வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (24/08/2017)

கடைசி தொடர்பு:15:27 (24/08/2017)

பிரீ மென்சுரல் சிண்ட்ரோம்... எளிதாகக் கடக்க 7 எளிய வழிகள்! #PreMensturalSyndrome

பிரிமென்சுரல் சிண்ட்ரோம்

மாதவிடாய் காலம் என்பது எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது. மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பான வலிகள், சங்கடங்கள், அதற்கு பின்பான சோர்வுகள் என 10 நாள் சிரமத்தை ஒவ்வொரு பெண்ணும் கடக்கிறாள். படிப்பு, வேலை எனச் சுழலும் பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் கூடுதல் விடுமுறைக்கான வாய்ப்புகளும் இல்லை. வழக்கமான வேலைகளுக்கு இடையில்தான் இந்த வேதனையும் கடந்தாக வேண்டும். இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் சத்துகுறைபாடுள்ள உணவுமுறை ஆகியவை மாதவிடாய் காலத்தை மேலும் சிரமம் ஆக்குகிறது. இந்த பிரீ மென்சுரல் சிண்ட்ரோம் (Premenstrual syndrome - PMS) பிரச்னையைக் கடக்க 7 எளிய வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார், கர்ப்பவியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்பனா சம்பத். 

1). பி.எம்.எஸ்ஐ முழுமையாகக் குணப்படுத்த முடியாது. சிரமங்களைக் குறைக்க, சில மாற்றங்களுக்குப் பெண்கள் முன்வர வேண்டும். அதில் முதன்மையானது, உணவு. உப்பு, சர்க்கரை, காரம், கெஃபைன் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளவும். பீரியட்ஸ் தொடங்குவதற்கு ஒரு வாரம் இருக்கும்போதே, பழங்கள், காய்கள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவும். என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படிச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் உணவு எடுத்துக்கொள்ளவும். 

2) இன்னொரு விஷயம், உடற்பயிற்சி. உடல், மனம் இரண்டையும் பேலன்ஸ் செய்ய உடற்பயிற்சி உதவுகிறது. 'வாரத்துக்கு இரண்டரை மணி நேரம், பெண்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்கிறது ‘தி நேஷனல் விமன்ஸ் ஹெல்த் இன்பர்மேஷன் சென்டர்’. உடல் தசைகளை வலுப்படுத்துவதோடு மனதையும் ரிலாக்ஸ் செய்துகொள்ள நடைப்பயிற்சி அவசியம். 

3). குறைந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் பெண்கள்கூட, தினமும் பல மணி நேரம் உழைக்கின்றனர். பி.எம்.எஸ். பிரச்னைகளைக் குறைத்துக்கொள்ள உடலுக்கு வைட்டமின் சத்துக்கள் அவசியம். வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை, உணவு ஆலோசகரின் வழிமுறைப்படி எடுத்துக்கொள்ளவும். 

4) மாதவிடாய் காலத்துக்கு முன்னர் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வினைக் குறைக்க, வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களையே மருந்தாகவும் பயன்படுத்தலாம். இஞ்சியில் தயாரித்த பிளாக் டீ, எலுமிச்சை மற்றும் புதினா இலை சேர்த்த பானம் ஆகியவை புத்துணர்ச்சி அளிக்கும். 

5) பரபரப்பான வேலைகள் தரும் மன அழுத்தத்தைப் பெண்கள் அதிகம் சந்திக்கின்றனர். இதுவே, மாதவிடாய் சமயத்தில் கூடுதலாகும். எரிச்சல், கோபம், அழுகை என மன அழுத்தத்தைக் கூட்டும். இதுபோன்ற சமயங்களில் வேலைகளைக் குறைத்து, போதிய அளவு ஓய்வு எடுக்கவும். தேவையான அளவு தூக்கமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். யோகா மற்றும் தியானத்தின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். 

6) ஒரு சிலருக்கு இந்தக் காலகட்டத்தில் மார்பகம் பாரமாக இருப்பதுபோல தோன்றும். முகப்பரு, தலைவலி, இடுப்பு வலி போன்ற உடல்சார்ந்த வலிகள் ஏற்படும். இவர்கள், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி வலிகளைக் குறைக்கும் மருந்து உட்கொள்ளலாம். 

7) நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறு மற்றும் நீராகாரம் ஆகியவை உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும். வீட்டில் உள்ளவர்கள் பெண்ணின் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்து, ஓய்வு அளிப்பதன் வழியே வலிகளைக் கடக்க உதவலாம். 

''மொத்தத்தில், பெண்கள் தங்களது நலனில் அக்கறைகொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் மாற்றம் அல்லது வலிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்துகொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்'' என்கிறார் கல்பனா சம்பத். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்