வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (30/08/2017)

கடைசி தொடர்பு:20:04 (30/08/2017)

'சித்த மருத்துவத்தின் தந்தை' அகத்தியரின் குறிப்புகளை புத்தகமாக்கும் பணி தீவிரம்!

'சித்த மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் அகத்தியர் பிறந்த நாளான ஜனவரி 4-ம் தேதி, சித்த மருத்துவ தினம் கொண்டாடுவது குறித்து விவாதிக்க தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது. சித்த மருத்துவத்துக்கென்று பிரத்யேக ஆராய்ச்சி நிறுவனமாக 1971 –ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம். கடந்த 40 ஆண்டுகளாக, சித்த மருத்துவ ஆய்வுகளையும் மருந்து தரப்படுத்தும் ஆய்வுகளையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அகத்தியர்


“சித்தர் அகத்தியரின் பெருமையும் சித்த மருத்துவத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும்” என்ற தலைப்பில்  நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையாளரும் தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலருமான மோஹன் ப்யாரே தொடங்கி வைத்துப் பேசினார்.  மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் (CCRS) தலைமை இயக்குநர் சித்த மருத்துவர் ஆர். எஸ்.ராமசுவாமி  தலைமை தாங்கினார். ஹோமியோபதி துறையின் முன்னாள் இணை இயக்குநர் டாக்டர் வி.சுப்பிரமணியன், டாக்டர் குமாரவேல், தேசிய சித்த மருத்துவ நிலைய தலைவர் டாக்டர் பி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநர் ப. சத்தியராஜேஸ்வரன், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும அலுவலர் டாக்டர் எம்.கண்ணன் ஆகியோர் பேசினர். 

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் வரலாற்று ஆய்வறிஞர்கள், நாட்டுப்புற ஆய்வாளர்கள், கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சித்த மருத்துவ அறிஞர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். இதில் சித்தர் அகத்தியரின் மருத்துவம், ஜோதிடம், தமிழ் மொழி, ரசவாதம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்கும், அவருடைய மேன்மைகளை விளக்கும் வகையில் ஆய்வறிக்கைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

சித்த மருத்துவமனை


சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி,  வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் சாந்தகிரி சித்த மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த சித்த மருத்துவ மாணவர்கள் 46 ஆய்வுச் சுருக்கங்களை தங்களது மருத்துவ ஆய்வு சுவரொட்டிகளாக (Poster Presentation) காட்சிப்படுத்தினர்.  இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மருத்துவ ஆய்வு சுவரொட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மேலும், கருத்தரங்கில் முக்கிய நிகழ்வாக அகத்தியர் பிறந்த தினத்தை சித்த மருத்துவ தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பதினெண் சித்தர்களில் முதன்மைச் சித்தர் அகத்தியர் ஆவார்.  இவர் மார்கழி மாதம், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக அறியப்படுகிறது. ஆகவே அந்த நாளை `சித்த மருத்துவ தினம்' ஆக கொண்டாட  மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் முன்மொழிந்தது. அதை ஏற்று  ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்தது.  மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நட்சத்திர வரிசைப்படி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

அகத்தியர் சித்த மருத்துவ தினம்


கருத்தரங்கு குறித்து சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தின் இணை ஆய்வர் டாக்டர் ஆர்.சைலஜா நம்மிடம் பேசியபோது,
``எங்களது நிறுவனம் இதுவரை காளாஞ்சகப்படை (Psoriasis) நோய்க்கும், சர்க்கரை நோய்க்குமான 2 மருந்துகளுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றுள்ளது. மேலும் இதுவரை 2௦௦-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளை மருத்துவ ஆய்வு இதழ்களில் பதிப்பித்துள்ளது.  35-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சித்த மருத்துவ இலக்கிய ஆவணத்துறையில் பழைய சுவடிகளில் உள்ள மருத்துவ விவரங்களை புத்தகமாக வெளியிடுவது, சுவடிகளைப் பாதுகாப்பது மற்றும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கருத்தரங்கில் சேகரிக்கப்பட்ட அகத்தியர் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து, முதல் சித்த மருத்துவ தினத்தில் புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

அரும்பாக்கம் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவப் பிரிவு, சிறப்பு வர்ம மருத்துவப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, சிறப்பு முதியோர் மருத்துவப் பிரிவு, சிறப்பு குழந்தைகள் மற்றும் மகளிர் நலப்பிரிவு ஆகிய மருத்துவப் பிரிவுகள் புறநோயாளர் பகுதியில் செயல்பட்டு வருகின்றன!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்