Published:Updated:

ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!

செந்தில்குமார் வீடியோ
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் வீடியோ

ரொம்ப கஷ்டப்படுகிற விவசாயக் குடும்பம். எனக்கு மூணு பொம்பளப் பிள்ளைங்க. பிழைப்புக்காக, 20 வருஷத்துக்கு முன்னால கத்தார் நாட்டுக்கு வேலைக்குப் போனேன்

ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!

ரொம்ப கஷ்டப்படுகிற விவசாயக் குடும்பம். எனக்கு மூணு பொம்பளப் பிள்ளைங்க. பிழைப்புக்காக, 20 வருஷத்துக்கு முன்னால கத்தார் நாட்டுக்கு வேலைக்குப் போனேன்

Published:Updated:
செந்தில்குமார் வீடியோ
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் வீடியோ

‘‘நான் பெத்த மகளே பாப்பாத்தி... இன்னைக்கு நம்ம வீட்டுல கருவாட்டுக் கொழம்பா? அம்மா விசாலக்கிழமை சந்தையில வாங்கிட்டு வந்தாளாடா? ஒரு பிசுக்கு கருவாட எடுத்துக்க, பிசுக்கு கருவாடு... ஒரு பூரான் கருவாட்டை எடுத்துக்க. அதான் சரி! பாத்து விக்கிக்கிடாம சாப்பிடுடா. அப்பாக்கு வேண்டாம்டா. அப்பா சாயந்தரம் போன் பண்றேன்டா என்னை பெத்தவரு...’’ இப்படி சீன வீடியோக்களுக்கு டப்பிங் கொடுத்து ரீல்ஸ் வெளியிட்டுக் கலக்குகிறார் தமிழர் ஒருவர். கிராமத்து வழக்கு மொழியல் அவர் பேசும் இந்த ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் செம ஹிட்.

புதுக்கோட்டை மாவட்டம் தெட்சிணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்தான் அவர். கத்தாரில் டிரைவராகப் பணிபுரிபுவர், அவ்வப்போது ரீல்ஸ்களை வெளியிட்டு அசத்துகிறார். சொந்த ஊர் வந்திருந்த செந்தில்குமாரை சந்தித்துப் பேசினேன்.

ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!

‘‘ரொம்ப கஷ்டப்படுகிற விவசாயக் குடும்பம். எனக்கு மூணு பொம்பளப் பிள்ளைங்க. பிழைப்புக்காக, 20 வருஷத்துக்கு முன்னால கத்தார் நாட்டுக்கு வேலைக்குப் போனேன். ஒரு அரபிக் குடும்பத்துல டிரைவர் வேலை கிடைச்சது. வேலை இருந்துக்கிட்டே இருக்கும். ஊருக்கு வர்றதையே நெனச்சுப் பார்க்க முடியாது. ஆரம்பத்துல சிரமப்பட்டேன். இப்ப பழகிடுச்சு’’ என்றவர், ரீல்ஸ் செய்ய வந்த கதையை விவரித்தார்.

‘‘செல்போன பத்தியே மொதல்ல எனக்குத் தெரியாது. போன் வந்தா எடுப்பேன், வீட்டுக்கு போன் பண்ணிப் பேசுவேன், அவ்வளவுதான். மிஞ்சிப் போனா யூடியூப் போட்டு பாட்டு கேட்பேன். மச்சான் செந்தில்குமார் என்கூட கொஞ்ச நாள் வேலை பார்த்தான். அவன்தான் எனக்கு டிக்டாக்கை அறிமுகப்படுத்தினான். ‘சின்னமணிக்குயிலே’ பாட்டு ஒரு பக்கம் ஓடுனுச்சு. நான் ஒரு பக்கம் வாயை அசச்சேன். அதைப் பதிவேத்தக்கூட தெரியலை. மச்சான்தான் பதிஞ்சி கொடுத்தான். 15 நாள்ல 20 வியூஸ்தான் வந்திருக்கு. அதுவும் அவன்தான் சொன்னான். இது எல்லாம் ஒரு வேலையான்னு விட்டுட்டேன்.

கொரோனா பரவுன நேரம்... ‘சீனாக்காரங்களாலதான் பரவுனுச்சு. அவங்க கண்டது கடியதுகளைத் தின்னு இதுமாதிரியான நோய்களைப் பரப்பி விட்டுட்டாங்க’ன்னு பேச்செல்லாம் ஓடுனுச்சு. அந்த நேரம் ஒருத்தரு, பாம்புக்கறி சாப்பிடுற சீனப் பொண்ணு வீடியோவ டிக்டாக்ல போட்டு கோபமா திட்டி யிருந்தாரு. அதற்கப்புறம் நான் என் பங்குக்கு நம்ம பேசுற வழக்கு மொழியில, சீனாக்காரங்களைத் திட்டி ஒரு வீடியோ போட்டேன். ரொம்ப நல்லாவே போயி ருந்துச்சு. ‘லட்சக் கணக்குல வியூஸ் போயிருக்கு, இன்னும் ஒண்ணு ரெண்டு பண்ணு’ன்னு மச்சான் கேட்டுக்கிட்டான்.

ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!

மொதல்ல ‘நான் பெத்த மகளே பாப்பாத்தி... ஒத்தாட்டுக் கறியை என் மகள் ஒரே ஆள் சாப்பிடுவா’ன்னு ஒரு வீடியோ போட்டேன். அந்த வீடியோ 19 மில்லியன் வியூஸ் போயிருந்திருக்கு. எனக்குத் தெரியலை. வழக்கம் போல் வண்டிய கழுவிக்கிட்டு இருந்தேன். சக டிரைவர் வந்து, ‘நீங்க டிரெண்டிங்ல உள்ளவரு, நீங்க போய் வண்டி கழுவலாமா’ன்னு கேட்டாரு. ‘அட போங்கய்யா... வண்டியைத் தொடச்சா தான் அரபிக்காரன் நமக்கு சம்பளம் கொடுப்பான்’னு சொல்லிட்டு வந்திட்டேன். மச்சான்தான் எனக்கு இதுபத்தியெல்லாம் புரிய வச்சான். ஆனாலும், பெருசா மெனக்கடல. எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் ஒரு வீடியோ எடுத்து வெளியிடுவேன். எல்லாமே நல்லாப் போயிடும்.

‘இது என்ன இப்படிப் பண்ணிக்கிட்டு திரியிறான், பைத்தியக்காரன்’னுதான் மொதல்ல பார்த்தாங்க. கமென்ட்களும் மோசமா இருக்கும். ஒருமுறை பிள்ளைங்க பார்த்துட்டு ரொம்ப கஷ்டப்பட்டுச்சுங்க. ‘இது நமக்கு வேண்டாம்’னு சொன்னுச்சுங்க. வீடியோ போடுறதை விட்டுட்டேன். ஆனா, ‘அடுத்த வீடியோ எப்ப வரும்’னு ஆயிரக்கணக்கான மெசேஜ்களை அனுப்பத் தொடங்கிட்டாங்க. என்னாலயும் வீடியோ பண்ணாம இருக்க முடியலை. பிள்ளைகள்கிட்ட சொன்னேன். அப்புறம் அவங்களே, ‘தப்பா மெசேஜ் பண்றவங்கள பிளாக் பண்ணிட்டு வீடியோ போடுங்க’ன்னு சொன்னாங்க.

ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!
ஒண்டிப்புலி மச்சான்.. அண்டாசட்டி கந்தப்பு...!

அதற்கப்புறம் இப்போ பேஸ்புக், இன்ஸ்டால தொடர்ச்சியா ரீல்ஸ் போடறேன். ‘அடுத்து அண்ணன் என்ன வீடியோ பண்ணுவாரு’ன்னு என்னோட ஐடியை எடுத்து எடுத்து தடவிப் பார்த்து செல்லே தேஞ்சி போனதா சிலர் சொல்வாங்க. அது நமக்கு உற்சாகமா இருக்கும். ஒரு நாளைக்கு 4 வீடியோக்கள் வரை போட்டுட்டு இருக்கேன்.

அரபிக்காரங்க பிள்ளைங்களுக்கு மிட்டாய் வாங்கணும்னாகூட காரை எடுத்துக்கிட்டு கூட்டிக்கிட்டு போற மாதிரிதான் இருக்கும். நேரமே கிடைக்காது. வீடியோ பண்றதுக்கு இரவுதான் நேரம் கிடைக்கும். வீடியோவைத் தேடி டவுன்லோடு பண்ணி வச்சி, ரெண்டு மூணு தடவை போட்டுப் பார்த்துட்டு டப்பிங் கொடுப்பேன். சில நேரங்கள்ல இரவு 1 மணி, 2 மணிகூட ஆகிடும்.

ஒண்டிப்புலி மச்சான், அண்டாசட்டி கந்தப்புன்னு எல்லாம் எப்படி பெயர் பிடிக்கறீங்கன்னு பலர் கேட்பாங்க., எல்லாமே எங்க கிராமத்துல இருக்க அடைமொழிப் பெயர்கள்தான். வீடியோக்கள்ல ஒரே பெயர் பலமுறை வராத அளவுக்கு எங்க ஊர்லயே இதுமாதிரி நூத்துக்கணக்கான பெயர்கள் இருக்கு.

சீன வீடியோக்களைக் கலாய்ச்சி போடுறது மட்டுமில்ல, சீன மூதாட்டி சமையல் செய்யிற வீடியோக்களையும் போட்டுருக்கேன். லட்சக்கணக்கான வியூவர்ஸ் எனக்கு இப்ப இருக்காங்க. சீனர்களே என் வீடியோவை ரசிக்கிறாங்க. எதார்த்தமாகப் பேசும் இந்த மொழி மக்களுக்கு ரொம்பவே பிடிச்சிப்போயிருச்சு.

டிரைவரா வேலை பார்த்து சம்பாதிக்கிறேன். குடும்பத்தைக் காப்பாத்த அது போதும். இத வச்சி பத்து ரூபா சம்பாதிக்க நினைக்கலை. நினைக்கப் போறதும் இல்லை. நாலு பேர் நான் பண்றத பார்த்துச் சிரிச்சாப் போதும். ஆண்டாண்டுக் காலத்துக்கு என் குடும்பம் நல்லா இருக்கும்’’ நகைச்சுவையில் நெகிழ்வு கலந்து சொல்கிறார் செந்தில்குமார்.