கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

டிக் டாக்கிற்கு வந்த சோதனை!

டிக் டாக்கிற்கு வந்த சோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
டிக் டாக்கிற்கு வந்த சோதனை!

சீன நிறுவனம் என்பதால் அதைச் சூழும் குழப்பங்கள் பல.

இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என அனைத்துப் பெரிய டெக் நிறுவனங்களுமே பார்த்துப் பொறாமைப்படும் ஒரு மொபைல் ஆப் டிக் டாக். 100 கோடிக்கும் அதிகமான மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களின் இன்றைய ராஜாமீதுதான் ஒரு போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. அது ‘ரேட்டிங் போர்.’

ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஒவ்வொரு செயலிக்கும் அதைப் பயன்படுத்தியவர்கள் ரேட்டிங் கொடுக்கலாம். இது அதன்பிறகு அந்தச் செயலியை டவுன்லோடு செய்யப் போகிறவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது, டிக்டாக்கின் ரேட்டிங் ஓவர்நைட்டில் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.5 ரேட்டிங் வைத்திருந்த டிக் டாக் செயலியின் தற்போதைய ரேட்டிங் 1.3. அது மட்டுமல்லாமல், #BanTikTok என டிக் டாக்கைத் தடைசெய்ய வேண்டும் என்ற குரலும் சமூக வலைதளங்களில் வலுக்கத்தொடங்கியிருக்கிறது. சர்ச்சைகள் டிக் டாக்கிற்குப் புதிதல்ல. ஆபாசப் பதிவுகள் அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்காக ஏற்கெனவே ஒரு முறை டிக் டாக் தடைசெய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், இந்த ரேட்டிங் கலவரம் புதுசு.

இப்போது என்ன சர்ச்சை? இது வட இந்தியாவில் ஆரம்பித்தது. சில மாதங்களாகவே அங்கு யூடியூப் கிரியேட்டர்களுக்கும் டிக் டாக் கிரியேட்டர்களுக்கும் ஒரே தகராறாகத்தான் இருந்துவருகிறது. இரு தரப்பினரும் வீடியோக்கள் மூலம் மாறி மாறித் திட்டிக்கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் சில நாள்களுக்கு முன் இந்திய டிக் டாக் பிரபலமான அமீர் சித்திக் “டிக் டாக் கிரியேட்டர்களிடம் இருக்கும் ஒற்றுமை யூடியூப் பாய்ஸுக்குக் கிடையாது” என வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில் யூடியூப் பிரபலமான கர்ரி மினாட்டியை (CarryMinati) இமிட்டேட் செய்தது மட்டுமல்லாமல் இன்ஸ்டாவில் அவரை டேக் செய்தும் வம்புக்கு இழுத்தார். இதைப் பார்த்து கர்ரி மினாட்டி ‘Youtube v Tik Tok: The End’ என்ற வீடியோவில் அமீர் சித்திக்கையும் டிக் டாக் பிரபலங்களையும் வறுத்தெடுக்க, அது செம வைரல். வெளியான ஓரிரு நாள்களிலேயே கோடிக்கணக்கான மக்களைச் சென்றுசேர்ந்தது அந்த வீடியோ. அந்த வீடியோவுக்குப் பிறகு மட்டும் சுமார் 80 லட்சம் புதிய சப்ஸ்கிரைபர்ஸ் கர்ரி மினாட்டிக்குக் கிடைத்தனர். கர்ரி மினாட்டியின் கருத்துக்கு ஆதரவாக ஒரு அணி சேர்ந்தது. ‘இப்படியே பேசிட்டிருந்தா எப்படி, அடிச்சுக் காட்டுவோம்’ என அந்த அணி நேராகக் கிளம்பியது ப்ளே ஸ்டோருக்குத்தான். இப்படித்தான் டிக்டாக் ரேட்டிங்கைக் குறைத்திருக்கிறார்கள்.

டிக் டாக்கிற்கு வந்த சோதனை!

இப்படியான வெட்டிச்சண்டை ஒருபக்கம் இருக்க, இன்னொரு சீரியஸ் சர்ச்சையிலும் சிக்கியது டிக் டாக். அதற்குக் காரணம் அமீர் சித்திக்கின் சகோதரர் பைஸல் சித்திக். டிக் டாக்கில் சுமார் 1.34 கோடி பேர் பின்தொடரும் பைஸல் வெளியிட்ட ஒரு வீடியோ பெண்கள் மீதான ஆசிட் வீச்சைத் தூண்டுவதாக இருக்கிறது எனக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. “யாருக்காக என்னை விட்டுட்டுப் போனியோ, அவன் உன்னை விட்டுட்டுப் போய்ட்டானா?” எனக் கேட்டு ஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவது போல முடிகிறது, சில நொடிகளே ஓடும் இந்த வீடியோ.

“அது தண்ணீர்தான், நான் அதை வீசுவதற்கு சில நொடிகளுக்கு முன்கூட அதைக் குடிப்பதாக வீடியோவில் இருக்கும். அதைக் கட் செய்து வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்கள்” என பைஸல் சித்திக் தரப்பில் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. ஆனால், ‘வெறும் தண்ணீராக இருந்தால் பெண்ணுக்கு ஏன் வடுக்கள் இருப்பதுபோல் மேக்-அப் போட வேண்டும்?’ என லாஜிக் கேள்வி கேட்டால் ஜகா வாங்கிவிடுகிறார்கள். இந்தப் பிரச்னை தேசிய பெண்கள் ஆணையத்தின் காதுகளை எட்ட, வீடியோவை உடனே நீக்கவேண்டும் என்ற புகார் டிக் டாக்கிற்குப் பறந்தது. தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை அனுமதிக்கிறது டிக் டாக் என #BanTikTok ஹேஷ் டேக்கில் மற்ற நெட்டி சன்களும் ஒன்றுதிரண்டனர். இது தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. கர்ரி மினாட்டி ஆதர வாளர்களுடன் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் ஆப்பிற்கு இவர்களும் 1 ஸ்டார் ரேட்டிங் கொடுக்க ஆரம்பித்தனர்.

 பைஸல் சித்திக்,  கர்ரி மினாட்டி
பைஸல் சித்திக், கர்ரி மினாட்டி

இந்த டிரெண்ட் காட்டுத்தீப் போலப் பரவ, காரணம் தெரியாதவர்களும்கூட ஜாலியாக ப்ளே ஸ்டோர் பக்கம் சென்று டிக் டாக் ரேட்டிங்கில் ஒரு குத்து குத்திவிட்டு வந்தனர். பலருக்கும் இந்த லாக்டௌனில் வச்சு செய்ய அளவெடுத்து வைத்ததைப்போல் சிக்கியது டிக் டாக். ப்ளே ஸ்டோர் கமென்ட் பாக்ஸில் நம் மக்கள் செய்யும் வேற லெவல் கலாட்டாவைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். நெட்டிசன்களின் டிரெண்ட் ஒரு பக்கம் இருந்தாலும், ரேட்டிங் குறைந்த காரணத்திற்காக டிக் டாக் தடைசெய்யப்படப் போவதில்லை.

ஆசிட் வீச்சு மட்டுமல்ல சாதிய வன்முறை, தீவிரவாதம், மதப் பிரிவினை எனப் பல வீடியோக்கள் டிக் டாக்கில் வைரலாகின்றன. இவற்றையெல்லாம் டிக் டாக் முறையாக நீக்குவதே இல்லை. மற்ற பெரு நிறுவனங்கள் கவனமாக இருக்கும் விஷயங்களில்கூட அனைத்துத் தரப்பு மக்களைப் பெருமளவில் வைத்திருக்கும் டிக் டாக் கோட்டை விடுகிறது. இது கண்டிக்கத்தக்கதுதான். டேட்டா ப்ரைவசி சிக்கல்கள் பற்றித் தனியாகப் பேசவேண்டியதில்லை. சீன நிறுவனம் என்பதால் அதைச் சூழும் குழப்பங்கள் பல.

டிக் டாக்கிற்கு வந்த சோதனை!

டிக்டாக்தான் பிரச்னையா? டிக்டாக்கில் ஹிட் அடிக்கும் பெரும்பாலான வீடியோக்களை டவுன்லோடு செய்து யூடியூபிலும் ட்விட்டரில் ஃபேஸ்புக்கிலும்கூடதான் அப்லோடு செய்கிறார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. ஆனால், ரத்தம் தெறிக்கும் வீடியோ என்றால் யூடியூப் அதற்குப் பணம் தராது. ஃபேஸ்புக் அதை நீக்கிவிடும். இப்படிப் பல பாதுகாப்பு வளையங்கள் அங்குண்டு. டிக்டாக்கில் அவை இருக்கிறதா என்பது முக்கியக் கேள்வி.

உண்மையில் இன்று பல க்ரியேடிட்டிவ்வான வீடியோக்கள் வருவது டிக் டாக்கில்தான். அதுதான் மற்ற சமூக வலைதளங்களில்கூட வைரலாகிறது. எந்தப் பாகுபாடுமின்றி எளிய மக்களுக்கும் தங்கள் கற்பனைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கும் ஒரு தளமாக டிக் டாக் இன்று இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது மட்டுமே நடக்கும் தளமாக இருப்பதற்கு டிக் டாக் இன்னும் மெனக்கெட வேண்டும்.

தங்கள்மீது நடத்தப்பட்டிருக்கும் போரில் டிக்டாக் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு அவசியமான விஷயம் இதுதான். மற்றபடி இந்த ரேட்டிங்கெல்லாம் அடிக்கடி நெட்டிசன்கள் செய்யும் டைம்பாஸ்தான்.

டிக் டாக்கிற்கு வந்த சோதனை!

இந்த சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்த டிக் டாக் தரப்பு, “டிக் டாக்கை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு தளமாக வைத்திருப்பதே எங்கள் முன்னுரிமை. எங்கள் ‘Term of Service and Community Guidelines’-ல் தெளிவாக எந்த மாதிரியான விஷயங்களெல்லாம் எங்கள் தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் இந்த வீடியோவையும் நீக்கியுள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், எந்த ஒரு அழுத்தமும் இல்லையென்றால் டிக் டாக் இதைச் செய்திருக்குமா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.