Election bannerElection banner
Published:Updated:

ZOMATO டெலிவரி பாய் மற்றும் அந்தப் பெண் : யாருக்கான செயலிகள் நாம்?

காமராஜ் - ஹிதேஷா
காமராஜ் - ஹிதேஷா

உதாரணமாக நமக்கு உணவு கொண்டு வருபவன் ஒரு மனிதன். நம் செயலியின் வரைபடத்துக்கூடாக வரும் பொம்மை அல்ல. அவனுக்கென உணர்வுகள் இருக்கின்றன

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

விகடன் தளத்திற்காக தாமஸ் ஷெல்பியால் எழுதப்பட்ட கட்டுரை.

திடுமென ஒரு பிரியாணி சாப்பிடுவதற்கான ஆவல் ஏற்படுகிறது. உடனே சமைக்க முடியாது. என்ன செய்வோம்?

கைபேசியை எடுத்து zomato செயலியை தட்டி எழுப்பி, கடகடவென ஸ்க்ராலிட்டு விருப்பமான கடைகளுக்குள் சென்று பார்த்து, நம் ஆவலுக்கு பொருந்தும் விலையிலும் ருசியிலும் ஒரு பிரியாணியை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்துவிட்டு, ஹாயாக பிரியாணி வரக் காத்திருப்போம். இல்லையா?

செயலியில் இருக்கும் கோடுகளும் அம்புக்குறிகளும் தகவல்களும் உங்களுக்கும் பிரியாணிக்குமான தூரத்தையும் நெருக்கத்தையும் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறது. டெலிவரி பாயின் அந்த பைக் அற்புதமாக உயிர்த்தெழுந்து செயலியின் வரைபடத்தில் உங்களை நோக்கி நகரத் தொடங்குகிறது. இன்னும் கொஞ்ச நேரம்.. இன்னும் கொஞ்ச நேரம்..! பிரியாணிக்கான ஆவலுக்குள் நீங்கள் தொலைந்து கொண்டிருக்கிறீர்கள்.

சற்று நேரம் கழித்து செயலியின் வரைபடத்தை பார்த்தால் பிரியாணி தூதுவர் ஐம்பதடி தொலைவில் இருக்கும் சிக்னலில் பல நிமிடங்களாக நகரமாலேயே நின்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்பு கொண்டால் செயலி காட்டும் தூரத்தை காட்டிலும் தொலைவில் இருப்பதாக சொல்கிறார். பிரியாணி மீதான ஆவலுக்கு கொம்பு முளைக்கும். மாபெரும் அநீதி இழைக்கப்பட்ட கோபம் உங்களை ஆக்கிரமிக்கும்.

Online food delivery
Online food delivery
இத்தகைய சூழல்களில் நாம் என்னவாக இருந்திருக்கிறோம் என்பதை நாமே காண்பதற்கான ஒரு சம்பவம்தான் சமூகதளத்தில் கடந்த சில நாட்களாக அசைபோடப்பட்டு வரும் பெங்களூர் நிகழ்வு.

ஹிதேஷா சந்திரனீ என்கிற பெண் சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். காணொளி தொடங்கிய சில நொடிகளுக்கு மூக்கில் ரத்தம் வழியவும் பிறகு ஒரு ப்ளாஸ்திரி ஒட்டிவிட்டும் அவர் பேசியிருக்கிறார். நமக்கான பிரியாணி போல் அவருக்கான உணவும் வர தாமதமாகியிருக்கிறது. கோபம் கொண்டு Zomato Customer Care-ல் புகார் செய்திருக்கிறார். அதே நேரத்தில் உணவும் வந்திருக்கிறது. கஸ்டமர் கேரிலிருந்து பதில் கிடைக்கும் வரை உணவு கொண்டு வந்தவரை காத்திருக்க சொல்லியிருக்கிறார் ஹிதேஷா. அதற்குள் அவர் கோபப்பட்டு ஹிதேஷாவை மூக்கில் குத்திவிட்டு ஓடி விட்டார். ஹிதேஷா வெளியிட்டிருந்த காணொளியின் சாரம் இதுதான்.

சமூகவலைதளம் காணொளியை பலவிதமாக எதிர்கொண்டது. Zomato மீதான கோபத்தைக் கொண்டு அதன் ஊழியர்களை ஒரு தரப்பு திட்டிக் கொண்டிருந்தது. இன்னொரு தரப்பு ‘உணவு கிடைக்காமல் மூக்கில் குத்து வாங்கியவர்’ என மீம் செய்து குதூகலித்துக் கொண்டிருந்தது. பெண்ணிடம்தான் தவறு இருக்குமென சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தது இன்னொரு தரப்பு. மறுபக்கத்தில் உணவு கொண்டு சென்றிருந்த காமராஜோ வேறு கதை சொல்கிறார்.

ZOMATO
ZOMATO
representative image

பெங்களூருவில் போக்குவரத்து நெருக்கடி எவருக்கும் தெரிந்த விஷயம். அதற்குள் நீந்தி உயிரோடு உணவை கொண்டு வந்து சேர்ப்பிக்க தாமதமாகி இருக்கிறது. அதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் காமராஜ். அதை ஹிதேஷா ஏற்காமல் திட்ட துவங்கியிருக்கிறார். உணவுக்கான பணம் கேட்டிருக்கிறார் காமராஜ். திட்டிக் கொண்டிருந்தவர் அடிக்கத் துவங்கியிருக்கிறார். இவற்றுக்கிடையில் ஹிதேஷா உணவை கேன்சல் செய்திருக்கும் தகவல் காமராஜ்ஜின் செயலிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே அவர் உணவை திரும்பக் கேட்டிருக்கிறார். கொடுக்க மறுத்து ஹிதேஷா செருப்புகளை காமராஜ் மீது எறிந்திருக்கிறார். செருப்புகளையும் அவரின் தாக்குதலையும் தடுக்க முயன்றதில் ஹிதேஷா விரலில் அணிந்திருந்த மோதிரம் அவரின் மூக்கையே கீறியிருக்கிறது. அதில் ரத்தம் வந்திருக்கிறது. காமராஜ் அங்கிருந்து கிளம்பி விட்டிருக்கிறார்.

காமராஜ் சொன்னபடியான மோதிரம் ஹிதேஷாவின் காணொளியில் தென்படுகிறது. ஆகவே காமராஜ் சொல்வதில்தான் நியாயம் என்பதை சமூகதள பேருலகம் உணர்ந்து கொண்டது. ‘ஹவ் பேட் தெ உமன் கேன் பி’ என அவரை தற்போது திட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையில் காமராஜ் Zomatoவால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை அவரை கைது செய்து பிணையில் விட்டிருக்கிறது. Zomato நிறுவனம் இரு தரப்புக்கும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது. முத்தாய்ப்பாக காமராஜ் இதுவரைக்கும் 5000 முறை உணவு டெலிவரி செய்திருப்பதாகவும் மதிப்பீட்டு நட்சத்திரங்களில் உச்சபட்சமான நான்குக்கும் மேலான நட்சத்திரங்களை பெற்றவர் அவரென்றும் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

புதுப்புது வாழ்க்கைமுறைகள், புதுப்புது பிரச்சினைகள்.

Zomato இந்தியாவில் அறிமுகமானது 2008ம் ஆண்டு. அதற்கான போட்டியாக ஸ்விகி போன்றவை 2014ம் ஆண்டில்தான் அறிமுகமாகின. அப்போதெல்லாம் நாம் ‘எவனாவது சோத்தை appல ஆர்டர் பண்ணி சாப்பிடுவானா?’ என பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று நிலைமை வேறு.

செயலிகள் சார்ந்த இத்தகைய வாழ்க்கை முறையை APP Life என்கிறார்கள். ‘செயலி வாழ்க்கை’ என பொருள். அதாவது செயலிகளின் உதவியோடே நம் வாழ்க்கைகளை ஓட்டும் முறை. ஆட்டோ பிடிப்பது தொடங்கி காதலர் பிடிப்பது வரை நம் வாழ்க்கைகளை செயலிகள் ஆண்டு கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பமும் நிறுவனங்களும் லாபத்தை நோக்கியே ஓடுபவை. அதற்காக நம்மையும் கூட இழுத்துக் கொண்டும் ஓடும் சூழலே உலகம் முழுக்க யதார்த்தமாக இருக்கிறது. அந்த யதார்த்தத்துக்குள் நாம் பல விழுமியங்களை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக நமக்கு உணவு கொண்டு வருபவன் ஒரு மனிதன். நம் செயலியின் வரைபடத்துக்கூடாக வரும் பொம்மை அல்ல. அவனுக்கென உணர்வுகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் செயலியை பார்த்து ஆர்டர் செய்கையில் நாம் அந்த மனிதனையும் ஒரு செயலியாகவோ அல்லது ஒரு சேவையாகவோ மட்டுமே பார்க்க பழக்கப்படுகிறோம். நம்முடைய செயலி காட்டும் நேரத்துக்குள் ஓடி வந்து உணவு கொடுக்கும் இயந்திரமாக அவனை பாவிக்கிறோம்.

உணவு டெலிவரி
உணவு டெலிவரி
representative image

செயலி வாழ்க்கை உருவாக்கும் பிரச்னைகளே அதிகம் என்றால் அவற்றையும் விட அதிகமான நம் சமூகச்சிக்கல்களையும் அவற்றோடு இணைத்துக் கொள்கிறோம். உணவு கொண்டு வருபவன் கறுப்பாக இருந்தால் கறுப்பை பற்றி நாம் கொண்டிருக்கும் மனநிலையோடு அவனை அணுகுகிறோம். இஸ்லாமியனாக இருந்தால் அதற்குரிய மனநிலை. தமிழ் தெரியாதவனாக இருந்தால் அதற்குரிய மனநிலை. ஆட்டோவை புக் செய்துவிட்டு அவர் கூடுதலாக 20 ரூபாய் கேட்டால் பெரும் கோபம் கொள்கிறோம். அவனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நிறுவனத்துக்கான பொறுப்பாளராகவே உருமாறி அவனை கையாளுகிறோம். அவமானப்படுத்துகிறோம். பல நேரங்களில் புறக்கணிக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் உணவு கொண்டு வரும் நபரை கவனித்து பாருங்கள். ஓர் இளைஞன் வருவார். வழி தெரியாத வெளியூர்க்காரர் வருவார். நடுத்தர வயதுக்காரர் வருவார். மொழி தெரியாதவர் வருவார். மாற்றுத் திறனாளி பல படிக்கட்டுகளை ஏறி வந்து உணவு கொடுப்பார். தண்ணீர் வேண்டுமா என்று கூட கேட்க மறந்து, நாம் நமக்கான உணவை வாங்கி அந்த நபரை அனுப்புவோம். ‘ஸ்டார் ரேட்டிங் போட்டுடுங்க சார்’ என மூடப்படும் கதவின் கடைசிக்கட்ட இடைவெளியில் பரிதாபமாக அவரின் முகம் சொல்லி மறையும்.

துயரம் என்ன தெரியுமா?

அந்த மூடப்படும் கதவின் இடைவெளியில்தான் உங்களின் முகமும் அந்த மனிதரின் பார்வையில் மறையும்.

இரண்டு சக மனிதர்களுக்கு இடையேயான தூரத்தை நம் சமூகம் ஏற்கனவே கட்டமைத்திருக்கிறது. அவர்களுக்கு இடையேயான உறவை முகம் கூட பார்க்க மறுக்கும் இடத்துக்கு செயலிகளுடனான நம் வாழ்க்கை கொண்டு வந்திருக்கிறது. வார்த்தைகளை பாருங்கள். உணவை நீங்கள் ‘ஆர்டர்’ செய்கிறீர்கள்; வாங்கவில்லை. செயலியில் ஒரு சேவையை ‘ஆர்டர்’ செய்வதாலேயே அச்சேவையை செய்து கொடுக்க வரும் நபரை நமக்கான அடிமையாக பாவிக்கிறோம். என்னுடைய ‘ஆர்டரு’க்கு இணங்கியே அவரின் சேவை இருக்க வேண்டுமென நினைக்கிறோம். அதில் எள்ளளவு மீறினாலும் நாம் நமக்குள் ஒளித்து வைத்து பாதுகாத்து வரும் ஆதிக்க மனநிலை கொண்டு அவனுக்கு தண்டனை வழங்க முடிவு செய்கிறோம். அவனுக்கு ஒரு மதிப்பீட்டை வழங்குகிறோம். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அவனுக்கு கிடைக்கும் வருமானத்தில் கை வைக்கிறோம். என் கட்டளைக்கு பணியாதவனை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று வீழ்த்தும் குரூரத்துக்கு ஆட்படுகிறோம்.

செயலி வாழ்க்கையை இப்படி கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். செயலியின் இருமுனைகளில் இருக்கும் மனிதர்களுக்கு உயிரில்லை. அவர்களை இயக்கும் செயலிக்கு மட்டுமே உயிர் இருக்கிறது. கொஞ்சம் அதிகப்படியாக தெரிந்தாலும், நாம் அனைவருமே உணர்வற்ற செயலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தற்போதைய உண்மை.

ZOMATO டெலிவரி பாய் மற்றும்  அந்தப் பெண் : யாருக்கான செயலிகள் நாம்?
representative image

நம்முடைய அடையாளங்கள் வெறும் நட்சத்திரங்கள் மட்டும்தான். நட்சத்திர எண்ணிக்கை மட்டுமே நம்முடைய வாழ்க்கையை பற்றி பிறரின் மதிப்பீட்டை வழங்குகிறது. திடுமென ஒருநாள் காமராஜை போல் வேலை பறிக்கப்பட்டு மொத்த நட்சத்திரங்களும் இல்லாமல் போய்விட்டால் நாமெல்லாம் என்ன ஆவோம்?

என்னுடைய ஆதிக்க மனநிலையையும் வர்க்க ஆதிக்கத்தையும் செலுத்துவதற்கான ஒரு நபரை செயலியின் வழியாக தேர்ந்தெடுத்து வர வைப்பதாக இச்சூழல் மாறுகையில் என்னுடைய ஒடுக்குமுறைக்கு யார் தண்டனை கொடுப்பது?

அதற்கென எதுவும் செயலி இருக்கிறதா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு