Published:Updated:

மிளகாய் முதல் மீன் வரை... ராமநாதபுரம் மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை...

ராமநாதபுரம் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமநாதபுரம் மார்க்கெட்

AREA MARKET

நீண்ட நெடிய வரலாறு கொண்ட ராமநாதபுரம், பல்வேறு காலகட்டங்களில் முக்கியமானதொரு வியாபாரக் கேந்திரமாக இருந்து வந்திருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன் சேதுராஜன் பேட்டை என்று அழைக்கப்பட்ட பகுதி இன்று நாடார் பேட்டையாகவும், பேட்டை வீதி என்றழைக்கப்பட்ட பகுதி சிகில்ராஜ வீதியாகவும், கோட்டை வாசல் விநாயகர், முருகன் கோயில் பகுதிகள் காய்கறி, மிளகாய் வத்தல் கமிஷன் மண்டிகளாகவும் மாறி, போர்வாள் சத்தம் கேட்ட இடமெல்லாம் இன்று கூவிக் கூவி அழைக்கும் தெருவோர வியாபாரிகளின் குரல் ஒலிக்கும் இடமாகத் திகழ்ந்து வருகிறது. போர் வீரர்களின் 1000 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்ட காவாத்து மைதானம் தங்க வணிகம் நடைபெறும் காசுக்கடை பஜாராகத் திகழ்கிறது. ஆலன் என்ற ஆங்கிலேயர் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) நடத்திய ஆலங்கச்சேரி என்ற பெயர் மருவி அலங்காச்சேரி தெரு என இன்று அழைக்கப்படும் பகுதியின் நீட்சிதான் இன்றைய அங்காடிகள் நிறைந்த சந்தையாக விளங்கும் சாலைத் தெரு.

மிளகாய் முதல் மீன் வரை... ராமநாதபுரம் மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை...

முன்பெல்லாம் திருமண சீர்வரிசை, கட்டுமான பொருள்கள், நல்ல ஆடைகள், வாகனங்கள், தங்க ஆபரணங்கள் என எல்லாவற்றையும் மொத்தமாக வாங்க வேண்டு மென்றால் ராமநாதபுரத்து மக்கள் மதுரைக்கும், கொஞ்சம் வசதி படைத்தவர்கள் சென்னைக்கும்தான் செல்வார்கள். கடந்த பல ஆண்டு களாக அந்த வரலாற்றை மாற்றிய பெருமை ராமநாதபுரத்தின் வியாபார கேந்திரமாகத் திகழும் சாலைத் தெருவுக்கு உண்டு.

மிளகாய் முதல் மீன் வரை... ராமநாதபுரம் மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை...

கிழக்கே ராமேஸ்வரம் தொடங்கி வடக்கில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் மேற்கே பரமக்குடி, தெற்கே சாயல்குடி, கடலாடி என மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தங்களுக்குத் தேவையான ஊசி முதல் கார் வரை வாங்குவதற்கு தேர்வு செய்யப்படும் இடம் இந்த சாலை தெரு ஆகும். கடிகாரம் தொடங்கி அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கட்டில் உள்ளிட்ட ஃபர்னிச்சர் வகைகள் மட்டுமல்ல, எல்லா வகையாக எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

பெரும் நகரங்களில் கிடைக்க கூடிய வகைவகையான தங்க ஆபரணங்கள்கூட இங்குள்ள நகை மாளிகைகளில் கிடைக்கின்றன. விவசாயம், தொழிற்சாலைகள் போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் காரணிகள் ஏதும் இல்லாத நிலையில், வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று கடுமையாக உழைப்பதன் மூலம் ஈட்டப்படும் வருவாயின் விளைவாக நாள் ஒன்றுக்கு ரூ.4 - 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவதே அதற்கு சாட்சி’’ என்றார் ராமநாதபுரம் வர்த்தகச் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜன்.

கோவிந்தராஜன்
கோவிந்தராஜன்

“ராமநாதபுரத்தில் கேணிக்கரை, அரசு மருத்துவமனை சாலை, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதி, பாரதி நகர் எனப் பல இடங்கள் வர்த்தக மையங்களாக வளர்ந்துவந்தாலும், ஒட்டுமொத்த வியாபார மையமாகத் திகழும் ஒரே இடம் சாலைத் தெரு. சாலையோரம் சாக்கு விரித்து கடலை, காய்கறிகள், பழங்கள், பூ, பூண்டு, பணங்கிழங்கு, கீரை, நவதானிய பொருள்கள், மிளகாய், கைகுட்டை, காலணி, ரிப்பன், ஸ்டிக்கர் பொட்டு, சேஃப்டி பின், விளையாட்டு பொருள்கள், செல்போன்கள், சார்ஜர்கள், இடுப்பு பெல்ட்டுகள், அழகு சாதனப் பொருள்கள் என எல்லாவற்றையும் கூறுகட்டி விற்கும் சாலையோர வியாபார இடமாக உள்ள சாலைத் தெருவில் யானை தந்தம், புலிப்பல் தவிர எல்லா பொருள்களும் வாங்க முடியும். வியாபாரம் பெருகிவரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் மட்டும் இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கிறது. பாதாள சாக்கடை அமைக்கப் பட்டாலும் மழைக்காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் கலந்தபடியே கடைகளுக்குள் பாய்கிறது’’ என்றார் பெட்டிக்கடை நடத்தி வரும் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தில் பேக்கரி தொழிலைத் தொடங்கி, இன்று பல்வேறு கிளை நிறுவனங்களுடன், உணவகங்களையும் நடத்திவரும் ராமநாதபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, “நான் ராமநாதபுரத்தில் தொழில் தொடங்க வந்தபோது பால் கூட கிடைக்காது. வெளியிடங்களில் இருந்து இங்கு அரசுப் பணிக்கு வருபவர்களும் முதலில் ஒரு வித அச்சத்துடனேயே வருவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறி, இன்று ஒவ்வொருவரும் தங்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப பொருள்களை வாங்க சிறிய, நடுத்தர, பெரிய என எல்லா வகையிலும் எல்லாக் கடைகளும் நிறைந்துள்ளது. அலங்காரம் நிறைந்த ஹோட்டல்கள், பேக்கரிகளில் கிடைக்கும் திண்பண்டங்களும், தள்ளுவண்டியில் விற்பனையாகும் பாரம்பர்யமான கம்பு, கேப்பைக் கூழ், பருத்திப்பால், சுண்டல் உள்ளிட்ட பழமையான திண்பண்டங்களும் அருகருகே கிடைக்கும்’’ என ராமநாதபுரத்தின் அங்காடிகள் நிறைந்த சந்தை பகுதி குறித்து பெருமிதத்துடன் விவரிக்கிறார்.

வெங்கட சுப்பு
வெங்கட சுப்பு

ராமேஸ்வரம் மீன் சந்தை...

தமிழகத்தின் நீண்ட கடற் பரப்பைக் கொண்டது ராமநாதபுரம். இந்தக் கடல் பகுதியில் உள்ள பாக் நீரிணை பகுதியில் இறால், கணவாய், நண்டு மற்றும் வவ்வால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் இனங்கள் மீனவர்களால் பிடித்து வரப்படுகிறது. இவற்றைக் கொள்முதல் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தரம் பிரித்து அனுப்பு கின்றன. இதில் உலகிலேயே நம்பர் ஒன் வகையாகத் திகழும் ‘மண்டபம் ஃப்ளவர்’ என்ற வகை இறால் இப்பகுதியில் மட்டுமே கிடைக்கக்கூடியது. நாவில் எச்சில் ஊற வைக்கும் ருசி கொண்ட மாசி கருவாடு ‘சூரை’ என்ற மீனிலிருந்து கிடைக்கிறது. இவை அண்டை நாடான இலங்கைக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது. அரசால் விதிக்கப்படும் மீன்பிடி தடைக் காலங்களில்கூட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதால், ஆண்டு முழுவதும் இந்த மாவட்டத்தில் மீன்கள் தடையின்றி விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் மூலம் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் நடப்பதாகச் சொல்கிறார் மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ்.

மிளகாய் சந்தை...

ராமநாதபுரம் என்றாலே மிளகாய்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குக் காரம் நிறைந்த மிளகாய் ரகங்கள் ராமநாதபுரம் அருகே உள்ள உத்தர கோசமங்கை உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராம பகுதிகளில் விளை விக்கப்படுகிறது. இவற்றைப் பாதுகாத்து உரிய விளைக்கு விற்பனை செய்யும் வகையில் மிளகாய் வத்தல் சேமிப்புக் கிடங்கினை அரசு ஏற்படுத்தியுள்ளது.

தேவதாஸ்
தேவதாஸ்

இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் ‘குண்டு மிளகாய்’ என்பது தனி சிறப்பு வாய்ந்தது. மிளகாய்க்கு பெயர் போன ஆந்திராவில் விளையும் மிளகாயைக் குறிப் பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்குக் காரணம், அந்த மிளகாயின் தோல்களை மட்டுமே பயன்படுதலாம். ஆனால், இங்கு விளையும் குண்டு மிளகாயைத் தோல், அதனுள் இருக்கும் விதை என இரண்டையும் பயன் படுத்தலாம். மேலும் ஓராண்டு காலம்கூட இதை வைத்திருந்து பயன்படுத்த முடியும். இத்தகைய மிளகாய் விற்பனைக்கென ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி பகுதிகளில் சந்தைகள் இயங்கி வருகின்றன.

சாயல்குடி கருப்பட்டி

பனைமரங்கள் நிறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைக்கும் பதனீர் மூலம் ருசியான கருப்பட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. சாயல் குடி பகுதிகளில் தயாரித்து விற்கப்படும் கருப்பட்டிகள் தரம் மற்றும் ருசி மிகுந்தவை. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியிடங்களிலிருந்து நாள்தோறும் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கருப்பட்டியைத் தேடிப் பிடித்து வாங்குகின்றனர்.

விமானத்தில் பறக்கும் கீழக்கரை கருப்பட்டி துதல்...

இலங்கையிலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை பகுதிக்கு ராவியத் என்பவரால் இறக்குமதியானது இனிப்பு வகை ‘கருப்பட்டி துதல்’. நாட்டுக் கருப்பட்டியை பாவாகக் காட்சி வடித்து எடுத்து அதனுடன் முதல் தர தேங்காய்ப் பால், ஊற வைத்த ஜவ்வரிசி, இரண்டு நாள் ஊற வைத்து எடுக்கப்பட்ட மைதா பால் ஆகியவற்றுடன் தேவையான சீனி சேர்த்து சுமார் மூன்று மணி நேரம் அடிப் பிடிக்காமல் கிண்டினால் கிடைக்கும் இந்த கருப்பட்டி துதல். அவற்றுடன் சுத்தமான தேங்காய் எண்ணை, ஏலக்காய் பொடி எனச் சேர்த்த அடுத்த ஐந்து நிமிடத்தில் சுடச்சுட திகட்டாத துதலை ருசி பார்க்கலாம்.

ஆக மொத்தத்தில், ராமநாதபுரம் சந்தைகள் படுசுறுசுறுப்பாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன!

கச்சத்தீவு பண்டமாற்று சந்தை!

மீனவர்களின் வாழ்வாதாரத்தில் சர்ச்சையாக இருந்து வருவது கச்சத்தீவு. ஆண்டு முழுவதும் பிரச்னைக்குள்ளாகும் ஒரு பகுதியாக இருந்துவரும் கச்சத்தீவிலும் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா – இலங்கை பொருள்களைப் பறிமாற்றம் செய்துகொள்ளும் சந்தை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்குச் செல்லும் இந்திய பக்தர்கள் இங்கிருந்து புளி, மிளகாய், கடலைமிட்டாய், கைலி ஆகியனவற்றை விற்பனைக்காக எடுத்து செல்வது வழக்கம். இதேபோல, இலங்கையில் இருந்துவருபவர்கள் தேங்காய் எண்ணெய், ராணி சோப்பு, பால் டின் ஆகியவற்றைக் கொண்டு வருவர். இவையாவும், கச்சத்தீவில் வைத்து பறிமாற்றம் செய்துகொள்ளப்படும். பொருள் ஏதும் கொண்டு செல்லாதவர்கள் அதற்கான விலையைச் செலுத்தி வாங்கி திரும்புவர். ஆண்டாண்டு காலமாகச் சுதந்திரமாக நடந்துவந்த இந்தச் சந்தை, சமீப காலமாக அரசின் கெடுபிடிகளால் மறைமுக சந்தையாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது!

பிட்ஸ்

ரூ.3.92 லட்சம் கோடி மதிப்பு ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகளை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஏல முறையின் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது!