Published:Updated:

ஊக்கு முதல் பேக் வரை... சகலமும் கிடைக்கும் வேலூர் மார்க்கெட்! - கோட்டை நகரின் வணிக வீதிகள்...

வேலூர் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலூர் மார்க்கெட்

A R E A M A R K E T

வரலாற்றுச் சிறப்புகள் அதிகமுள்ள நகரம் வேலூர். இதன் இதயப் பகுதியாக விளங்கும் லாங்கு பஜாரில்தான் மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் நடக்கிறது. வெளியூரிலிருந்து அரிசி, பருப்பு, மிளகாய் உட்படப் பலவிதமான மளிகைப் பொருள்கள் இங்கு கொண்டுவரப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்கெட்டுக்கு வந்துசெல்கிறார்கள். லாங்கு பஜாரில் சுண்ணாம்புக்கார வீதி, ஷாரப் கடை வீதி, பேரி சுப்பிரமணிய சாலை, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் பலவிதமான கடைகள் இயங்குகின்றன. இங்கு அனைத்துவிதமானப் பொருள்களும் கிடைக்கின்றன.

லாங்கு பஜாரின் கடைப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மூங்கில் மண்டி செயல்பட்டுவருகிறது. மெல்லியது, தடிமனானது, குட்டையானது, உயரமானது என 70 ரக மூங்கில்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. மூங்கிலால் வேயப்படும் வீடுகள் கோயில் கோபுரங்கள் போன்று காட்சியளிக்கும் என்பதால், மூங்கில் மண்டிக்கு எப்போதுமே கூடுதல் மவுசு இருக்கிறது.

வேலூர் மார்க்கெட்
வேலூர் மார்க்கெட்

ரொட்டிக்காரத் தெரு...

லாங்கு பஜாரை ஒட்டியபடி அமைந்துள்ள ரொட்டிக்காரத் தெருவில் மக்கள் நடமாட்டம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். கிராமங்களிலும், நகரின் பல இடங்களில் பெட்டிக்கடை, பலசரக்குக் கடை வைத்திருப்பர்கள் இங்குவந்து பொருள்களை வாங்கிச் செல்வதை 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

ஒரு காலத்தில் ரொட்டி தயாரிப்பவர்களும், அதை வியாபாரம் செய்பவர்களும் இந்த தெருவில்தான் அதிகம் இருந்தார்கள். 1875-ம் ஆண்டில், டி.வி.வரதராஜி என்பவர் ‘எக்சல்’ என்ற ரொட்டிக் கடையை முதன் முதலில் தொடங்கினார். அதன் பின்னர், வரிசையாக ஏராளமான ரொட்டி தயாரிக்கும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால்தான் ரொட்டிக்காரத் தெரு என்று பெயர் வந்தது. இப்போது, பெயர் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. ரொட்டி தயாரிப்புத் தொழில் நலிவடைந்துவிட்டது. ஆனாலும், சால்ட் பட்டர், ஸ்டாபெரி, கேழ்வரகு, கிரீம் பிஸ்கட்கள், ரஸ்க் உள்ளிட்டப் பொருள்களைத் தயாரித்து டீக்கடை, பெட்டிக்கடை வாடிக்கையாளர் களைத் தொடர்ந்து தன்வசப்படுத்தி வருகிறது, ரொட்டிக்காரத்தெரு.

மண்டித்தெருவில் அரிசி, பருப்பு, நவதானிய மொத்த விற்பனை கடைகளும் அதிகம் உள்ளன. அருகில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப் படுகிறது. மீன், இறைச்சி வாங்க வேண்டுமெனில், பெங்களூரு ரோட்டில் உள்ள மக்கான் பகுதியில் இயங்கிவரும் மார்க்கெட்டுக்குத்தான் செல்ல வேண்டும். இந்த மீன் மார்க்கெட்டில் மட்டும் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. மண்டித்தெருவில் ஞாயிறன்று நடைபெறும் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதும். ஏனெனில், இரும்புச் சாமான் பொருள்களும், வாகனங்களின் உதிரிபாகங்களும் இரண்டாம் விற்பனைக்கு கிடைக்கும்.

‘‘உணவுப் பொருள்களின் சங்கிலி யாக மண்டித்தெரு விளங்குகிறது. இதன் ஒரு பகுதியில்தான் நவதானிய மண்டியும் இயங்கிவருகிறது. சர்க்கரை, பருப்பு, மைதா, ரவை என நாள்தோறும் ஐந்து லாரிகளில் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆரம்பக் காலத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வேலூர் மார்க்கெட்டு தான் பெயர் பெற்றிருந்தது. காலப்போக்கில் வியாபாரி களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இருந்தபோதும், நவதானிய மண்டிக்கு மவுசு குறைய வில்லை’’ என்கிறார் பி.கே.எஸ் டிரேடர்ஸ் நவதானிய கடை உரிமையாளர் கோட்டீஸ்வரன்.

‘‘நேதாஜி மார்க்கெட், பிரிட்டிஷ் ஆட்சியின்போது குதிரை கட்டுகிற இடமாக இருந்தது. காலப்போக்கில் காய்கறி மொத்த வியாபார சந்தையாக மாறிவிட்டது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இஞ்சி மட்டும் கேரளாவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி வியாபாரக் கடைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்த வேலூர் மக்களும் இங்குதான் காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்’’ என்று விவரிக்கிறார் காய்கறிகளின் மொத்த வியாபாரி சுனில்குமார்.

கோட்டீஸ்வரன்
கோட்டீஸ்வரன்
சுனில்குமார்
சுனில்குமார்

வேலூரில் ஓர் சிங்கப்பூர்...

வேலூரின் பிரபலமான இடங்களில் அண்ணா கலையரங்கம் அருகிலுள்ள பர்மா பஜாரும் ஒன்று. வெளிநாட்டுப் பொருள்களான வாசனைத் திரவியம், டி.வி, லைலான் ஆடைகள், வெல்வெட் துணிகள், வாட்ச், ரேடியோ, டேப் ரெக்கார்டு, கால்குலேட்டர் போன்றவை வேலூரில் கிடைப்பது கடினம். பணம் படைத்தவர்கள் இந்த மாதிரியான பொருள் களை வாங்க பர்மா பஜாரைத்தான் நாடுவார்கள்.

சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்துகொண்டு வரப்பட்ட பொருள்கள் இங்கே விற்பனை செய்யப் பட்டு வந்தன. ஊக்கு முதல் பேக் வரை வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள் களும் கிடைத்த பர்மா பஜாரில், இன்று துணிக்கடைகள் மட்டுமே இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில், சாதாரண மக்கள் கூட்டம் கூட்டமாக பர்மா பஜாருக்கு வந்து புத்தாடைகளை எடுத்துச் செல்கிறார்கள். பெரிய பெரிய ஷோரூம்கள் வந்துவிட்ட நிலையிலும் பர்மா பஜாருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

சாரதி மாளிகை...

வேலூர்வாசிகளிடம் சாரதி மாளிகை படு ஃபேமஸ். 1959-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் மார்க்கெட் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. இதைத் தொடர்ந்து, தரைதளத்துடன் இரண்டு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு 1970-ம் ஆண்டு அப்போதைய வேலூர் எம்.எல்.ஏ மா.பா.சாரதியின் பெயர் சூட்டப்பட்டது. அனைத்து வகையான எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட் ரானிக்ஸ் பொருள்களும் குறைந்த விலையில் கிடைப்பதால், சாரதி மாளிகை சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. உயர் ரக செல்போன் களுக்கான உதிரிபாகங்கள்கூட எளிதில் கிடைக்கிறது. இதனால், இரவு கதவை அடைக்கும் வரையில் சாரதி மாளிகையில் உள்ள கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.

வேலூர் மார்க்கெட்
வேலூர் மார்க்கெட்

கற்சட்டி கலாசாரம்...

வேலூரின் ‘கற்சட்டி’ கலா சாரத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பது சூளைமேடு பகுதி. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூன்று தலைமுறைக்கும் மேலாக மண்பாண்டத் தொழிலைச் செய்துவந்தனர். அடுப்பு, கல் சட்டி, பானை, பூ தொட்டிகள் என விதவிதமான மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விற்பனை செய்துவந்தனர். நாளடைவில் இத்தொழில் நலிந்துவிட்டது. இருந்தபோதும், இன்றைக்கும் சிலர் மண்பாண்டத் தொழிலை கைவிடாமல் செய்து வருகிறார்கள்.

வேலூர் மார்க்கெட்
வேலூர் மார்க்கெட்

பொய்கைச் சந்தை...

வேலூர் அருகே உள்ள ‘பொய்கை’ கிராமத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் மாட்டுச் சந்தை, வட தமிழக விவசாயிகளிடம் மிகப் பிரபலம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்வேறு இனக் கறவைமாடுகளும் காளைகளும் விற்பனைக்காக இங்கு கொண்டுவரப்படுகின்றன.செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் 2 கோடி ரூபாய்க்குமேல் வணிகம் நடக்கிறது என்றால் எவ்வளவு பெரிய சந்தையாக இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

முள்கத்திரி, கொய்யாக் காய்க்கு டிமாண்ட்...

இளவம்பாடி முள் கத்திரிக்காய் என்றால் தனி ருசி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, வெளியூர்வாசிகளும் இளவம்பாடி ஊருக்கு தேடிப்போய் முள் கத்திரிக்காயை வாங்கிச் செல்கிறார்கள்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் இளவம்பாடி கத்திரிக்காய்க்கு டிமாண்ட் இருக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்ததாகவும் இந்த முள் கத்திரிக்காய் பார்க்கப்படுகிறது. இளவம்பாடி ஊர் பொய்கைக்கு அடுத்து உள்ளது.

அதேபோல், ஒடுகத்தூர் கொய்யாக்காய் என்றால் பழப்பிரியர்களுக்கு அவ்வளவு விருப்பம். தேங்காய் அளவுக்கு கொய்யாக் காய் பெரிதளவு காய்க்கிறது. கொய்யா பழத்தின் விதைகளும் நறுநறுவென இல்லாமல் மிருதுவாக இருப்பதும் தனிச் சிறப்புக்குக் காரணம். வேலூர் மார்க்கெட்டுகளிலும் ஒடுக்கத்தூர் கொய்யாப்பழம் என்றால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்வதுமுண்டு!