வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (08/09/2017)

கடைசி தொடர்பு:18:24 (08/09/2017)

நீங்கள் மனது வைத்தால் இரண்டு பேரின் இருட்டை விரட்டலாம்! #NationalEyeDonationDay 

தேசிய கண் தான தினம் இன்று. கண்கள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றால், சிரசுக்கு கண் தான் பிரதானம். இந்தியாவில் சுமார் ஒன்றரைக் கோடி பேர் பிறப்பில் அல்லது விபத்து காரணமாக பார்வைத்திறன் இழந்து தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறுவதன் மூலம் பார்வையிழந்து தவிக்கும் பெரும்பாலானோருக்கு ஒளியூட்ட முடியும். அப்படியான கண் தானத்தின் தேவையையும் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 8-ம் தேதி தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

கண் தானம்

பார்வை பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர்  'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கார்னியா எனும் விழி வெண் படலம் பாதிப்பு அடைந்தவர்களின் கண்களுக்குள், ஒளிக் கதிர்கள் ஊடுருவுவதில்லை. கண்களில் கிருமித்தொற்று,  அடிபடுவது, ஊட்டச்சத்துக் குறைவு, தவறான கண் சிகிச்சை, அதிக ஒளியை பார்ப்பது போன்ற பல காரணங்களால் கார்னியா பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விட்டு, தானமாக கிடைத்த கண்ணின் கார்னியாப் பகுதியை மட்டும் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கண் தான தினம்

கண்தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  சர்க்கரை நோய், ஆஸ்துமா, காசநோய் வந்தவர்கள் கூட கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் காரணமாக இறந்தவர்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய், வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் வந்தவர்கள் மட்டுமே கண் தானம் வழங்க முடியாது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின், கண் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ஆனந்த் பாபு இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார்.  

கண் தானம்'தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 12,000 கண்கள் தானமாக பெறப்படுகிறது. இதில் ஏழு அல்லது எட்டாயிரம் கண்கள் மட்டுமே தகுதியான கண்களாக தேர்வாகி பார்வையிழந்தவர்களுக்குப் பொருத்தப்படுகிறது. கண்ணில் பெறப்படும் கண்கள் பல, கிருமிகள் தாக்குதல், செல்களின் எண்ணிக்கை குறைவது போன்ற காரணங்களால்  தகுதியற்றவை ஆகி விடுகின்றன. இதனால் இன்னும் ஐந்தாயிரம் கண்களுக்கு மேல் நமக்கு ஆண்டுதோறும் தேவைப்படுகிறது. முன்பிருந்த காலகட்டத்தை விட இப்போது கண் தானம் குறித்த விழிப்புணர்வு பெருகி உள்ளது. ஆனால் கண் தானம் அந்த அளவுக்கு நடை பெறவில்லை என்பதே உண்மை.

மருத்துவமனைகளில் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கண் தானம் செய்வதை யாரும் உறுதிப்படுத்தமுடியாது. அப்படி செய்வதும் தவறு. பதிவு செய்தவர் மறைந்து போனால், பதட்டத்தில் அவர்கள் வீட்டினர் மருத்துவமனைக்கு தகவல் கொடுப்பதில்லை. கண் தானம் கொடுக்க பதிவு செய்தவர்கள் பற்றி ஒவ்வொரு தெருவிலும் ஒரு பதிவேடு பராமரிக்கலாம். பதிவு செய்தவர் இறக்க நேர்ந்தால் அந்தத் தெருவைச் சேர்ந்த எவரும்  மருத்துவமனையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.  சென்னை எழும்பூர் மருத்துவமனையை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 600 கண்கள் தானம் பெறுகிறோம். அதில் 400 கண்கள் பொருத்தப்படுகின்றன. 200 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் இந்த அரசு கண் மருத்துவமனை உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் 'வீணாக புதைக்கப்படும் உங்கள் கண்களை தானமாகக் கொடுங்கள்; ஒளியிழந்த இருவர் வாழ்க்கை உங்களால் பயன் பெறட்டும் என்பது தான்.." என்கிறார் ஆனந்த் பாபு. 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்