வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (29/08/2017)

கடைசி தொடர்பு:19:46 (29/08/2017)

தடகள வீரரை புற்றுநோயில் இருந்து மீட்க 5 நாளில் 37 லட்சம் திரட்டிய நண்பர்கள்! #SaveBlumen #FightCancer

டந்த சில நாள்களாக  #SaveBlumen, #FightCancer போன்ற கேஷ்டேக்குகளோடு ஏராளமான செய்திகள் சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன. ப்ளூமென் பற்றி பல இணையதளங்களில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. தமிழகத்தின் பிரபல பிண்ணனிப் பாடகிகள் எல்லாம் இணைந்து, ப்ளூமென்னுக்காக நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். 

ப்ளூமென்

வேளச்சேரியிலுள்ள 'கிராண்ட் மால்'-லில் ப்ளூமென்னுக்காக ஒரு இசை நிகழ்ச்சி நடப்பதாகத் தகவல் வர, அங்கு சென்றோம். அரங்கில், மெல்லிய சோகம் படர்ந்திருந்தது. நடிகர் ஆரி, பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், நடிகை பூர்த்தி பிரவீன், பாடகி நதிஷா தாமஸ், திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் நரேன், நடிகர் சனந்த் உள்பட பலரும் இருந்தார்கள். 

"யார் அந்த ப்ளூமென்..? அவருக்கு என்ன ஆனது?" 

ப்ளூமென் ராஜன் சத்யா எங்களுக்கு நெருங்கிய நண்பர். அதுமட்டுமல்ல... இந்தியாவே போற்றிக் கொண்டாட வேண்டிய தடகள வீரர். தமிழகத்தின் சார்பில் மூன்று முறை தேசியப் போட்டிகளில் பங்கேற்றவர். மாநில அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. மிகச்சிறந்த பாடகர், கிடாரிஸ்ட். ஒரு ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜர். "27 வயதுதான்.  எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை.நன்றாக சாப்பிட்டு திடகாத்திரமாக இருந்தார். அலுவலகம், இசை, விளையாட்டு மைதானம் என்று சுற்றிக்கொண்டிருந்த ராஜனுக்கு  2013-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. திடீரென உடல் எடையும்  குறைந்தது. எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. 'உடம்பைக் கவனி' என்று சொல்லும்போதெல்லாம்  'சூளைமேட்டிலிருந்து சதர்லேண்ட் வரைக்கும் போய் வர்றேன்ல, அதனால ஏற்படும் அலைச்சல் தான் காரணம்' என்று கூறுவார். கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். சில மாதங்கள் தொடர் சிகிச்சை பெற்றபிறகு உடல்நலம் தேறினார். மீண்டும் 2014, டிசம்பர் மாதம் உடல்நிலை மோசமானபோதுதான் அவருக்கு 'ரத்தப் புற்றுநோய்' இருப்பது தெரிய வந்தது.  2014 முதல் 2016 வரை சிகிச்சைக்காக மட்டும் 25 லட்சம் ஆனது. குணமடைந்து இயல்பாக வாழ ஆரம்பிக்கும்போது மீண்டும் வேலையை தொடங்கி விட்டது புற்றுநோய்.. கடந்த மாதம் மருத்துவமனைக்குச் சென்ற ராஜன், இன்னும் வீடு திரும்பவில்லை. 

ரத்தப் புற்றுநோய்

'ஸ்டெம்செல் ட்ரான்ஸ்பிளான்டேஷன்'  ஒன்று தான் தீர்வு என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.  அவரைக் குணப்படுத்தி மீண்டும் அவரது ஆரோக்கியமான மலர்ந்த முகத்தைப் பார்க்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்.." என்கிறார் அபிஷேக். 

அதென்ன ஸ்டெம்செல் ட்ரான்ஸ்பிளான்டேஷன்?

ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வெங்கடேஷ் விரிவாக விளக்கினார். மருத்துவர் வெங்கடேஷ்

“இன்றைய நிலையில் மருத்துவத் துறையின் மிகவும் பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த ஸ்டெம் செல் ட்ரான்ஸ்பிளன்டேஷன். செல் என்றால் உயிரணு. இது மூன்று வகைப்படும். மெச்சூர் செல், ஸ்டெம்செல், கேன்சர் செல். நாம் கருவில் இருக்கும்பொழுது அனைத்து செல்களும்  ஸ்டெம் செல்களாகத்தான் இருக்கும். பிறந்து வெளியில் வரும்பொழுது ஸ்டெம் செல்கள் மெச்சூர் செல்களாக மாறிவிடும். இப்போது நமது கை, கால், கண், மூக்கு என எது எடுத்துக்கொண்டாலும் அது மெச்சூர் செல்களால் ஆனதுதான். ஆனாலும் நாம் வளர்ந்து பெரிய ஆளான பிறகும் கூட நம் உடம்பில் சில இடங்களில் ஸ்டெம்செல் இருக்கிறது. 10 கோடி மெச்சூர் செல் இருக்கிறது என்றால் ஒரு ஸ்டெம் செல் எங்கேயோ ஒளிந்துகொண்டு இருக்கும்.

நமது உடலில் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் அந்த  ஸ்டெம்செல்லைக் கண்டுப்பிடித்து, பண்படுத்தி சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்றால் யோசித்து பாருங்கள். ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றாலே பல்லாயிரம் ரூபாய் மொய் வைக்க வேண்டிய நாட்டில் நாம் இருக்கிறோம். இவ்வளவு நுணுக்கமான ஒரு செயலைச் செய்ய கட்டாயம் நம் பேங்க் அக்கௌன்ட் கொஞ்சம் அல்ல நிறைய பேலன்சோட இருக்க வேண்டும்.

இந்த ஸ்டெம்செல், கேன்சர் சிகிச்சையில் எப்படி உதவுகிறது? 

ஒருவருக்கு கையில் கேன்சர் இருக்கிறது என்றால் முதலில் கீமோதெரபி கொடுத்து, கையில் இருக்கும் எல்லா செல்லையும் அழித்துவிடுவோம். பிறகு வேறு ஒருவரிடம் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்லை பாதிக்கப்பட்டவரின் உடம்பில் விதைத்து விடுவோம். இது ஒரு வளமான நிலத்தில் விதைகளை தூவுவது போன்ற ஒரு பிரெஷ் ஆக்க்ஷன். நாம் விதைத்த ஸ்டெம் செல்லானது பல்கிப் பெருகி மெச்சூர் செல்லாக மாறி தனது வேலையைத் தொடங்கிவிடும்.

கேன்சருக்கு, கீமோதெரபி, ரேடியோ தெரபி என இரண்டு முறையான முதல்நிலை சிகிச்சைகள் இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும் குறைந்த செலவில் அனைவரும் பெறலாம். இந்த சிகிச்சை பயனளிக்காத நிலையில் தான் நாம் ஸ்டெம்செல் தெரபிக்குச் செல்ல வேண்டும். உடன்பிறப்புகளின் ஸ்டெம்செல் ஒத்துப்போகலாம். ஒத்துப்போகாத நிலையில் ஒரே மரபணு கொண்டவர்களிடம் இருந்து தானம் பெறவேண்டும். ப்ளூமென் ராஜனுக்கு இப்போது இந்த ஸ்டெம்செல் தெரபி சிகிச்சை தான் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு குறைந்தபட்சம் 45 லட்சம் செலவாகும்.." என்கிறார்  வெங்கடேஷ்.   

இசை நிகழ்ச்சி

ப்ளுமென் ராஜனின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவது மட்டுமின்றி, ஸ்டெம்செல் தானம் பற்றி விழிப்புஉணர்வு ஊட்டும் வகையில் அமைந்திருந்தது அந்த நிகழ்ச்சி. 

முதல்வர் இருதயராஜ்ப்ளூமென் ராஜன் சத்யா படித்த, சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியின் முன்னாள் முதல்வர் இருதயராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் தனது அண்ணனுக்கு ஸ்டெம் செல்களைத் தானம் வழங்கி உயிர் கொடுத்தவர். "எனது அண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக எனது ஸ்டெம் செல்கள் அண்ணனுக்கு மேட்ச் ஆகிவிட்டது. அவருக்கு 4 முறை கீமோதெரபி அளித்த பின்னர் எனது ஸ்டெம்செல்கள் அவருக்கு ஏற்றப்பட்டது. நான் ஸ்டெம் செல் தானம் செய்யும்பொழுது எனக்கு வயது 45. என்னுடைய அண்ணனுக்கு 59. ஆகவே உடல்நிலை சீராவதற்கு கொஞ்ச காலம் தேவைப்படும். ஆனால் ப்ளூமென் விஷயத்தில் அப்படி இல்லை. இளம் வயதில் இவருக்கு இந்த சிகிச்சை தரப்படுவதால் அவர் சீக்கிரமாக குணம் பெற முடியும்.." என்றார் அவர்.  பிங்கி

ப்ளூமென் ராஜனின் சகோதரி பிங்கி வந்திருந்தார். 

"ப்ளூமென் ரொம்ப திறமைசாலி.  சிறந்த விளையாட்டு வீரன்... சிறந்த இசைக்கலைஞன்... சிறந்த படிப்பாளி. அவனுக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கு. முதல்முறை உடல்நலம் குறைவில் இருந்து மீண்டு ஒரு இசைப்பள்ளி தொடங்கி அதற்கு 'ப்ளூஸ் ம்யூசிக் ஸ்கூல்' என்று பெரியரிட்டு  நடத்தி வந்தான். இந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் அதைத் தொடருவான். அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறைய இருக்கிறது" என்று புன்னகைத்தார்.

நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இசைக் கலைஞர்களும் பாடினார்கள். தொடர்ந்து  5 நாள்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.  37 லட்சம் ரூபாய்  நிதி திரண்டது. 

"எல்லாம் ப்ளூமென்ங்கிற நல்ல மனிதனோட மனசுக்குக் கிடைச்சது. டான்போஸ்கோ பள்ளி மாணவர்கள்  நிதி திரட்டி கொடுத்தாங்க. மாலுக்கு பர்ச்சேஸ் பண்ண வந்த முகம் தெரியாத நிறைய பேர், நிதி கொடுத்தாங்க. இந்த கிராண்ட் மால்ல நிகழ்ச்சி நடத்தணுன்னா ஒரு நாளைக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும்.

இசை நிகழ்ச்சி

ஆனால் இந்த மாலின் உரிமையாளர் ஒரு ருபாய் கூட வாங்காம இலவசமா இடம் தந்தார். இப்படி எல்லாரோட கரங்களும் இதில் இருக்கு. நிச்சயம் ப்ளூமென் குணமடைஞ்சு பழைய மாதிரி தடகள களத்துக்கும் இசைமேடைகளுக்கும் வருவான்..." என்கிறார் அபிஷேக்.
நிச்சயம் வருவார் ப்ளூமென்!


டிரெண்டிங் @ விகடன்