங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு யெஸ் பேங்கின் தலைமைச் செயல் அதிகாரியாக ராணா கபூர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. அவரின் பதவிக்காலத்தைச் சுருக்கியது. 2019, மார்ச் முதல் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரவ்னீத் கில் பொறுப்பேற்றார்.

ராணா கபூர், தன் பங்குகள் அனைத்தையும் அடகுவைத்திருந்தார். கடனைக் கட்டாததால் அவரின் பங்குகள் விற்கப்பட்டன. மேலும், வங்கியின் தலைவராக அவர் தொடர ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. 2019, டிசம்பர் மாதத்தில் ராணா கபூர்வசம் எந்தப் பங்கும் இல்லை என, யெஸ் பேங்க் அறிவித்தது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் யெஸ் பேங்க்கின் மதிப்பைக் குறைத்தது.

தொடர் நிர்வாக மாற்றக் குழப்பங்கள் காரணமாக, அதுவரை நஷ்டத்தையே சந்திக்காத யெஸ் பேங்க், 2019, மார்ச் காலாண்டில் 1,507 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. தொடர்ந்து சரிந்துவந்த யெஸ் பேங்கை மீட்டெடுக்க, ரவ்னீத் கில் பல முதலீடுகளை உள்ளே கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்க வில்லை. டிசம்பர் காலாண்டுக்கான வாராக்கடன் மற்றும் நஷ்டக் கணக்கை வெளியிடாமல் நிறுத்திவைக்கும் அளவுக்கு கடும் நெருக்கடியில் சிக்கியது யெஸ் பேங்க். இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி யெஸ் பேங்க்கை அதன் நேரடி கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

யெஸ் பேங்க்கைக் காப்பாற்ற அரசு வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன?

யெஸ் பேங்கின் 49 சதவிகிதப் பங்குகளில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) முதலீடு செய்யும். மேலும் யெஸ் பேங்க்கின் மேலாண்மை ஆணையத்தை, எஸ்.பி.ஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார் நிர்வகிப்பார். எஸ்.பி.ஐ அதிக பட்சமாக 10,000 கோடி ரூபாயை யெஸ் பேங்க்கில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யெஸ் பேங்க்கை செயல்பாட்டில்வைக்க இந்தத் தொகை போதாது. சுமார் 20,000 கோடி ரூபாய் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து இன்னும் வர வேண்டும். இதற்காக Blackstone, KKR, Goldman Sachs உட்பட ஒன்பது சர்வதேச முதலீட்டாளர் களுடனும் பேசிவருகிறது எஸ்.பி.ஐ.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் யெஸ் பேங்க்கில் முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மக்களின் சேமிப்புக்கு இப்போதைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கவனக்குறை வாக இருந்துவிட்டது என்பதே மிக முக்கியக் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. ‘‘2014-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி யெஸ் பேங்க்கால் கொடுக்கப் பட்ட கடன்தொகை சுமார் 55,633 கோடி ரூபாய். அதுவே 2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 2,41,499 கோடி ரூபாய். ஒவ்வொரு வருடமும் கடன் கொடுக்கும் தொகை 35 சதவிகிதம் வரை உயர்ந்திருக் கிறது. இதிலும் 2016-17, 2017-18 நிதியாண்டுகளில்தான் அதிக தொகை கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பண மதிப்பிழப்பு நடந்த பிறகு இப்படி கண்மூடித்தனமாக யெஸ் பேங்க் கடன் கொடுத்துக்கொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கி ஏன் தலையிடவில்லை? தனியார் வங்கிகளின் வருடாந்தர இருப்புநிலை அறிக்கைகளையெல் லாம் ரிசர்வ் வங்கி கண்காணிக்கவே இல்லையா?’’ என்பதுதான் அனைவரின் கேள்வியுமே.

யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை, அமலாக்கத் துறையினர் தற்போது கைதுசெய்துள் ளனர். கடும் நிதி நெருக்கடியில் இருந்த பல நிறுவனங்களுக்கு, தெரிந்தே அதிக அளவில் கடன் வழங்கி அதன்மூலம் ராணா ஆதாயம் அடைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி தன் மகள்கள் பெயரில் ராணா புதிய நிறுவனம் தொடங்கியதாகவும், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் இயக்குநர் கபில் வாதவனிடம் சுமார் 600 கோடி ரூபாய் பெற்றுகொண்டு, அந்த நிறுவனத்தில் 3,700 கோடி ரூபாய் முறைகேடாக முதலீடு செய்ததாக ராணா கபூர் மீது சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கபில் வாதவனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இப்படி, இன்னும் பல மோசடிகள் நடந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் சொன்ன டிஜிட்டல் இந்தியா, கேஷ்லெஸ் இந்தியா போன்ற வண்ண வண்ண வார்த்தைகளை நம்பி, பழங்கள் விற்று, மூட்டை தூக்கிச் சம்பாதித்து சுருக்குப்பையில் சேமித்த பணத்தையும்கூட வங்கிகளில் போட்டு வைத்திருக் கிறார்கள் நம் மக்கள். ஜன்-தன் யோஜனா திட்டத்தின்மூலம் மட்டும், 31.8 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன.

‘இதெல்லாம் நடக்கும் என்று 2015-லேயே சொன்னேன். அடுத்து ஒரு ‘A’-வும் இப்படிச் சரியும்’ என சூசகமாக ட்வீட் செய்து வழக்கம்போல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. ‘A’ என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப் பிட்டிருக்கும் வங்கி எதுவென சமூக ஊடகங்களில் பெரும்விவாதமே நடைபெற்று வருகிறது.

வங்கிகளெல்லாம் திவால் ஆகாது என்ற மக்களின் நம்பிக்கை, பி.எம்.சி வங்கிப் பிரச்னையில் சிக்கியபோது தகர்ந்தது. இப்போது யெஸ் பேங்க் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வங்கியில் பணத்தைச் சேமிப்பதற்கே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘வங்கியில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்து வேறு எங்கேயாவது சேமித்து வைக்கலாமா... தங்கமாக மாற்றி வைக்கலாமா... ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாமா?’ என்றெல்லாம் மக்கள் மனம் அலைபாயத் தொடங்கியிருக்கிறது. மொத்தத்தில் வங்கி உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்... இவர்களின் சதுரங்க விளையாட்டில், சாமானிய மக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணம் கொள்ளைபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வங்கிக்கே இந்த நிலையென்றால், அடுத்து..? ஒரு நாட்டின் நிதி அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் முதுகெலும்பே வங்கித் துறைதான். அதில் கவனம் இல்லையென்றால், இந்திய பொருளாதாரத்துக்கே கூன் விழுந்துவிடும்!

வங்கிகள் தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?

‘‘ரிசர்வ் வங்கியின் முறையான கண்காணிப்பு இல்லாததுதான் முக்கிய காரணம். பி.எம்.சி வங்கி திவாலானபோது கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை குற்றம் சுமத்தினார்கள். ஆனால் தற்போது, பெரிய வங்கிகளில் ஒன்றான தனியார் வங்கி திவாலாகி யுள்ளது. ரிசர்வ் வங்கி சரியாகச் செயல்பட்டிருந் தால் முன்கூட்டியே இதை சரிசெய்திருக்கலாம்’’ என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ.

திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்...
கொள்ளை போகும் மக்கள் பணம்!

‘‘பொதுத்துறை வங்கியோ தனியார் வங்கியோ வழங்கும் கடன்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது. குறிப்பாக, மிகப்பெரிய கடன்களை வழங்கும்போது ரிசர்வ் வங்கி அதை ஆய்வுசெய்து, வழங்கப்படும் நிறுவனத்தின்மீது நல்ல மதிப்பீடு இல்லையென்றால் தடுக்க முடியும். சிறிய அளவிலான கடன்களை அதிக எண்ணிக்கையில் வழங்குவதற்கு ஊக்கப்படுத்த முடியும். யெஸ் பேங்கைப் பொறுத்தவரை, ஐ.எல்.&எஃப்.எஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட சரியாக இயங்காத பல நிறுவனங்களுக்கு பெரிய தொகையை கடனாக வழங்கியிருக்கிறது. இத்தகைய கடன்களை வழங்கும்போதே ரிசர்வ் வங்கி எச்சரித்துத் தடுத்திருக்கலாம். மத்திய அரசின் தலையீடு பெருமளவு இருப்பதால் ரிசர்வ் வங்கி செயலற்று இருந்திருக்கிறது.

தற்போதுள்ள மத்திய அரசுக்கு பொருளா தாரத்தைச் சீர்திருத்தும் எண்ணமே இல்லை. 2016-ம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த எதையுமே இன்று வரை அமல்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, 2017-ம் ஆண்டில் எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance) மசோதாவை நிறைவேற்ற முயன்றது. அதன்படி, ஒரு வங்கி திவாலாகும் நிலைக்கு வந்தால், அதை சரிசெய்ய அரசாங்கம் நிதி செலவிடத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை எடுத்துப் பயன்படுத்தி வங்கியை சரிசெய்யலாம். வங்கி நல்லநிலைக்கு வரும்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டெபாசிட்டுகளை அளித்தால் போதும் என்றிருந்தது. அப்போது அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால் நிறைவேற்றவில்லை.

திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்...
கொள்ளை போகும் மக்கள் பணம்!

தற்போது திரும்பவும் அதே மசோதாவை, சற்று வார்த்தைகளை மாற்றி எஃப்.எஸ்.டி.ஆர் (Financial Sector Development and Regulation bill) என்ற பெயரில் கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே இருந்த மசோதாவில் ‘பெயில்-இன்’ (bail-in) என்ற வார்த்தை இருந்தது. தற்போது அதற்குப் பதிலாக ‘தீர்ப்பாயம்’ என்பதைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன்படி, வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து தீர்ப்பாயம் முடிவெடுக்கும். அந்தத் தீர்ப்பாயத்தை மத்திய அரசே நியமிக்கும். ஆக, ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’ என்பதுபோல் அதே மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு தற்போது பெரும்பான்மையிலும் பெரிய சிக்கலில்லை என்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது. அப்படி புதிய சட்டம் அமலுக்கு வந்தால் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். எனவே, அந்த மசோதாவைச் சட்டமாக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், தனியார்மயமாக்கும் கொள்கையை விட்டுவிட்டு தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும். வங்கிக் கிளைகளையும் அதிகரிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இதுகுறித்து ஆடிட்டர் ம.சத்யகுமாரிடம் பேசினோம். ‘‘2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கடனை அள்ளிக் கொடுத்திருக்கிறது யெஸ் பேங்க். இவர்கள் கடனுதவி செய்த ஐ.எல் & எஃப்.எஸ், திவான் ஹவுஸிங், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் லாபகரமாக இயங்காதவை. இந்தத் தவறுகளுக்குக் காரணம், வங்கியை நிர்வகித்தவர்கள்தான். ரிசர்வ் வங்கி விதிமுறைகளைத்தான் வகுக்க முடியும். வங்கிகள் வழங்கும் ஒவ்வொரு கடனையும் தணிக்கை செய்துகொண்டிருக்க முடியாது.

பொதுவாக, வங்கிகளில் அரசியல் தலையீடு இருக்கத்தான் செய்யும். அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரங்களை தனியார் நிறுவனங்களே தருகின்றன. குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்தக் கட்சிக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் கொடுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல் வங்கிகள் வரை மொத்த சிஸ்டமும் ஃபெயிலியர் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற தவறுகள் வருங்காலங்களில் நடக்காமல் தவிர்க்க, அரசாங்கம் மிகக்கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். வங்கிகளை ஆடிட் செய்வதில் தற்போதுள்ள முறையை மாற்றி, ஃபாரென்சிக் ஆடிட்டிங் எனும் நுட்பமான ஆடிட்டிங் முறைகளைக் கையாள வேண்டும். ஆடிட்டிங் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஆடிட்டிங் செய்பவர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் கட்டாயம் தேவை’’ என்றார்.

குடும்பப் பகையால் வீழ்ந்ததா யெஸ் பேங்க்?

யெஸ் பேங்கின் கதை, நிறைய மர்மங்கள், துரோகங்கள், பழிவாங்கல்களால் ஆனது. யெஸ் பேங்க்கை, ராணா கபூர் (26 சதவிகிதப் பங்கு) அசோக் கபூர் (11 சதவிகிதப் பங்கு) ஆகியோர் இணைந்து தொடங்கினர். இரண்டு கபூர்களின் மனைவிகளும் சகோதரிகள். 2008-ம் ஆண்டில் அசோக் கபூர் 26/11 சம்பவத்தில் மும்பையில் ஓபரா ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அசோக்கின் மரணத்துக்குப் பிறகு அவரின் மனைவி மது கபூர் நிர்வாகத்துக்குள் வந்தார். தொடக்கம் முதலே ராணாவுக்கும் மதுவுக்கும் சரிப்பட்டுவரவில்லை. நிர்வாக உரிமை கோரி, சட்டயுத்தம் தொடங்கியது. அசோக் கபூரின் மகள் ஷாகன் கபூரும் இந்த யுத்தத்தில் பங்கெடுத்து ராணா கபூரைத் தோற்கடிக்க வியூகம் வகுத்தார். ஷாகன் கபூருக்கு ஆதரவாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான், அரசாங்கம் ராணா கபூருக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்றும் தகவல்கள் கசிகின்றன.