Published:Updated:

`பால் வாங்கக்கூட வழியில்லாத பாவைக்கூத்து கலைஞர்கள்' -முகக்கவசம் விற்று உதவும் நெல்லை இளைஞர்

பேருந்தில் முகக்கவசம் விற்கும் பாப்புராஜ்
பேருந்தில் முகக்கவசம் விற்கும் பாப்புராஜ்

பாவைக்கூத்து மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளைச் சொல்லி பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள், பசியால் வாடுவதை அறிந்த இளைஞர் ஒருவர், தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார். 

நெல்லை மாவட்டம் கொங்கந்தான்பாறை கிராமத்தில் 25 குடும்பத்தினர் குடிசை அமைத்துத் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த தொழில், பாவைக்கூத்து. மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்டு சுவாரஸ்யமாகக் கதை சொல்லி பார்வையாளர்களைப் பரவசப்படுத்துவது இவர்களின் வழக்கம்.

பாவைக்கூத்து கலைஞர்கள்
பாவைக்கூத்து கலைஞர்கள்

கோயில் விழாக்கள், பள்ளிகள், அரசு விழாக்கள் போன்றவற்றில் கதை சொல்வதைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வாதாரம் கொரோனா பாதிப்பு காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ளது. தொழில் இல்லாததால் உணவுக்குக்கூட சிரமப்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாவைக்கூத்து கலைஞர்களுக்கு உதவும் வகையில் நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்ற இளைஞர், பொது இடங்களில் முகக்கவசம் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் தொகையை பாவைக்கூத்து கலைஞர்களுக்கு வழங்க இருக்கிறார். 

முகக்கவசம் வாங்கும் காவல்துறை துணை ஆணையர் சரவணன்
முகக்கவசம் வாங்கும் காவல்துறை துணை ஆணையர் சரவணன்

இதுகுறித்து பாப்புராஜ் கூறுகையில், ”கொங்கந்தான்பாறை பகுதிக்குச் சென்றிருந்தபோது, இந்த கூட்டத்தினரைச் சந்தித்தேன். உணவுக்குக்கூட வழியில்லாத நிலையில் இருந்த அவர்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து உதவி செய்தேன். என் குழந்தைகள், பொம்மைகள் வாங்க வைத்திருந்த பணத்தில் அவர்களுக்கு உதவிப் பொருள்கள் வாங்கிக்கொடுத்தேன்.

ஏற்கெனவே, அவர்களின் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, காய் கறிகள், மளிகைப் பொருள்கள் கொடுத்திருந்தேன். ஆனால், அவை தீர்ந்துவிட்ட நிலையிலும் அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான தொழிலுக்குச் செல்ல முடியாததால் சிரமப்பட்டு வருகிறார்கள். 

சாலையில் முகக்கவசம் விற்பனை
சாலையில் முகக்கவசம் விற்பனை

பாவைக்கூத்து கலைஞர்களுக்கு உதவும் வகையில் மாஸ்க் விற்பனை செய்துவருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் விற்பனை செய்தபோது பெரியவர் ஒருவர் 1,000 ரூபாய் கொடுத்தார். மாஸ்க் விற்பனை மூலம் கிடைத்த பணத்துடன் நண்பர்களின் உதவியையும் பெற்று அவர்களுக்குக் கொடுக்க இருக்கிறேன்” என்றார்.

பாவைக்கூத்து கலைஞர்களான கணேசன், ராஜா ஆகியோர் கூறுகையில், ”எங்களுக்கு பாவைக்கூத்து தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இப்போது கோயில் விழாக்கள் எதுவும் இல்லாததால், எங்களுக்குத் தொழில் இல்லை. அதனால் குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட பணம் இல்லாமல் இருக்கிறோம்.

பாவைக்கூத்துக்கான தோலில் வர்ணம் தீட்டும் கலைஞர்
பாவைக்கூத்துக்கான தோலில் வர்ணம் தீட்டும் கலைஞர்

ஊரடங்கு காலத்தில் சிலர் எங்களுக்கு உதவி செய்ததால் இப்போது உயிரோடு இருக்கிறோம். இல்லாவிட்டால் பசியால் செத்திருப்போம். இப்போதும்கூட ஒரு நேரம் மட்டுமே சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு மட்டும் சாப்பாடு கொடுக்கிறோம். மக்களை மகிழ்விக்கும் எங்களின் வாழ்க்கை சோகத்தில் இருக்கிறது” என்று வருத்தப்பட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு