Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவிலக்குக் கோளாறு நீக்கும்; தாம்பத்யம் சிறக்க உதவும் நீர் முள்ளி!

நீர் முள்ளி... தமிழர் வாழ்க்கையோடு பிணைந்த ஒரு மூலிகைச்செடி. முண்டகம்,  நிதகம், இக்குரம், காகண்டம், தூரகத மூலம் என்ற பெயர்களில் இலக்கியங்களில் போற்றிப் பாடப்படும் இந்தச் செடியின் தாவரவியல் பெயர் Asteracantha Longifolia. குறுகலான ஈட்டி வடிவத்தில் இலைகளையும் நீலக் கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கணுக்களில் அணில் பற்களைப் போன்ற வெள்ளை நிற முட்களையும் கொண்டது. 60 செ.மீ வரை வளரும். சதுரமான இதன் தண்டுப்பகுதியில் சிறு முடிகள் காணப்படும். பூ ஒரு செ.மீ நீளம் இருக்கும்.விதைகள் கறுமையான காணப்படும்.

நீர் முள்ளி

குத்துச் செடியான இது நீர் நிறைந்த பகுதியில் தானாக வளரக்கூடியது. செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்கும். தமிழகம் எங்கும் காணப்படும் இந்தச் செடி முழுவதும் மருத்துவப் பயனுள்ளது. முக்கியமாக சிறுநீரைப் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது. வெண்புள்ளி, மேகநீர், சொறி சிரங்கு, சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சல், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்வதோடு ஆண்மைப் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நீர் முள்ளியின் சமூலத்தை (முழுச் செடி) கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தை காலை மாலை என அருந்தி வந்தால்  கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி விடும். நீர் முள்ளியுடன் திரிபலாச் சூரணம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வாயுக்களின் சீற்றத்தாலும் செரிமானக் கோளாறுகளாலும் ஏற்படக்கூடிய வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த இதன் இலைகளைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களும் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களும் நீர் முள்ளிக் கஷாயத்தைக் குடித்து வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகி தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.

தாம்பத்யம்

இதன் விதையைப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, நீர் கோத்தல், இரைப்பிருமல், மேக நோய் போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன் ரத்தத்தைச் சுத்திகரித்து ஆண்களுக்கு உயிரணு ஊறச் செய்யும். 40 கிராம் நீர் முள்ளி விதை, 20 கிராம் நெருஞ்சில் விதை, 10 கிராம் வெள்ளரி விதை சேர்த்துச் சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மி.லி அளவாகக் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு வாரம் தொடர்ந்து காலை மாலை என குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும். அத்துடன் நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர் நீங்கி உடலில் உள்ள தாதுக்கள் வலுப்பெற்று உடல் பலம் பெறும்.

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் தாது பலப்படும். அத்துடன் தாம்பத்யத்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். நீர் முள்ளிச் சமூலம் 200 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி சிதைத்து அதனுடன் பெருஞ்சீரகம், நெருஞ்சில் விதை, தனியா தலா 50 கிராம் சேர்த்து இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். அதில் 125 மி.லி வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்து வந்தால் பருத்த உடல் வாகு கொண்டவர்கள் உடல் மெலியத் துவங்குவர். அத்துடன் வாத வீக்கம், கீல் வாதம், அழற்சி போன்றவை மூன்று நாள்களில் சரியாகும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும்.

நீர் முள்ளி விதையை ஐந்து விரலால் அள்ளும் அளவு எடுத்து இரவில் ஒரு செவ்வாழைப் பழத்தின் உள்ளே வைத்து விட வேண்டும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இப்படி 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாது பலப்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும். இதேபோல் அமுக்கராங் கிழங்கு, ஓரிதழ் தாமரை, பூனைக்காலி விதை, ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் நீர் முள்ளி விதை அனைத்தையும் சம அளவு எடுத்துத் தூளாக்கி கோலிக்குண்டு வருமளவு எடுத்து தேனுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement