Published:Updated:

சண்முகப்பிரியாவின் கனவுகளைக் கலைத்த கொரோனா!

சண்முகப்பிரியா
பிரீமியம் ஸ்டோரி
சண்முகப்பிரியா

கொரோனா அச்சம் நீடிப்பதால் மருத்துவர்களின் பணிச்சுமை குறைந்தபாடில்லை. இதனால், கர்ப்பமான நிலையிலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றிவந்தார் அவர்.

சண்முகப்பிரியாவின் கனவுகளைக் கலைத்த கொரோனா!

கொரோனா அச்சம் நீடிப்பதால் மருத்துவர்களின் பணிச்சுமை குறைந்தபாடில்லை. இதனால், கர்ப்பமான நிலையிலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றிவந்தார் அவர்.

Published:Updated:
சண்முகப்பிரியா
பிரீமியம் ஸ்டோரி
சண்முகப்பிரியா

’இளம் மருத்துவரான சண்முகப்ரியாவுக்கு 32 வயதுதான். எட்டு மாத கர்ப்பிணியான இவர் கொரோனாவில் மாண்டுபோனார். எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார், அத்தனையும் போச்சே...’ என்று தொடங்கும் சீனியர் பெண் டாக்டர் ஒருவரின் இரங்கல் பதிவில், அடுத்து வருகின்ற வரிகள்தான் இதயத்தில் இன்னும் வலியை ஏற்படுத்துகின்றன.

‘இதில் அதிகம் பாதிக்கப்படுவது நாங்களும் எங்கள் குடும்பமும்தான். கெஞ்சிக் கேட்கிறேன்... தயவுசெய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கைகளை அடிக்கடி முறையாகக் கழுவுங்கள். மருத்துவத் துறையில் உள்ள எங்களின் உயிரும், எங்கள் குடும்பத்தினர் உயிரும் உங்கள் கைகளில்தான் உள்ளது...’

முன்களப் போராளிகளாக கொரோனாவை எதிர்த்து நிற்கும் மருத்துவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஓராண்டுக்கும் மேலாக சளைக்காமல் உழைத்துவரும் அனைவரின் தைரியத்தையும் அசைத்துப் பார்த்துள்ளது டாக்டர் சண்முகப்ரியாவின் மரணம்.

சண்முகப்பிரியாவின் கனவுகளைக் கலைத்த கொரோனா!

மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஓராண்டாக மருத்துவ அலுவலராகப் பணியாற்றிவரும் சண்முகப்ரியாவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கணவர் முத்துக்குமார், ஹோட்டல் தொழில் செய்து வருகிறார்.

கொரோனா அச்சம் நீடிப்பதால் மருத்துவர்களின் பணிச்சுமை குறைந்தபாடில்லை. இதனால், கர்ப்பமான நிலையிலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றிவந்தார் அவர். இந்த நிலையில்தான் சில நாள்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் வரவே, சோதனை செய்து பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிப்பு தீவிரமான நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் உதவியிடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், மே 8-ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். கருவிலிருக்கும் குழந்தை வெளி உலகத்தைக் காணவிடாமலேயே சண்முகப்ரியாவை இழுத்துச் சென்றுள்ளது கொரோனா.

‘`எப்பவும் எங்க பகுதி ஆஸ்பத்திரியில டாக்டரம்மா இருப்பாக. ஜனங்ககிட்டே அன்பா ஆதரவா பேசுவாக. அவுகளுக்கு இப்படி ஆகும்னு நெனைக்கலையே, இனிமே இவங்க மாதிரி டாக்டரு கிடைப்பாங்களா...’’ என்று புலம்புகிறார்கள் அனுப்பானடி பகுதி மக்கள். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், எதுவும் பேச முடியாமல் இருக்கிறார்கள் சண்முகப்ரியாவின் குடும்பத்தினர்.

சண்முகப்பிரியாவின் கனவுகளைக் கலைத்த கொரோனா!

அவருடன் பணிபுரிந்த ஊழியர்களிடம் பேசினோம். ‘`தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டிதான் சண்முகப்ரியாவின் ஊரு. அவங்க அப்பா சின்னமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டரா வேலை பார்த்தவர். அவங்க அம்மா நர்ஸாக இருந்தாங்க. சின்ன வயசிலிருந்து அப்பா, அம்மாவைப் பார்த்துப் பார்த்து தானும் மருத்துவ சேவை செய்யணும் என்று நினைத்து வளர்ந்திருக்கிறார். அந்த இலக்கோடு சின்னமனூரில் ப்ளஸ் டூ முடித்தவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் ஆனதும், அவர் வளர்ந்த ஊரான சின்னமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலயே போஸ்டிங் கிடைத்தது. அங்கு அஞ்சாறு வருஷம் வேலை பார்த்து ஜனங்களின் அன்பை சம்பாதித்தார். டியூட்டி முடிஞ்சு வீட்டில் இருக்கும்போதும் மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுத்தார். சுற்றியுள்ள கிராம மக்கள் அவசர சிகிச்சைக்கு எந்த நேரத்திலும் வீட்டுக் கதவைத் தட்டலாம்னு அங்கு அறிவிப்பு செஞ்சிருக்கார்.

கடந்த வருடம்தான் இடமாறுதலில் அவர் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார். இந்தப் பகுதியில் ஏழை எளிய மக்கள் அதிகம். இங்கு வந்தும் முழு நேரம் மருத்துவமனையிலயே இருப்பார். மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில் ரொம்ப அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டதில், தன் உடல்நலனைக் கவனிக்கத் தவறிவிட்டார். கர்ப்பமான நிலையில் அவர் நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தார். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்மீதான அக்கறையே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக் காரணமாகியுள்ளது. கடைசியில் இப்படி ஆகுமென்று யாரும் நினைக்கவில்லை’’ என்று கலங்கினார்கள் அவர்கள்.

சண்முகப்பிரியாவின் கனவுகளைக் கலைத்த கொரோனா!

கர்ப்பிணி என்பதால் கொரோனாத் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள முடியாத நிலை. கடுமையான நோய் எதிர்ப்பு மருந்துகளும் செலுத்த முடியாத நிலையில், கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக இருந்த நிலையில் அவரைக் காப்பாற்றப் பல முயற்சிகளையும் டாக்டர்கள் செய்து பார்த்துள்ளனர். எதுவும் பலன் தரவில்லை என்பது துயரம்.

இவருடைய சோக மரணம், மருத்துவத் துறையைக் கலக்கமடையச் செய்துள்ளது. மருத்துவர்கள் எந்த அளவுக்குத் தங்களைத் தியாகம் செய்து சேவை செய்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள மற்றொரு உதாரணமாக சண்முகப்ரியா மாறியுள்ளார். இனி இப்படி ஒரு மரணம் நிகழ்ந்துவிடக்கூடாது.

சண்முகப்ரியாவின் மரணத்தைத் தொடர்ந்து, கர்ப்பிணிகள், உடல்நலப் பிரச்னையுள்ள மருத்துவர்களுக்குத் தேவையான அளவு விடுப்பு வழங்க மருத்துவத்துறை வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.