ஸொமேட்டோ விவகாரம்: `அந்தப் பெண்தான் என்னை தாக்கினார்!' - சம்பவத்தை விவரித்த ஊழியர்; திடீர் திருப்பம்

கதையில் திடீர் திருப்பமாக, ஹிதேஷா சந்திரனி தன்னை செருப்பால் தாக்கியதாகவும், தன்னை தற்காத்துக்கொள்ள, அவரை தள்ளியபோது அடிபட்டுவிட்டது என்றும் காவல்துறை விசாரணையின் போது ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
மார்ச் 9-ம் தேதி ஸொமேட்டோ டெலிவரி ஊழியரால் தான் தாக்கப்பட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்ஸர் ஹிதேஷா சந்திரனி, முகத்தில் ரத்தக் காயத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், ``உணவை தாமதமாக டெலிவரி செய்ததால், எனக்கும் ஸொமேட்டோ ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அவர் என்னை மூக்கில் குத்திவிட்டு ஓடிவிட்டார்" என்று அதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவன ஊழியருக்கு எதிராக பலரும் கருத்துகளைப் பதிவிட ஆரம்பித்தனர். எனவே ஸொமேட்டோ நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும், ஸொமேட்டோ தன் ட்விட்டர் பக்கத்தில், ``நடந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம். எங்கள் உள்ளூர் பிரதிநிதி, ஹிதேஷாவைத் தொடர்பு கொள்வார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்வார்" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கதையில் திடீர் திருப்பமாக, ஹிதேஷா சந்திரனி தன்னை செருப்பால் தாக்கியதாகவும், தன்னை தற்காத்துக்கொள்ள, அவரை தள்ளியபோது அடிபட்டுவிட்டது என்றும் காவல்துறை விசாரணையின் போது ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் தெரிவித்திருந்தார். ஊடகங்களிடமும் பேசிய அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் இந்த சம்பவத்தால் தன் வேலை பறிபோனதுடன், வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சமூக ஊடகங்களில் காமராஜூக்கும் ஆதரவு பெருகியது. உண்மை என்ன எனத் தெரியாமல் காமராஜ் மீது நடவடிக்கை எடுத்திருக்கக்கூடாது எனவும் குரல்கள் எழுந்தன.

இதனையடுத்து ஸொமேட்டோவின் சி.இ.ஓ தீபிந்தர் கோயல் இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ``இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதால் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். ஸொமேட்டோ நிறுவனத்தின் சார்பாக உணவை டெலிவரி செய்த காமராஜ் மற்றும் ஆர்டர் செய்த ஹிதேஷா இருவருக்குமே உதவிகள் செய்து வருகிறோம். காவல்துறை விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.
நிறுவன கொள்கையின் படி காவல்துறை விசாரணை முடிவடையாததால் நிறுவனத்தின் சார்பாக காமராஜுக்கான ஊதியத்தை இப்போது வரை அளித்து வருகிறோம்.
காமராஜ் எங்கள் நிறுவனத்தில் 26 மாதங்களாகப் பணியாற்றி வருகிறார். இதுவரை 5000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார். மேலும் கஸ்டமர்களின் ஸ்டார் ரேட்டிங்கில், ஐந்திற்கு 4.75 ரேட்டிங் வைத்துள்ளார். இது ஓர் ஊழியருக்கான அதிகபட்ச ரேட்டிங் ஆகும். நடந்தது என்ன என்பதில் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. கூடிய விரையில் உண்மையைக் கண்டறிவோம்" என்று பதிவிட்டுள்ளார்.