Published:Updated:

``ஆளுநர் தமிழிசை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்'' - தமிழன்னை விருது பெற்ற பத்மா சுப்ரமணியம்!

ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்
News
ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்

மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி என பல்துறை சார்ந்தும் தன் செயற்கரிய செய்கையால் சாதித்த பெண்களை பெருமிதப்படுத்துவதற்காக `அவள் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது...

``ஆளுநர் தமிழிசை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்'' - தமிழன்னை விருது பெற்ற பத்மா சுப்ரமணியம்!

மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி என பல்துறை சார்ந்தும் தன் செயற்கரிய செய்கையால் சாதித்த பெண்களை பெருமிதப்படுத்துவதற்காக `அவள் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது...

Published:Updated:
ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்
News
ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்

தமிழ்க்குடும்பங்களின் தலைமகளாக விளங்குகிற அவள் விகடன் இதழ் தன் வெள்ளி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி என பல்துறை சார்ந்தும் தன் செயற்கரிய செய்கையால் சாதித்த பெண்களை பெருமிதப்படுத்துவதற்காக 5-ம் ஆண்டாக `அவள் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்
ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள்

நேற்று சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் தலையாய விருதான தமிழன்னை விருது பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது. பரதம் என்றாலே பத்மா சுப்ரமணியம் நினைவு வரும் அளவுக்கு புகழ்பெற்று விளங்குபவர். நடனம் ஆடுவதோடு மட்டுமன்றி கோயில் சிற்பங்களில் உள்ள நடன அசைவுகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நடனத்தோடு இசையிலும் தேர்ச்சி பெற்ற பத்மா சுப்ரமணியத்துக்கு தமிழன்னை விருதை மேதகு தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை வழங்கிய தருணம் மிகவும் அழகாக இருந்தது.

8 இளம் பரத நாட்டியக் கலைஞர்கள் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அரங்கின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டு, நாட்டியமாடியபடியே பத்மா சுப்ரமணியத்தை மேடைக்கு அழைத்துச் செல்லவே இந்த வரவேற்பில் அவர் நெகிழ்ந்து போனார்.

ஆளுநர் தமிழிசை மாலை சூடி, மலர்க் கிரீடம் அணிவிக்க, நெகிழ்ச்சியின் உச்சியில் நின்ற பத்மா சுப்ரமணியம்,

``தமிழிசை அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கங்கா பிரவாகம் போல் அவரது பேச்சுத்திறன் இருக்கும். நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணித்த குடும்பத்திலிருந்து வந்த அவரது கையால் இவ்விருதைப் பெறுவது பெருமையாக இருக்கிறது” என்று சொன்னார்.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

“பரதம் பொருளாதாரத்தில் நிலையிலிருக்கும் மக்களுக்கான கலையா?” என்று அவரிடம் கேட்டதற்கு…

 ``எங்களது நிருத்யோதயா நடனப்பள்ளி என் தந்தையாரால் நிறுவப்பட்டது. எங்கள் நடனப்பள்ளியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 90 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு. பேருந்து நடத்துநர், கொத்தனார், மீனவர் என மிகவும் பின் தங்கிய குடும்பத்திலிருந்துகூட பலரும் எங்கள் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்கின்றனர். அதைக் கலையாக மட்டுமே பார்ப்பதால் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை. மனிதநேயத்தைப் பார்க்க எங்கள் பள்ளிக்கு வர வேண்டும்” என்றபோது அரங்கே கைதட்டி ஆமோதித்தது.

 சினிமா பார்ப்பீர்களா என்று கேட்ட போது…

``எனக்கு சினிமா பிடிக்கும். என் அக்கா மகன் ரகு, கமலுக்கு நடனம் அமைத்தார். ரகு உயிரோடு இருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பார்” என்றவரிடம் சினிமாவில் பிடித்த நடனக்காட்சியைக் கேட்டதற்கு,

``ஒன்றைத்தான் சொல்ல வேண்டுமென்றால்… வைஜெயந்தி மாலாவும் பத்மினியும் ஆடிய போட்டி நடனம் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

“உங்கள் பேரன்அனிருத் இசைமைக்கும் பாடல்களில் எந்த பாட்டைக்கேட்டால் உங்களுக்கு ஆடத்தோன்றும்?” என்ற கேள்விக்கு,

``அனிருத் போடுற பாட்டெல்லாமே ஆடுற மாதிரிதான் இருக்கும். அவனுக்கு இயல்பாகவே இசைஞானம் இருக்கிறது. அவனது விரல்கள் இசையில் நடனமாடும். அவன் நடத்திய லைவ் நிகழ்ச்சியில் 30,000 பேர் கலந்துகொண்டு நின்றுகொண்டே ரசித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்” என்றார் பத்மா சுப்ரமணியம்.

அதைத் தொடர்ந்து தமிழிசையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

``தெலங்கானாவில் நீங்கள் நடனமாடிய வீடியோ வைரலாகியதே” என்று கேட்டதற்கு…

``எனக்கு ஆடவெல்லாம் தெரியாது. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் என்பது மாதிரி ஆட வேண்டிய இடத்தில் ஆடவும் பாட வேண்டிய இடத்தில் பாடவும் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த நடனம் தெலங்கானா பழங்குடி மக்களுக்காக அவர்களோடு சேர்ந்து ஆடினேன்” என்று கலகலப்பூட்டினார்.

உங்களைப் பற்றி வெளியே தெரியாத முகத்தைச் சொல்லுங்கள் என்றபோது…

``என் வாழ்க்கையே திறந்த புத்தகம்தான்… அதில் தெரியாத முகம் என்றெதுவுமில்லை. என் மருத்துவர் முகம் அவ்வளவாக வெளியே தெரியாது. குழந்தை கருவாக இருக்கும்போதே அதைக் கண்டறிந்து குணப்படுத்தும் ஃபீட்டல் தெரபியை தமிழகத்தில் இரண்டாவது ஆளாகப் படித்தவள் நான். வேறெந்த வாய்ப்பும் இல்லாத சூழலில் அரசியலுக்கு நான் வரவில்லை. எனது மருத்துவத்துறையில் பிரபலமாக இருந்தபோதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன்” என்று உணர்ச்சி மேலோங்கக் கூறினார். 

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

அவரிடம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படியாக போட்டோ கார்ட் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அரசியல்வாதியா, ஆளுநரா?

``அரசியல்வாதிக்குள் இருக்கும் ஆளுநர்… ஆளுநருக்குள்ளிருக்கும் அரசியல்வாதி.”

சாம்பாரா, மீன் கொழம்பா?”

``மீன் கொழம்பு.”

சுடிதாரா, புடவையா?

``புடவை.”

சிதம்பரமா, மதுரையா?

``சிதம்பரம் வழியாகப் போகும் மதுரை.”

தமிழா, இந்தியா?

இந்தக் கேள்விக்கு சற்றே நிதானித்துச் சிரித்தவர் “தமிழ்தான்… தமிழ் என் பெயரிலும் இருக்கிறது உயிரிலும் இருக்கிறது” என்று சொல்லவே அரங்கில் பலத்த கரவோசை எழுந்தது.

விஜய்யா, அஜித்தா?

``நான் சினிமா பார்ப்பதில்லை என்பதால் இதற்கு பதில் சொல்ல முடியாது.”

ட்விட்டரா, இன்ஸ்டாகிராமா?

``ட்விட்டர்தான்.”

இளையராஜாவா, ரஹ்மானா?

``தமிழிசைக்கு எந்த இசையும் பிடிக்கும்… அதில் எந்தப் பாரபட்சமும் இல்லை” என்று அனைத்துக் கேள்விகளையும் சாதுரியமாக எதிர்கொண்டார்.