Published:Updated:

குழந்தைகளைக் கவனியுங்கள்!

யூடியூபர் மதன்
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபர் மதன்

முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான்

குழந்தைகளைக் கவனியுங்கள்!

முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான்

Published:Updated:
யூடியூபர் மதன்
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபர் மதன்

இணையவெளிப் புகார்கள் கடந்த சில நாள்களாக அதிகரித்துவருவது போன்றதொரு மாயை உருவாகியிருக்கிறது. உண்மையில், இப்போதுதான் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாட்டை துரைமுருகனின் மிரட்டல் தொடங்கி, கிஷோர் கே சுவாமியின் அவதூறு ட்வீட்கள் வரை கைதுப்படலம் நீள்கிறது. அதில் அதிகம் வெளிவராத, அதே சமயம் ஆபத்தான ஒன்று, மதன் விவகாரம்.

இந்தியாவில் PUBG ஆன்லைன் விளையாட்டு கடந்த செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டது. ஆனால், VPN மூலம் அதை இன்னும் விளையாட முடியும். அது எப்படி என கூகுளையெல்லாம் சென்றுத் தேடி நேர விரயம் செய்யாதீர்கள். உங்கள் வீட்டுச் சிறார்களிடமே கேட்கலாம். இரண்டு வயதுக் குழந்தையால்கூட விளம்பரங்களை ஸ்கிப் செய்துவிட்டு, எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் யூடியூபைப் பார்க்க முடியும் கொடையை இணையம் நல்கியிருக்கிறது. நாம்தான் சமயங்களில் பீனிக்ஸ் மாலை முதல்முறை பார்ப்பதுபோல பிரமித்து நிற்கிறோம். PUBG போன்ற விளையாட்டுகளை சட்டத்தை மீறிக் கள்ளத்தனமாக விளையாடுவதில் தொடங்கி, அதை ஸ்ட்ரீமிங் செய்து அதை வைத்துக் காசு பார்ப்பது, அதில் ஆபாச வசைச் சொற்களைப் பரப்புவது, இதைப் பெருமை என நினைத்து அந்த வார்த்தைகளை கமெண்ட்டாக இடும் சிறார்களின் பதிவுகளை வைத்து வீடியோ போடுவது, அதை ஊக்குவிப்பது, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டா என எல்லாப் பக்கமும் கடை வைப்பது என யூடியூபர் மதன்மீது காவல்துறையில் வரும் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம்.

குழந்தைகளைக் கவனியுங்கள்!

அவர் மதன் OP என்கிற பக்கத்துடன் Toxic மதன் என இன்னொரு பக்கத்தையும் யூடியூபில் நிர்வகித்துவருகிறார். PUBG tricks என்கிற அறிவிப்புடன் மதன் நடத்தும் MADAN யூடியூப் சானலுக்கு மட்டும் எட்டு லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். ராக்ஸ்டார் ரவி, பாக்ஸர் பாலு போன்ற செல்லப்பெயர்களைப் போல டாக்ஸிக் மதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. Toxic என்றாலே நச்சுதான். அதாவது, ‘இதில் நாங்கள் அசிங்கமாகத்தான் பேசப்போகிறோம்’ என முன்கூட்டியே அறிவித்து, toxic madan 18+ என சானலை உருவாக்கியிருக்கிறார். அதிலிருக்கும் வீடியோக்களும் லட்சம் பார்வையாளர்களைக் கடந்து செல்கிறது. ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடுவது, சிறுமிகளை இன்ஸ்டா பக்கத்தில் தனியாகப் பேச அழைப்பது, அதை எதிர்த்துப் பேசுபவர்களை வசைச் சொற்களால் திட்டுவது, அதையும் லைவாக ஸ்ட்ரீம் செய்வது என மதன் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகள். சிறுவர்களிடம் நன்கொடை என்கிற பெயரில் பணம் பறித்ததாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மதன் கைது செய்யப்படுவதுடன் இந்தப் பிரச்னை நிற்கப்போவதில்லை என்பதுதான் அவலம். பிரச்னையின் வேர் வேறெங்கோ இருக்கிறது. ஏனெனில் இந்த வசைச் சொற்களைப் பெருமையாக நினைத்துப் பேசும் எல்லா வாண்டுகளுமே இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

இணையம் என்பது கட்டற்ற பெருவெளி. அதில் தேடுதல் கடினம். ஆனால், தடயம் எப்போதும் உண்டு. ஒருமுறை பதிவு செய்துவிட்ட எதையும் எளிதாக அழித்துவிடாது. ஒரு பக்கம் மத்திய அரசு சமூக வலைதளப் பக்கங்களுக்குத் தரும் நெருக்கடிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நிற்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு பக்கம், இப்படியான வசவுச் சொற்களால் சூழும் அபாயங்களை எதிர்த்தும் குரல் எழுப்ப வேண்டியதிருக்கிறது. இணைய பாலியல் அத்துமீறல்களும், வசவுச் சொற்களும் எந்தச் சூழலிலும் கருத்துச் சுதந்திரத்தில் வராது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மதுமிதாவிடம் பேசினேன். ‘‘முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான். அனைத்துமே பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு பக்குவப்படும் மனநிலைக்கு வரும்வரையில் (டீன் ஏஜ் தாண்டும் வரை) அவர்களைக் குற்றவாளிகளாக்குவது அபத்தம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நடக்கும் விஷயங்கள்தான் ஒரு குழந்தையை உருவாக்குகின்றன. தனக்கான தனித்துவம் உருவாகும் வரை, ஒரு குழந்தை கற்றுக்கொள்வது எல்லாமே இந்த மாதிரியான புறக்காரணிகள் மூலம்தான். ஆரோக்கியமான மனநிலையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடம் ஒரு விஷயத்தைத் திணிப்பதால், இங்கு எதுவும் மாறப்போவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மனநலம் சார்ந்த விஷயங்களையும் சேர்த்துக் கற்றுத்தருவது அவசியம்.

குழந்தைகளைக் கவனியுங்கள்!

CyberSpace என்பது நம்மால் கற்பனை செய்ய முடியாதது. வதந்திகள் செய்திகளாக வருவது தொடங்கி, எல்லா ஆபத்துகளுமே இணையவெளியில் அதிகம். நேரில் ஒருவர் இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவரை நாம் கண்காணிக்க முடியும். அதுவொரு தொடர்ச்சியான நிகழ்வா, அல்லது ஒருமுறை மட்டுமே நடந்த அசம்பாவிதமா, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்றவற்றை ஒருமாதிரி கணிக்க இயலும். ஆனால், இணையவெளியில் இது சாத்தியமில்லாத ஒன்று. அநாமதேய நபர்கள் அதில் அதிகம். இந்த எல்லாவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தனிமையில் அதிக நேரம் விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் Private Space என்பது முக்கியம்தான் என்றாலும், அதிக நேரம் தனிமையில் இருப்பது, அதுவும் அந்த வயதில் ஆபத்தானது. குழந்தைகளிடம் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு சூழலைக் கொடுத்து, அதுகுறித்துக் கருத்துக் கேளுங்கள். பெற்றோர்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது.

சிறுவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென கோபப்படுவார்கள். தொடர்ச்சியாக இணையத்தில் சில விஷயங்களைப் பார்ப்பதுகூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். PUBG, free fire போன்று வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள் இங்கு எக்கச்சக்கம். ஒரு குழந்தை எத்தனை மணி நேரம் இந்த விளையாட்டுகளுக்கு ஒதுக்குகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசக்கூடாது என்கிற காலத்தை எல்லாம் நாம் கடந்து பல யுகங்கள் ஆகிவிட்டது. இப்போது யாரும் பிரவுசிங் சென்டர் செல்வதுமில்லை. எல்லாமும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கு இணையாக பெற்றோர்களும் அப்டேட் ஆக வேண்டிய சூழலிது. செமினார், புத்தகங்கள் என இன்னும் அவர்களுக்கு விளக்கவுரை கொடுத்துக்கொண்டிருப்பது வீண். பத்து வயது வரை, தன் அப்பாதான் சூப்பர் ஹீரோ என நம்பும் ஒரு சிறுவன், அதன் பின் தன் அப்பா நல்லவர் என நம்ப ஆரம்பிப்பது முப்பது வயதைக் கடந்த பின்னர்தான். இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாமும் தலைகீழாக மாறிவிடுகின்றன. நல்லதைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் காலமது.

குழந்தைகளைக் கவனியுங்கள்!

‘நான் பெரிய ஆள்’ என்கிற நிலையிலிருந்து குழந்தைகளை அணுகுவதே தவறானது. அதுவும் எதிர்மறைக் கருத்துகள் எளிதாகச் சென்றடையும் இக்காலத்தில், இம்மாதிரியான அணுகுமுறை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும். ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது’ என முற்றிலுமாக அவர்களுக்கு நீங்கள் தடா சொன்னால், வேறு வழிகளில் அவர்களால் இதை எளிதாகவே அணுக முடியும். அதில் பாதிப்பு இன்னும் அதிகம். முதலில் பெற்றோர்கள், குழந்தைகளின் மொழியைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ‘எம்டன் மகன்’ டைப் அப்பாவில் இருந்து யாரையும் சட்டென எஸ்.பி.பி பாணி அப்பாவாக மாறச் சொல்லவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இருக்கும் நல்லதோடு, கெட்டவற்றையும் சொல்லிப் புரியவையுங்கள்’’ என்கிறார் அவர்.

ஒரு சிறுவன் செய்யும் தீய செயலை ஆயிரம் பேர் ஊக்குவிக்கும்போது, அவனுக்கு அதில் இருக்கும் தவறு கண்ணைவிட்டு மறைந்து, மரத்துப்போகும். ஆகவே பெற்றோர்களே, உரையாடத் தொடங்குங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism