Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொப்பையைக் கரைக்கும், ஒற்றைத்தலைவலியைப் போக்கும், தொண்டைக்கு இதம் தரும் அன்னாசி!

அன்னாசிப் பழம்... பேச்சு வழக்கில் `அண்ணாச்சிப் பழம்' என்று தவறுதலாகச் சொல்லப்படுவதும் உண்டு. `செந்தாழை’, `பூந்தாழப் பழம்’ என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்தப் பழம் செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்டது.

அன்னாசி

பிரேசில் நாட்டின் தென்பகுதி மற்றும் பராகுவே ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசியில் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல்ஸ் போன்ற முக்கியச் சத்துகளும் இதில் அடங்கியுள்ளன. கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசியில் புரதம் மற்றும் இரும்புச்சத்துகளும் உள்ளன.
100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். கூடவே மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும். மலச்சிக்கல் தீர இதே கலவையை இரண்டு மடங்கு அதிகமாக அருந்தினால் பிரச்னை நீங்கும். 

அன்னாசி ஜூஸ்

தொண்டைப் புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசிப்பழச் சாறு பலனளிக்கும். இந்தச் சாற்றால் வாய் கொப்புளித்தால் தொண்டை அழற்சியிலிருந்து விடுபடலாம்.  மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை இந்தப் பழத்துக்கு உண்டு. மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் சாற்றை அருந்தி வந்தால் சீக்கிரம் குணமடைவார்கள். 

`அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பழச் சாறு சிறந்த டானிக். நன்றாகப் பழுத்த அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் (தூசி படாமல்) உலர்த்தி, வற்றலாக்கிக்கொள்ளுங்கள். அதில் ஐந்தாறு அன்னாசி வற்றல்களை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து ஊறவைத்து, தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட வேண்டும். இப்படி 40 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் ஊறும்; அனீமியா விலகும்.

பித்தத்தால் வரக்கூடிய வாந்தி, கிறுகிறுப்பு, பசி, மந்தம் விலகவும் அன்னாசி நல்மருந்து. இந்தப் பழத்தில் புரதச்சத்து தாராளமாக இருப்பதால் செரிமானக் கோளாறு, உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். குறிப்பாக இளம் பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையைக் கரைக்கும் சக்தி படைத்தது அன்னாசி.

அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழத்தை (பாதி அளவு) எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு டீஸ்பூன் ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் மூடிவைக்க வேண்டும். இரவில் இப்படிச் செய்த அந்தக் கலவையை மறுநாள் காலை வெளியே எடுத்து நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 10 நாள்கள் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும்.

அன்னாசிப்பழத்தை ஜாம், ஜூஸ், வற்றல் செய்தும் சாப்பிடலாம். அன்னாசிப்பழப் பாயசம் மிகவும் ருசியானது. தொடர்ந்து 40 நாள்கள் இந்தப் பாயசத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல்நலம் மேம்படும். உடல் பளபளப்பாக மின்னும். பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி படைத்தது இந்தப் பழம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்கொண்டது.

இத்தனை நன்மைகள் கொண்ட இந்தப் பழத்தில் சில தீமைகளும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும். இயற்கை சர்க்கரையை இது கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மேலும், இன்சுலின் அளவை அதிகரித்துவிடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்டிபயாடிக், வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவோர் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், இந்தப் பழத்தை அதிகம் உட்கொண்டால் பற்களில் கறையை ஏற்படுத்திவிடும். பற்களின் எனாமலின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திவிடும்.

கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதால், கருத்தரித்த ஆரம்ப நாள்களில் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்தப் பழம் குடல், இரைப்பைக்குள் செல்லும்போது ஆல்கஹாலாக மாறி, கீல் வாதத்தை தூண்டிவிடும். எனவே, கீல்வா தம் மற்றும் முடக்கு வாதம் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும் பழுக்காத அன்னாசியைச் சாப்பிட்டால், அது நச்சாக மாறிவிடும். எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது. இதில் அதிக அளவில் அமிலத் தன்மை உள்ளதால் பழம் சாப்பிட்டதும் தொண்டையில் ஏதோ ஊறுவதுபோல இருக்கும். சிலருக்கு வயிற்று வலியும் ஏற்படலாம். கவனம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement