வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (28/08/2017)

கடைசி தொடர்பு:17:29 (28/08/2017)

சர்க்கரை நோயை வருமுன் தடுக்கும்/கட்டுக்குள் வைக்க, உதவும் துளசி, நெல்லி, ஆவாரம்பூ!

மாறி வரும் தவறான உணவுப்பழக்கம்,  உடல் உழைப்பின்மை,  எடை அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சர்க்கரையை நம் உடலில் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் சில உணவுப் பொருள்களே சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றன. அப்படியான பொருள்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் அர்ஜூனன். 

சர்க்கரை நோய்

துளசி:

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

ஆளி விதை (Flax seeds):

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

ஆளி விதை

பட்டை:

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் அரை டீஸ்பூன் பட்டைப் பொடியை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரையின் அளவு குறைவதோடு, உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதய நோய்க்கான அபாயம் குறையும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் (Polyphenol) தான் காரணம். எனவே காலையில் எழுந்ததும் அல்லது உணவு உண்பதற்கு முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

முருங்கைக்கீரை:

முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து சாறாக்கி, காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும்.

பாகற்காய்:

சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாரத்துக்கு ஒருமுறை பாகற்காயைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இன்னும் வேகமான பலன் கிடைக்க, மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

பாகற்காய்

வேப்பிலை:

வேப்பிலைக் கொழுந்து எடுத்து அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு, கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

நாவல் பழம்:

தினமும் காலையில் 5 முதல் 6 நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எல்லாக் காலங்களிலும்  நாவல் பழம் கிடைக்காது என்பதால், அதன் விதைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காய், கறிவேப்பிலை ஜூஸ் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து நறுக்கி 3 ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வடிகட்டி அரை எலுமிச்சம்பழத்தின் சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் ருசித்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும். இதேபோல் ஒரு நெல்லிக்காய் அதைவிட இரண்டு மடங்கு அளவில் பெரிய பாகற்காய் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

திரிபலா சூரணம்:

தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகள் மற்றும் பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் (நெல்லிக்காய் வற்றல், கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல் ஆகியவற்றின் கலவையே திரிபலா சூரணம்).

ஆவாரம்பூ:

ஆவாரம்பூ 200 கிராம், சுக்கு சிறு துண்டு, ஏலக்காய் 3, உலர்ந்த வல்லாரை இலை 200 கிராம், சோம்பு இரண்டு டீஸ்பூன் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மி.லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பாதியாக வற்றியதும் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆவாரம் பூ

இவை பக்கவிளைவில்லாத எளிய மருத்துவம். இவற்றை நோய் இல்லாதவர்களும் அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.


டிரெண்டிங் @ விகடன்