வட இந்தியா வழியாக தமிழகத்துக்கு வரும் கறுப்புக் காய்ச்சல்... உஷார்! | Black fever warning in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (23/08/2017)

கடைசி தொடர்பு:11:35 (23/08/2017)

வட இந்தியா வழியாக தமிழகத்துக்கு வரும் கறுப்புக் காய்ச்சல்... உஷார்!

கொசுக்களால் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது தலைதூக்கும் கறுப்புக்காய்ச்சல், மலேரியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உயிர்க்கொல்லி நோய்.  
இந்த நோயினால் உலகம் முழுவதும் பல நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சூடான், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல்

இது இந்தியாவில் குறிப்பாக, பீகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இதுகுறித்த விழிப்புஉணர்வு மக்களிடையே மிகக் குறைவாகவே இருக்கிறது. 

இதுகுறித்து பொது மருத்துவர் தேவராஜன் விளக்குகிறார்.

கறுப்புக் காய்ச்சல்

கறுப்புக் காய்ச்சலை காலா அஸார் என்று கூறுவர். காலா என்றால் கறுப்பு என்று அர்த்தம். இது மலேரியாவுக்கு அடுத்த படியாக கொசுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய். இது மணல் பூச்சி என்னும் மணல் கொசுவால் ஏற்படும். இந்த நோயானது பிலிபோட மோமஸ் அர்ஜென்டிப்ஸ் எனப்படும் பெண் மணல் கொசு கடிப்பதால் உண்டாகிறது. இந்த மணல் கொசுவானது கடிக்கும்போது, லீஸ்மானியா டோனவனி (Leishmania Donovani) என்னும் நுண்ணுயிர்க் கிருமியை உடலினுள் செலுத்தும். அது ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் பரவும். 

கொசு

இந்த மணல் கொசு மனிதனைக் கடிப்பதன் மூலம், லார்வா நிலையில் உள்ல ஒட்டுயிர் மனித உடலினுள் தொற்றிக்கொள்கிறது. ரத்தத்தை உறிஞ்சுவதற்காக பூச்சி ஒருவரைக் கடிக்கும்போது அந்த மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பின், அவர் உடலில் உள்ள காலா அசார் ஒட்டுண்ணியும் உறிஞ்சி எடுக்கப்படும். இந்த ஒட்டுண்ணிகள், பூச்சியின் உடலில் வளர்ச்சி அடைந்து பல மடங்கு பெருகும். இது வளர்வதற்கு ஆறு முதல் 10 நாள்கள்வரை ஆகும். இப்போது, வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் மற்றோரு மனித உடலினுள் செல்லத் தயாராக இருக்கும்.

டம்டம் காய்ச்சல் (Dum dum fever), காலா அசார் (Kala azar), விஸ்சரல் லிஸ்மனியாசிஸ் (Visceral Leishmaniasis), கறுப்புக் காய்ச்சல் (Black fever) என்பன இதன் மறுபெயர்கள்.

அறிகுறிகள்:

மலேரியாவுக்கு உள்ளதைப்போல் தொடர்ந்து கடுமையான காய்ச்சல்

உடலின் நிறம் கறுத்துவிடுதல்

அதிகப்படியான அளவு உடல் எடை குறைதல்

முடி உதிர்தல்

மண்ணீரல் வீக்கத்தால் வயிறு பானைபோல் வீக்கம் அடைந்திருத்தல்

உடலின் ரத்தத்தின் அளவு குறைந்து போதல்; ரத்தச்சோகை

கல்லீரலில் வீக்கம்

ஈறுகளில் ரத்தக்கசிவு

பசியின்மை

இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை

உடல் சோர்வு

கல்லீரல், கணையம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படுதல்.

கறுப்புக் காய்ச்சலின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய நீண்ட நாள்கள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட, நோய்க் கிருமிகள் மனித உடலில் உள்ளே புகுந்து 10 முதல் இரண்டு ஆண்டுகள் வரைகூட ஆகலாம்.  

பரவும் முறைகள்:

இந்த நோய்த்தொற்று உள்ளவரை கடித்த கொசு, ஆரோக்கியமாக உள்ளவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவும்.
இந்த நோய் தாக்குதல் உள்ள ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு கொடுக்கும்போது, ரத்தம் பெற்றவருக்கும் கறுப்புக் காய்ச்சல் நோய் பரவும். 

பாதிப்புகள்:

இந்த நோய்க்கிருமியானது எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், கல்லீரல் மற்றும் எண்டோதீலியல் தசைகளில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து கவனிக்காது விட்டுவிட்டால், கருமையான காய்ச்சல் மற்றும் வயிறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், இவை உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அளவு ஆபத்தானது.

கறுப்புக் காய்ச்சல்

சிகிச்சை

முன்னர் ஊசிகளின் மூலம் மட்டுமே இந்த நோயைக் குணப்படுத்த முடிந்தது. தற்போது இதற்கென தனியே மருந்துகள் வந்துவிட்டன. இதற்கு மலேரியாவுக்குப் போடப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயனலிக்காது. மாறாக, சோடியம் ஸ்டிபோகுளுகோனேட் (sodium stibogluconate), ஆம்போடெரிசின் பி (Amphotericin b) ஆகிய மருந்துகளின் மூலம் காய்ச்சலைக் குணப்படுத்தலாம். சுமார் ஒரு மாதம் வரை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இந்த மருந்தின் அளவுகளும் பயன்படுத்தும் காலமும் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

பரிசோதனை:

ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை பரிசோதனைகளின் மூலம் இந்தக் காய்ச்சலைக் கண்டறிய முடியும். பல நாள்களாக ஒருவருக்கு காய்ச்சல் நீடித்து வந்தால், ஆர்.கே.39, எலீசா போன்ற ரத்தப் பரிசோதனைகளைச் செய்யவேண்டும். இந்த பரிசோதனைகளின் மூலமே கறுப்புக்காய்ச்சல் உறுதி செய்யப்படுகின்றன. 

நோய் தொற்று எளிதில் பரவக்கூடியவர்கள்...

எச்ஐவி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கறுப்புக் காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மணல் கொசு

இந்த மணல் கொசு சாதாரண கொசுவை விட சிறியதாக இருக்கும். சில வகையான மணல் கொசுக்கள் மட்டுமே கறுப்புக் காய்ச்சலைப் பரப்புகிறது. பிலிபோடமஸ் அர்ஜென்டிப்ஸ் என்னும் மணல் கொசுக்களின் மூலமாக இந்த நோய் பரவும். 

மணல் கொசுவானது இருள் நிறைந்த, ஈரப்பதமிக்க மற்றும் பராமரிப்பற்ற வெளியிடங்களில் அதிகமாகக் காணப்படும். சிதைவடைந்து ஒன்றாகக் குவிந்திருக்கும் சுவர்கள், மரங்கள் மற்றும் மரக்கட்டைகள், மரப்பொந்துகள் மற்றும் கால்நடைத் கொட்டகைகள் போன்ற இடங்களில் வசிக்கின்றன. மேலும், விலங்குகளின் வலைகள் மற்றும் ஈரமாக உள்ள மண் போன்றவற்றையும் தன் வாழிடமாகக் கொண்டிருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close