Published:Updated:

காபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை! - இது உங்கள் ஊர் சந்தை...

கும்பகோணம் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
கும்பகோணம் சந்தை

AREA MARKET

காபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை! - இது உங்கள் ஊர் சந்தை...

AREA MARKET

Published:Updated:
கும்பகோணம் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
கும்பகோணம் சந்தை
நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் கும்பகோணம். இதன் மையப் பகுதியில் அமைந்துள்ளது சாரங்க பாணி கோயில். மிகவும் பழைமையான இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பெரிய கடைத்தெரு, கீழ வீதி, தெற்கு வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளே கும்பகோணத்தின் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்த பாரம்பர்யம் மிக்க இந்தச் சந்தையில் தாம்பூலத்தில் வைக்கிற வெற்றிலை தொடங்கி கோயில் கோபுரத்தில் வைக்கிற கலசம் வரை அனைத்தையும் நினைக்கிற நேரத்தில் வாங்கி விடலாம்.

சிறிய பூஜையோ, பிரமாண்ட திருமண நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் சரி, ஒற்றை ஆளாக இந்த நான்கு வீதிகளை வலம் வந்தால், குத்துவிளக்கு தொடங்கி, பட்டுப் புடவை, நகை மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் என ஒரு மணி நேரத்துக்குள் குறைந்த விலையில் அனைத்தையும் குஷியாக அள்ளிச் சென்றுவிடலாம் என்ற அளவுக்கு அனைத்துக் கடைகளும் இந்த வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

காபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை! - இது உங்கள் ஊர் சந்தை...

குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணனிடம் பேசினோம். ‘‘உலகம் முழுவதும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்ட சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பகோணம் பகுதி தலைநகரமாகத் திகழ்ந்தது வரலாற்று சிறப்புக்குரியது. கும்பகோணம் வெற்றிலை, பாக்கு, டிகிரி காபித்தூள், திருபுவனம் பட்டுப் புடவை, நாச்சியார் கோயில் குத்து விளக்கு, பித்தளைப் பாத்திரம், ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளிட்டவை புகழ்மிக்கவையாக இருந்து வருகின்றன. இத்தகைய பொருள்கள் மூலம் கடல் கடந்த வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

காபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை! - இது உங்கள் ஊர் சந்தை...

முதல் வருமானவரித் துறை அலுவலகம்...

கணக்கை அடிப்படையாகக் கொண்டதே வணிகம் என்பார்கள். அந்த வகையில், கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊர் என்ற சிறப்புடன் பெரிய அளவில் வியாபாரம் நடைபெற்று வருவதால், வணிகத்துக்கும், கணக்குக்கும் தொடர் புடைய ஊராகவும் திகழ்ந்து வருகிறது. இதன் அடையாளமாக டெல்டா மாவட்டத்திலேயே முதல் வருமானவரித் துறை அலுவலகம் இங்கு தொடங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட சிட்டி யூனியன் பேங்க்கின் தலைமை அலுவலகம் செயல்படுவதும் இதற்குச் சான்றாக உள்ளது.

நான்கு வீதிகளைச் சுற்றி வந்தால்...

சாரங்கபாணி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளை வலம் வந்தால் வீட்டுக்குத் தேவையான கடுகு, வெற்றிலை மண்டி, பூ, மாலை, பழம், காய்கறி, காபிதூள், பூஜை பொருள்கள், நாட்டு மருந்து, பெரிய மற்றும் சிறிய மளிகைக் கடை, பர்னிச்சர், ஜவுளி, குத்து விளக்கு, பித்தளைப் பாத்திரம், பட்டுப் புடவை, எலெக்ட் ரானிக்ஸ், நகைக்கடை என அனைத்துவிதமான கடைகளும் உள்ளன.

காபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை! - இது உங்கள் ஊர் சந்தை...

குடமுழுக்கு விழாவா அல்லது புதுமனை குடிபுகும் விழாவா - இந்த நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருள் எதுவாக இருந்தாலும் இங்கு கிடைக்கும்.இந்த வீதிகளில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத் துக்கு என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கும்ப கோணம் மட்டுமல்ல, அருகில் உள்ள மாவட்டங்களான திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் எனத் தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் இங்கு பொருள்கள் வாங்க வருவதால், தினமும் பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. திருமண மற்றும் விசேஷ தினங்களில் வியாபாரம் இரட்டிப்பாகும்.

இந்த நான்கு வீதிகளிலும் குத்து விளக்கு, சாமி சிலைகள், பட்டுப் புடவை, காபித்தூள் என இங்கு தயாராகும் பொருள்கள் கடல் கடந்து பல நாடு களுக்கு ஏற்றுமதி ஆகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரம், அதற்கேற்ற விலை என எப்போதும் நம்பகத் தன்மையுடன் வியாபாரிகள் செயல்படுவதால் உள்ளூர் தொடங்கி வெளி நாட்டினர் வரை அனைவருக்கும் ஏற்ற சந்தையாகக் கும்பகோணம் திகழ்ந்து வருகிறது’’ என்றார்.

சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

கும்பகோணம் வெற்றிலை

கும்பகோணம் கொழுந்து வெற்றிலை உலகப் பிரபலம். கும்பகோணத்தில் வெற்றிலை மண்டிக் கடை நடத்திவருகிறார் சுரேஷ். அவருடன் பேசினோம். ‘‘இரண்டாவது தலைமுறையாக வெற்றிலைக்கு எனத் தனிக் கடை நடத்தி வருகிறோம். காவிரி ஆற்றங்கரையோரத்தில் விளையும் வெற்றிலை அதிக காரமாக இல்லாமல் தனிச் சுவை யுடன் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருப் பதால், தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது கும்ப கோணம் வெற்றிலை. வெற்றிலை, பூ, காய்கறி என அனைத்துமே கும்பகோணத்தைச் சுற்றியே விளைவதற்கு இந்த மண்ணும் பெரும் காரணமாக இருக்கிறது.

சுரேஷ்
சுரேஷ்

இங்கு விளையும் வெற்றிலை தமிழகத்தின் பல மாவட்டங் களுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் செல்கிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் ரூ.2 லட்சத்துக்குமேல் வியாபாரம் நடைபெறும்’’ என்றார்.

கும்பகோணம் குத்துவிளக்கு

கும்பகோணம் பித்தளைப் பாத்திர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் வேதா.ராமலிங்கத் திடம் பேசினோம். ‘‘நாச்சியார் கோயில் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் குத்து விளக்கு உற்பத்தி செய்யப் படுகிறது. குத்துவிளக்கு விற்பனைக்கென்றே பல தனிக் கடைகள் உள்ளன. அரை அடி தொடங்கி 10 அடி உயரம் வரை குத்துவிளக்கு செய்யப்படுவது இங்கு மட்டும்தான்.

வேதா.ராமலிங்கம்
வேதா.ராமலிங்கம்

ரூ.300-லிருந்து ரூ.40,000 வரை குத்துவிளக்கு கிடைக்கிறது. விளக்குகள் மட்டுமல்லாமல் மரத்தினாலான கொடி மரம், பித்தளைக் கொடி மரம், கோபுரக் கலசம், கதவு, திருவாச்சி, சுவாமி புறப்பாடு வாகனம் எனக் கோயில்களுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் இங்கு கிடைக்கும். இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதேபோல, இங்கு உற்பத்தியாகும் பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் பல மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை வியாபாரம் நடக்கும்” என்றார்.

சாமி சிலை பட்டறைகள்

சாமி சிலைகள் தயார் செய்யும் குமார் ஸ்தபதியிடம் பேசினோம். ‘‘சுவாமிமலையைச் சுற்றிலும் பெரிய, சிறிய அளவிலான பஞ்சலோக சாமி சிலைகள் செய்யக்கூடிய 300-க்கும் மேற்பட்ட பட்டறைகளும், விற்பனைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

குமார்
குமார்

நான்கு இஞ்ச் தொடங்கி 15 அடி வரை சாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இங்கு செய்யப்படும் சாமி சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நேரடியாகவும், இதற்கென உள்ள ஏஜென்ட் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டினர் இங்கு செய்யப்படும் சிலைகளை வாங்கி அழகு சிற்பங்களாகப் பயன்படுத்தி வருவதால், நல்ல மார்க்கெட் இருக்கிறது. ரூ.4,000 முதல் ரூ.18 லட்சம் மதிப்பில் வரை சாமி சிலைகள் உள்ளன. இதன்மூலம் மட்டும் தினமும் ரூ.1 கோடி அளவில் வியாபாரம் நடைபெறும்’’ என்றார்.

திருபுவனம் பட்டுச் சேலை

கும்பகோணத்தின் மற்றுமொரு அடையாளமாகத் திருபுவனம் பட்டு திகழ்கிறது. திருபுவனத்தில் மட்டும் பட்டுப் புடவை விற்பனைக்கு என நூற்றுக்கும் மேற்பட்ட தனிக் கடைகள் உள்ளன. திருமணத் தேதியைக் குறித்துவிட்டு கும்பகோணம் வந்து, பட்டுப் புடவை, வேட்டி சட்டை முதல் சீர்வரிசைப் பொருள்கள் என அனைத்துப் பொருள்களையும் ஒரே ஊரில் வாங்கிச் சென்று விடுகிறார்கள் இந்த ஊர் மக்கள். பட்டுப்புடவையில் மட்டும் தினமும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெறுவதாக இந்தத் தொழிலைச் செய்து வருபவர்கள் சொல்கிறார்கள்.

பாரம்பர்யமிக்க கோயில் நகரத்தில் பல புதுமைகளுடன் பொருள்கள் தயாரிக்கப்படுவதால், கும்பகோணம் விற்பனையில் இன்றும் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிட்ஸ்

டந்த நவம்பர் மாதத்தில் கார் விற்பனை 4% அதிகரித்து உள்ளது. ஆனால், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 21% குறைந்துள்ளது. கார் விற்பனையில் மாருதியும் இரு சக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோ கார்ப்-ம் முதலிடத்தில் உள்ளன!

பிட்ஸ்

கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஆண்டு ரூ.8,27,000 கோடியை பாண்ட் வெளியீட்டின் மூலம் திரட்டி இருக்கிறது. குறைந்த வட்டி, அதிகமான பணப் புழக்கத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக பணம் கிடைத்துள்ளது!