தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

137 வாழைப்பழம், 6 கிலோ நூடுல்ஸ்... ‘சூரி’க்கே டஃப் கொடுக்கும் யூடியூபர்!

யுக்க கினோஷிடா
பிரீமியம் ஸ்டோரி
News
யுக்க கினோஷிடா

அவர் வயதுப் பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 2,000 கலோரி உணவை எடுத்துக்கொள்வார்கள் என்றால் இவர் 23,000 கலோரி வரை எடுத்துக்கொள்கிறார்

“சும்மா சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்குற...”, “சாப்பிடுறதைத் தவிர வாழ்க்கைல ஏதாவது உருப்படியா செய்யுறியா?” - யார் மீதாவது வசைச்சொற்களை பிரயோகிக்கும்போது சாப்பாட்டையும் துணைக்கு அழைத்துக்கொள்வோம். ஆனால், சாப்பிடுவதையே தன் கரியராக மாற்றி, யூடியூப் சேனலையும் தொடங்கி பிரபலமாகியிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த யுக்க கினோஷிடா.

‘சாப்பிடும் புரொஃபஷனல் போட்டியாளர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் கினோஷிடா ஆரம்பத்தில் ஜப்பானில் பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் சாப்பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். 100 பர்கர்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு 2014-ம் ஆண்டு தன் யூடியூப் சேனலை (Yuka Kinoshita) தொடங்கினார். பெரும்பாலும் ஆண்களே கலந்துகொள்ளும் சாப்பாட்டுப் போட்டிகளில் ஒரு பெண்ணாக டஃப் கொடுக்கிறார் கினோஷிடா. 36 வயதான இவர் ஜப்பானிய உணவுகள் மட்டுமன்றி இந்தியா, தைவான், மெக்ஸிகோ, கொரியா எனப் பன்னாட்டு உணவுகளை ருசிப்பதையும் வீடியோவாக்குகிறார். ஃபுட் ரெவ்யூ, சாப்பாட்டுப் போட்டி என புரொமோஷன் செய்தும் வருமானம் ஈட்டுகிறார்.

137 வாழைப்பழம், 6 கிலோ நூடுல்ஸ்... ‘சூரி’க்கே டஃப் கொடுக்கும் யூடியூபர்!

அவர் வயதுப் பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 2,000 கலோரி உணவை எடுத்துக்கொள்வார்கள் என்றால் இவர் 23,000 கலோரி வரை எடுத்துக்கொள்கிறார். ஒரே நேரத்தில் 48 சிக்கன் துண்டுகள், 6 கிலோ நூடுல்ஸ், 137 வாழைப்பழங்கள் என அசால்ட்டாக அதகளம் செய்கிறார். கினோஷிடா ஒரு நேரத்தில் சாப்பிடுவது சராசரி மனிதர்கள் ஒரு வாரத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஒட்டுமொத்த உணவு. அதிக உணவுகளை வேகமாகச் சாப்பிடுவது இவரது ஸ்பெஷல்.

கினோஷிடாவின் வீடியோக்கள் டிரெண்டு ஆக காரணம், எத்தனை கிலோ உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டாலும் அவருடைய தோற்றத்திலோ, எடையிலோ எந்த மாற்றமும் ஏற்படாததுதான். 5.2 அடி உயரமும் 50 கிலோவுக்கும் குறைவான எடையும் உள்ள கினோஷிடாவுக்கு இயல்பாகவே மெலிந்த தேகம். அதிகம் சாப்பிடுவதால் எந்த உடல் உபாதைகளும் ஏற்படவில்லையாம். “என் உடற்கூறுக்கு (Anatomy)தான் நன்றி சொல்ல வேண்டும். மருத்துவரிடம் பரிசோதித்தபோது என் வயிறு மிகவும் தனித்தன்மையுடன் இருப்பதாகவும் நான் சாப்பிடும் அனைத்தையும் நிரப்பிக்கொள்ளும் வகையில் அது விரிந்து கொடுப்பதாகவும் கூறினார்” என்பவர், தன் உடல்நிலையை மருத்துவரிடம் பரிசோதிப்பதையும் சாட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளார். வீடியோக்கள் ஷூட் செய்யாத நேரத்தில் சராசரி மனிதர்கள் சாப்பிடும் அளவே அவரும் சாப்பிடுகிறார். அது ஒருபோதும் தனக்குப் போதுமானதாக இருக்காது என்றாலும் உடல்நலம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குறைவாகவே சாப்பிடுவதாகக் கூறுகிறார்.

137 வாழைப்பழம், 6 கிலோ நூடுல்ஸ்... ‘சூரி’க்கே டஃப் கொடுக்கும் யூடியூபர்!

“என் சிறுவயதில் ஒருநாள்கூட வயிறு நிறைய நான் சாப்பிட்டதே இல்லை” என்பவர் 5.49 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் செலிபிரிட்டியாக மாறி யிருக்கிறார். சிறு வயதில் போதிய உணவு கிடைக்காததால் உளவியல் ரீதியாக அவர் உணவுக்கு அடிமையாகியிருக்கலாம். அவர் சராசரி மனிதர்களைவிட அதிகம் சாப்பிடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கினோஷிடாவுக்கு ஒரே குறிக்கோள்தான்...

“ஜப்பானிலிருக்கும் அனைத்து ரெஸ்டாரன்ட் உணவுகளையும் ருசித்துவிட வேண்டும்.”