Published:Updated:

தென்காசி: கடும் பசியுடன், குளிரில் நடுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்... உதவிய காவலர்கள்!

புதுச்சட்டை அணிந்துகொண்ட  இளைஞர்
News
புதுச்சட்டை அணிந்துகொண்ட இளைஞர்

கோயில் தேர் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் பகலிலும் வெயிலிலும், இரவின் குளிரிலும் பசியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுத்துக்கிடந்திருக்கிறார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கிறார்கள்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்த நல்லூரிலுள்ள மெயின் ரோட்டில் சாலையோரத்தில் கோயில் தேர் நிறுத்தப்பட்டுள்ள பகுதிக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாகக் கிடந்திருக்கிறார். வெயில், குளிர், பசி என எந்த உணர்ச்சியையும் உணராத நிலையில் அவர் அங்கேயே சுருண்டு கிடந்திருக்கிறார்.

சாலையோரம் கிடந்த மனநோயாளி
சாலையோரம் கிடந்த மனநோயாளி

அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு எந்த உதவியும் செய்யாத நிலையில், ரோந்துப் பணிக்காக அந்த வழியாகச் சென்ற இன்ஸ்பெக்டர் காளிராஜன் அவருக்கு உதவியிருக்கிறார். துர்நாற்றத்துடன் ஈக்கள் மொய்த்த நிலையில் கிடந்த அவரைக் கண்டதும் பரிதாபப்பட்ட அவர், உடனடியாக ஸ்டேஷனிலுள்ள காவலர்களை வரவழைத்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அங்கிருந்து தூக்கிச் சென்று அவரைக் குளிக்கவைத்துள்ளனர். நீண்டநாள்களாகக் குளிக்காத அவரின் உடலுக்கு சோப்பு தேய்த்து, நன்கு குளிக்கவைத்த பின்னர் புத்தாடை வாங்கி வந்து அவரை அணியச் செய்திருக்கிறார்கள்.

உதவிய போலீஸ் குழுவினர்
உதவிய போலீஸ் குழுவினர்

பின்னர் அவருக்கு உணவு கொடுத்த கரிவலம்வந்த நல்லூர் காவல்துறையினருக்கு அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவராலும் எதுவும் பேச முடியவில்லை. அதனால் அந்த இளைஞரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் இல்லத்தில் சேர்த்து, உரிய சிகிச்சை கிடைக்கவும், குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ப்பதற்கும் முயன்றுவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனநோயாளிக்கு உதவிய இன்ஸ்பெக்டர் காளிராஜனிடம் பேசியபோது, ``நான் வழக்கமான ரோந்துப் பணிக்காகச் சென்றபோது ஓர் இளைஞர் மோசமான நிலையில் சாலையோரம் கிடப்பதைப் பார்த்தேன். `காவல் பணி என்பது குற்றவாளிகளிடம் கடுமையாக இருக்க வேண்டுமே தவிர சாமான்ய மனிதர்களிடம் அன்புடன் இருக்க வேண்டும்’ என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சார் அடிக்கடி சொல்வார்.

குளிக்கவைத்த போலீஸார்
குளிக்கவைத்த போலீஸார்

அந்த இளைஞரைப் பார்த்ததும் எனக்கு அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனடியாக அந்த இளைஞருக்கு அருகில் சென்று பேசினேன். ஆனால் அவர் எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை. அதனால் காவலர்கள் சிலரையும் உதவிக்கு அழைத்து அவரை அங்கிருந்து தூக்கிச் சென்று உதவினோம். எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்தோம்” என்று சொன்னார்.

கரிவலம்வந்த நல்லூர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில் போஸ்டர்கள் ஆக்கிரமித்திருந்தன. அத்துடன் அவற்றை யாரும் பராமரிக்காததால் குப்பைகள் சூழ்ந்து கிடந்தன. அதையும் காவல்துறையினர் சுத்தப்படுத்தும் பணியைச் செய்தார்கள்.

சுத்தம் செய்யப்பட்ட பேருந்து நிறுத்தம்
சுத்தம் செய்யப்பட்ட பேருந்து நிறுத்தம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உதவி செய்தது, பேருந்து நிறுத்த கட்டடங்களைச் சுத்தம் செய்தது என காவல்துறையினரின் இந்தச் செயல் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதைப் பார்த்த பலரும், காவல்துறையினரை வெகுவாகப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.