வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (08/09/2017)

கடைசி தொடர்பு:11:34 (08/09/2017)

கர்ப்ப காலத்திலேனும் இயற்கையின் பக்கம் திரும்புங்கள் சகோதரிகளே... - ஒரு மருத்துவரின் ஆதங்கக் கோரிக்கை!

திருமணம் முடிந்து சில மாதங்களில், முதல் முறை மாதவிடாய் தள்ளிப் போனதும், வெட்கத்தோடு ‘நீங்க அப்பா ஆகப் போறீங்க’, என்று மனைவி தன் கணவனிடம் செய்தியை வெளிப்படுத்திய காலம் மாறிவிட்டது. கர்ப்ப காலத்தில் தோன்றும் இயற்கையான குறிகுணங்களுக்குப் பயந்து, அந்த மகிழ்ச்சியை பலர் அனுபவிப்பதே இல்லை என்கிறது ஓர் ஆய்வு. கர்ப்பகால குறிகுணங்களை நோயாக எண்ணி அதற்கான மருந்துகளைத் தேடி ஓடும் அவலம்தான் இன்று அதிகம்.

இயற்கையை ரசிக்கும் கர்ப்பிணி

மாத்திரைக் காலம்:

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் உண்டாகும் வாந்தி, தலைசுற்றல், செரியாமை போன்ற குறிகுணங்களுக்கு சீரகத்தையும், ஓமத்தையும், பழங்களையும் நம்பி வாழ்ந்தபோது பிரச்னையில்லை. இவற்றையெல்லாம் உதாசினப்படுத்தியதுதான் மாத்திரைகளுக்கு அடிமையானதற்கு முக்கிய காரணம். எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை எதிர்பார்த்து வாழும் காலத்தில், கர்ப்பகாலம் மட்டும் தப்பித்துவிடுமா என்ன? 

நோயல்ல வரம்:

கர்ப்பிணிகளுக்குத் தோன்றும் குறிகுணங்களுக்குத் தகுந்த இயற்கை மருந்துகள் தாராளமாக இருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கர்ப்பகாலத்தில் செயற்கை மருந்துகளின் துணையோடு வாழும் கட்டாயமும் இருந்ததில்லை. மகப்பேறு காலம் என்பது ஒரு நோய்நிலை அல்ல. நவீன சமுதாயம் என்று கர்ப்ப காலத்தை நோயாகப் பார்க்கத் தொடங்கியதோ அன்றிலிருந்துதான் பிரச்னையே. செயற்கை மருந்துகளின் துணை இல்லாமலேயே, இயற்கையின் துணையோடு, கர்ப்ப காலத்தை எளிமையாகக் கடக்கலாம்.

வாந்தி எடுப்பதைக் கொண்டாடும் மக்கள்:

“எம்புள்ள வாந்தி எடுதுட்டா, நான் பாட்டி ஆகப்போறேன்!” என்று புதுப்பெண் வாந்தி எடுத்ததை ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அம்மாக்களும் மாமியார்களும் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதுவே மறுபுறம், ‘வாந்தி வருது டாக்டர், ஸ்டாப் பண்ண எதாவது மருந்து இருந்தா என் பொண்ணுக்குச் சொல்லுங்க’ என்று மருத்துவரை நாடும் மாடர்ன் அம்மாக்களும் இருக்கின்றனர். கர்ப்பம் தரித்தவுடன் உண்டாகும் ஹார்மோன் மாறுதல்களால் வாந்தி வருவது ஆரோக்கியமான அறிகுறி. அடிக்கடி அதிகளவில் வாந்தி வெளியாகி (Hyperemesis gravidarum), உடல் நிலை பாதிக்கப்படுவதாய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம். இல்லையெனில் இயற்கையான மருந்துகளே போதுமானது. சிலர் அதிகப்பிரசங்கித்தனமாக, தாமாகச் சென்று மருந்தகங்களில்        ”ஓய்ஃபுக்கு வாந்தி அதிகமா இருக்கு… எதாவது மருந்து இருந்தா கொடுங்க” என்று வாங்கிச் செல்லும் போக்கும் இருக்கிறது. திடீர் மருத்துவர்களாக உருவெடுத்து, மருந்துகளைக் கொடுத்தால் வளரும் கரு பாதிக்கப்படும். அதிகளவில் வாந்தி வெளியாகும் நிலையில், மாதுளை மணப்பாகு, ஏலாதி மாத்திரை போன்ற இயற்கையான சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். வாந்தியை நிறுத்துவதோடு கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஆற்றலையும் மாதுளை மணப்பாகு கொடுக்கும். செரியாமை, உணவு எதிர்த்தெடுத்தல் தொந்தரவுகளுக்கு ஏலாதி மாத்திரை உதவும்.

மருந்து

காய்ச்சலில் மருந்து தேவையா:

கர்ப்ப காலத்தில் சுரம் இருப்பின், ஏற்கெனவே வீடுகளில் ‘ஸ்டாக்கில்’ இருக்கும் காய்ச்சல் மாத்திரைகளையும், ஆண்டிபயாடிக் மருந்துகளையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் எடுத்து சாப்பிடக் கூடாது. பழக்க தோஷத்தில் காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் மாத்திரைகளை மனம் தேடுவது தவறு. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகள் சுரம் வராமல் பார்த்துக்கொள்வதே நல்லது. மாத்திரைகளைச் சுயமாக எடுப்பதை அனைத்து நிலைகளிலும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான சிந்தடிக் மருந்துகளில், ‘கர்ப்பிணிகளுக்கு உகந்ததல்ல’ (Contraindicated in Pregnancy) என்று அட்டையில் பொரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி நடப்பது அவசியம். சில சமயங்களில் மருந்துகள் தேவைப்படாமலே கூடப் போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுரம் வந்தால் ஒரு குறிப்பிட்ட காய்ச்சல் மாத்திரையை உடனடியாக விழுங்க வேண்டும் என்ற தவறான செய்தி, கடந்த இருபது ஆண்டுகளில் நம்மிடையே புகுத்தப்பட்டிருக்கிறது. 

பழங்கள்:

புரதச் சத்து நிறைந்த உணவுகள், மாவுச் சத்து, தேவையான அளவிற்கு கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் எனச் சமச்சீரான உணவுகளைக் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டும். சோர்வாகும்போது பழங்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள். உடலில் உண்டாகும் சோர்வைப் போக்குவதன்றி, நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் குட்டி ஜீவனுக்கு ஊட்டத்தையும் அளிக்கும். பேரிச்சை, மாதுளை, அத்தி போன்ற பழங்கள் ரத்தக்குறைவு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். வாழைப்பழம் மலக்கட்டு வராமல் பாதுகாப்பதோடு, போலிக் ஆசிட் சத்தினையும் வாரி வழங்கும். கீரைகளை உணவுகளாகப் பயன்படுத்துவதன் மூலம், தாதுப்பொருள்களும் போதுமான அளவிற்கு கிடைத்துவிடும். நெல்லிக்காய் லேகியம், கறிவேப்பிலைப் பொடி போன்ற சித்த மருந்துகள், கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதன்றி, இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் மலக்கட்டு ஏற்படாமல் தடுப்பதில் கீரைகளும் பழங்களும் முக்கியப் பங்காற்றும். 

காலநிலைக்கு ஏற்ப உணவியல்:

பத்து மாத காலம் கருவை சுமக்கும்போது, ஏறக்குறைய வருடத்தின் காலநிலைகள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெயில் காலம், மழை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்ப கர்ப்பிணிகள் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் உணவு முறைகளில் கொஞ்சம் மாற்றங்களைச் செய்ய வேண்டியதும் முக்கியம். வேனிற் காலங்களில் நீரிழப்பை தடுக்க இயற்கையான பழச்சாறுகளை எடுக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் விஷங்கள் கலந்த செயற்கை குளிர்பானங்களை கர்ப்பிணிகள் குடிக்கவே கூடாது. குளிர்காலங்களில் காய்கள் நிறைந்த சூப் வகைகள் நல்ல தேர்வாக இருக்கும். மழைக்காலங்களில் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது நல்லது.

கர்ப்பிணி

வலிகளுக்கு வெளிப்பிரயோகம்:

கர்ப்ப காலத்தில் தோன்றும் கை, கால் வலி, இடுப்பு வலி போன்ற குறிகுணங்களுக்கு மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. உளுந்து தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் போன்ற சித்த மருத்துவ எண்ணெய்களை மிதமாக சூடேற்றி வலியுள்ள பகுதிகளில் தடவலாம். அடிவயிற்றுப் பகுதியில் எண்ணெயை தடவுவதன் மூலம், தசைகளுக்கு சிறிது இளகல் தன்மையும் கிடைக்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சித்த மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் இலவசமாகக் கிடைக்கும். 

கர்ப்ப காலம் உறுதியானவுடன்… மகிழ்ச்சியாய் அனுபவியுங்கள். மருத்துவ மாஃபியாக்கள் சுட்டிக்காட்டுவதைப் போல கர்ப்ப காலம் நோயல்ல… உடல் இயங்கியலில் உண்டாகும் மாறுதல்கள், கர்ப்ப காலத்தில் குறிகுணங்களாக வெளிப்படுகின்றன, அவ்வளவே. இதைப் புரிந்துகொண்டு கர்ப்ப காலத்தை உறவுகளின் துணையோடும் இயற்கை மருந்துகளின் ஆதரவோடும் எதிர்கொண்டால் ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும் காலமாக கர்ப்ப காலம் அமையும். 

கருப்பைக்குள் மெள்ள மெள்ள உருவாகும் குழந்தையின் வளர்ச்சி, கருப்பைக்குள் நிகழும் குழந்தையின் அசைவுகள், தாயின் வயிற்றுத் தசையில் எதிரொலிக்கும் அதிசயம்… விலைமதிப்பில்லா தாய்மை… தந்தையாகப் போகும் பரவசம்… இவை அனைத்தையும் வருங்கால தந்தையும் தாயும் வேறு சிந்தனையில்லாமல் ரசிப்பதே கர்ப்ப காலம்! ரசிப்போம்!...


டிரெண்டிங் @ விகடன்