Published:Updated:

புதிய பகுதி : ஊசி முதல் ஃபர்னிச்சர் வரை தூள் கிளப்பும் தூத்துக்குடி மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை

AREA MARKET

பிரீமியம் ஸ்டோரி
மிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமான தூத்துக்குடி வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. அனல்மின் நிலையம், உப்பு உற்பத்தி, மீன் பிடித்தல், தீப்பெட்டி ஆகியவை முக்கியத் தொழில்கள். தொழிற்சாலைகளைப் போலவே இங்கும் சிறப்பு பெற்ற சந்தைகள் உள்ளன.

ஊசி முதல் ஃபர்னிச்சர் வரை ஒரே இடத்தில்!

தூத்துக்குடியின் பழைமைவாய்ந்த வ.உ.சிதம்பரம் சந்தை, 1920-ம் ஆண்டு (05.06.1920) சனிக்கிழமைச் சந்தையாக (சனிக்கிழமைகளில் மட்டும் செயல்படும்) தொடங்கப்பட்டது. 1938-லிருந்து (12.03.1938) இது தினசரி செயல்படும் சந்தையாக மாறியது. தற்போது தூத்துக்குடி மாநகராட்சி யின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பொதுவாக, சந்தை என்றாலே காய்கறிகள் வாங்கும் இடமாகத்தான் இருக்கும். ஆனால், இந்தச் சந்தையில் இல்லாத பொருளே இல்லை என்று சொல்லலாம்.

புதிய பகுதி : ஊசி முதல் ஃபர்னிச்சர் வரை தூள் கிளப்பும் தூத்துக்குடி மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை

வ.உ.சிதம்பரம் சந்தையின் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயல் தலைவர் சந்தனராஜிடம் பேசினோம், ‘‘இந்தச் சந்தையில் மொத்தம் 650 கடைகள் இருக்கு. மூணாவது தலைமுறையாக வியாபாரம் செஞ்சுட்டு வர்றோம். காய்கறிகள், பழங்கள், இலை, பூ, அரிசி, பலசரக்கு மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மண் பாண்டங்கள், ஃபேன்சி பொருள்கள், மீன், கருவாடு, இறைச்சி வகைகள், உணவுத் தானியங்கள், பழைய இரும்புப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ஜவுளிகள், செல்லப் பிராணிகள், பேக்கரி, புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபர்னிச்சர்ஸ், நாட்டு மருந்துப் பொருள்கள் என இங்கு கிடைக்காத பொருள்களே கிடையாது.

ஒரு மணி நேரத்தில்..!

ஒரே இடத்தில் அத்தனை பொருளையும் வாங்கலாம். மாவட்டத்தின் பல ஊர்கள்ல இருந்தும் தினமும் 1,000 முதல் 2,000 பேர் சாமான்கள் வாங்க வர்றாங்க. இதனால், லிஸ்டில் குறிப்பிட மறந்த பொருளும் இங்கு சந்தையைச் சுற்றி வரும்போதே நினைவுக்கு வந்துவிடும். காலையில 10 மணிக்கு பொண்ணு மாப்பிளையை முடிவு செஞ்சா எல்லா சாமானையும் இங்கேயே வாங்கி 12 மணிக்குள்ள கல்யாணத்தை முடிச் சிடலாம்னு சொல்லுவாங்க. பொங்கல் பண்டிக்கைக்கு சீதனம் கொடுக்குற வங்களும் எந்தப் பதற்றமும் இல்லாம ஒரு மணிநேரத்துல எல்லாப் பொருள்களையும் வாங்கிடுவாங்க. பொதுவா, சீதனச் சாமான்கள் வாங்குறதுக்கு நாலஞ்சு மணி நேரம் ஆகும். ஆனா, இங்க அதிகபட்சமா ஒரு மணி நேரத்துல வாங்கி வண்டியில ஏத்திடலாம்.

புதிய பகுதி : ஊசி முதல் ஃபர்னிச்சர் வரை தூள் கிளப்பும் தூத்துக்குடி மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை

தின வருமானம் ரூ.10 லட்சம்..!

தினமும் ரூ.10 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. பண்டிகைக் காலங்களில் விற்பனை இரண்டு, மூன்று மடங்காகும். சில காய்கறிச் சந்தைகளில் ஒரு கிலோவுக்குக் குறையாமல் காய்களை வாங்க முடியாது. ஆனால், இங்குள்ள காய்கறிக் கடைகளில் குறைந்தபட்சம் கால் கிலோ முதல் வாங்க முடியும். இங்கு தேவையான காய்கறிகளை வாங்குவோரே பார்த்துப் பார்த்து வாங்கலாம். முக்கியமாக, பட்ஜெட்டுக்குள் லிஸ்டிலுள்ள பொருள்களை வாங்கிச் செல்ல முடியும். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சின்னச் சின்ன சந்தைகள் இருந்தாலும், இந்தச் சந்தைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிச்சுட்டேதான் இருக்கு” என்றார்.

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரத்தில் சனிக்கிழமைதோறும் இயங்கிவரும் ஆட்டுச்சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்றது. கன்னி, கொடி, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப் போர், பட்டிணம், கச்சைக்கட்டி, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சேலம் கறுப்பு, கோயமுத்தூர் குரும்பை என பலவித இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையிலும் நல்ல லாபம் கிடைக்கிறது என்பதால், தூத்துக்குடி மட்டும் இல்லாமல் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடு விற்கும் வியாபாரி களும் பொதுமக்களும் இங்கு கூடுகிறார்கள்.

புதிய பகுதி : ஊசி முதல் ஃபர்னிச்சர் வரை தூள் கிளப்பும் தூத்துக்குடி மார்க்கெட்! - உங்கள் ஊர் சந்தை

இங்கு விற்பனையாவதில் வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கைதான் அதிகம். வாரம்தோறும் 1,500 முதல் 2,500 ஆடுகள் வரை விற்பனை ஆகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாள்களில் விற்பனை யாகும் ஆடுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகும். ஆட்டின் எடையைப் பொறுத்து குறைந்த பட்சம் ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை விறபனையாகிறது. வாரம்தோறும் ரூ.2 கோடி வரையிலும் பண்டிகை நாள்களில் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறுகிறது.

உடன்குடி கருப்பட்டி மார்க்கெட்..!

கருப்பட்டி என்றாலே சட்டென அனைவரின் நினை வுக்கும் வருவது `உடன்குடி’தான். சர்க்கரைக்கு மாற்றுப் பொருளா கவும், மருந்துப் பொருளாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது பதனீரைக் காய்ச்சி கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, சுக்குக்கருப்பட்டி ஆகியவை உற்பத்தி செய்யபடுகின்றன.

சந்தனராஜ்
சந்தனராஜ்

கருப்பட்டியைப் பயன்படுத்தி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பால்கோவா ஆகிய இனிப்பு பதார்த்தங்களும் மதிப்புகூட்டி தயார் செய்யப்படுகின்றன.

உடன்குடி சந்தைக்குள் நுழைந்தாலே கருப்பட்டி வாசம் வீசும். கருப்பட்டி உற்பத்தி யாளரும், உடன்குடி வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான ரவியுடன் பேசினோம்.

‘‘மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள்தான் கருப்பட்டிக்கான உற்பத்தி சீஸன். உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் 600 கருப்பட்டி உற்பத்தி யாளர்கள் உள்ளனர். சீஸனில் மாதத்துக்கு 50 முதல் 75 டன்னும், மற்ற மாதங்களில் 30 முதல் 40 டன்னும் விற்பனையாகிறது. ஒரு கிலோ கருப்பட்டி சீஸனில் ரூ.280 முதல் 300 வரையிலும், மற்ற மாதங்களில் ரூ.350 முதல் 380 வரையிலும் விற்பனையாகிறது. உடன்குடியிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி யாகிறது” என்றார்.

ரவி
ரவி

எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் உலகம் பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ்!

தூத்துக்குடியில் பள்ளிவாசல் காம்ப்ளஸ் என்றால் மிகப் பிரபலம். இங்கு 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாதாரண டிவி ரிமோட் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்து வகையான உதிரிபாகங்களும் கிடைக்கும். ஜவுளிகள், வெளி நாட்டு இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றையும் வாங்கலாம். அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று. தினமும் ரூ.3 முதல் 5 லட்சம் வரையிலும், பண்டிகை நாள்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேலும் வர்த்தகம் நடைபெறுகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தூத்துக்குடி உப்பு..!

தூத்துக்குடியின் அடுத்த முக்கியமான சந்தை உப்புச் சந்தை. இந்த மாவட்டத்தில் 20,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உப்பில், பருமணி (கல் உப்பு), சிறுமணி (பொடி உப்பு), தூள் உப்பு (தூளாக்கியது) என மூன்று வகைகள் உள்ளன. இதில், ‘சிறுமணி’ என்ற வகை பொடி உப்பு இயற்கையாகவே இங்கு விளைவதாலும், அதிக வெண்மை நிறம் உடையது என்பதாலும் தூத்துக்குடி உப்புக்கு தனி மவுசு உண்டு. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில், தரமான ஒரு டன் பருமணி உப்பு ரூ.1,200-க்கும், சிறுமணி உப்பு ஒரு டன் ரூ.1,500-க்கும், தூள் உப்பு ஒரு டன் ரூ.1,800-க்கும், Free Flow உப்பு ஒரு டன் ரூ.2,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்திக்கு ஏற்ப விலைகளில் ஏற்ற, இறக்கம் உண்டு. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இந்தச் சந்தைகள் அந்த நகரின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம்!

பிட்ஸ்

சேவைத் துறையில் இரண்டாவது மாதமாக வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது. அக்டோபரை விட நவம்பரில் வேலைவாய்ப்பு கொஞ்சம் குறைந்தாலும் அதற்கான குறியீடு 53.7 என்கிற அளவில் இருக்கிறது!

பிட்ஸ்

டந்த ஏப்ரல் - செப்டம்பர் மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 17.84% குறைந்துள்ளது. எனினும், 2025-ல் நம் நாட்டிலிருந்து 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு