அவநம்பிக்கையைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும் ஆர்ட்தெரபி- இது புதுசு!

ஆர்ட்தெரபி... இதென்ன புது சிகிச்சை? என்று நீங்கள் ஆச்சர்யத்துடன் கேட்கலாம். ஒற்றை வரியில் சொல்வதென்றால் மனநலம் சார்ந்த ஒரு புதிய சிகிச்சை முறை. பொதுவாக மனநலம் சார்ந்த சிகிச்சைகளில், நம்மில் பலரும் கவுன்சிலிங்கை மட்டுமே அறிவோம். ஆனால், சமீப காலமாக, அத்துறை பல்வேறு வடிவிலான மாற்றங்களையும் ஏற்றங்களையும் பெற்றிருக்கிறது. அதில் ஒன்றுதான், ஆர்ட்தெரபி. 

ஆர்ட்தெரபி

கோபம், மன உளைச்சல், சுபாவங்களில் கோளாறு என பலருக்கும் ஆர்ட் தெரபி நல்ல தீர்வு தருகிறது. இந்த சிகிச்சையில் பொதுவாக கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்றுவிதமான கதவுகளை வரையும்படி சொல்வார்கள். அப்போது சிலர் பெயின்டிங்கையும் சிலர் களிமண்ணையும் இன்னும் சிலர் கோலத்துக்கான மெட்டீரியலையும் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதை வைத்து அவர்களுக்கான சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்.

 ஆர்ட்தெரபி என்றால் என்ன?  மற்ற தெரபிகளில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? 

ஆர்ட்தெரபிஸ்ட் ஹேமலதாவிடம் கேட்டோம்.

"உடலுக்கும் மனதுக்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு. அதேபோல, வார்த்தைகளைத் தாண்டிய ஒரு உலகம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக இருக்கும். அதில் சிலர், பிடித்த ஏதாவது ஒரு கலைவடிவத்தை மனதுக்குள் புதைத்து, அதை வெளிக்கொணர வேண்டும் என்றஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதா ஏக்கத்தோடும், அதே அளவு அழுத்தத்தோடும் இருப்பார்கள். அதற்கு வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சில சந்தர்ப்பங்களே காரணமாக இருக்கும். இவ்வாறானவர்கள், அதிகம் பேசாதவர்களாகவோ, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாதவர்களாகவோ இருப்பதுண்டு. அதனாலேயே எங்கள் தெரபியில் பேச்சுக்கலையை கடைசிக் கட்டத்தில்தான் பயன்படுத்துவோம்.  

கலை வகைகளில் ஓவியம், நடனம், களிமண் ஆக்கம், நுட்பக் கலைகள் ஏராளமான கலைகள் உள்ளன. இந்தக் கலைகளில் ஏதாவதொன்றில் சிலருக்கு புலமை இருக்கும். இன்னும் சிலர்  இவை அனைத்திலும்கூட கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். மேலும், எங்களுக்குத் தெரிந்த கலைகளையும் தாண்டி, பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு என்ன மாதிரியான கலை உணர்வு இருக்கிறது, என்ன மாதிரியான கலையில் ஆர்வமாக இருக்கின்றனர், எப்படிப்பட்ட கலை அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதை முதலில் கண்டறிவோம். சிலர், நாங்கள் நினைத்துப் பார்த்திராத நுட்பமான சில விஷயங்களைக் கலையாக எடுத்துக்கொண்டு செய்வதுண்டு. 

ஒருவரின் திறன் மற்றவருடன் ஒத்துப்போகாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் என்னென்ன கலைகள் தெரிந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அடுத்து வரும் சில அமர்வுகளில் அது குறித்துப் பேசுவது, அதுகுறித்த விஷயங்களை அவர்களிடம் ஆலோசிப்பது என இருப்போம். அடுத்து வரும் நாள்களில்  (எப்போது அவர்கள் இயல்பான நிலையில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வருகிறதோ), அவர்களைப் பாதித்த விஷயம் எது என்று நேரடியாகக் கேட்போம். அதுகுறித்த ஆலோசனைகள் அவர்களுக்குத் தரப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆர்ட் பொருள்கள்

ஆர்ட் தெரபியின் அடிப்படை நோக்கம் என்ன?

கலை வடிவங்களின் மூலம், பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரது மனதை சரிசெய்ய வேண்டும் என்பதே  அடிப்படை நோக்கமாகும். கலை ஆழ்மனதைத் தூண்டிவிடக்கூடியது என்பது எங்களது அடிப்படை எண்ணம். ஒருவர் கடமைக்காகச் செய்யக்கூடிய ஒரு செயலுக்கும், மிகவும் இயல்பாக ஆழ்மனதில் இருந்து செய்யும் செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

ஒரு செயலை அவர்கள் இயல்பாகச் செய்யும்போது, அடிக்கடி ஆச்சர்யப்படுவர், மகிழ்ச்சியடைவர், மிக முக்கியமாகத் திருப்தியடைவர். இவ்வாறான உணர்ச்சிகள், அவர்களது யோசனைத் திறனைத் தூண்டியபடி இருக்கும். சுற்றியிருக்கும் மகிழ்ச்சிச் சூழலை உணர்ந்துகொள்ளத் துவங்குவர். அந்த கட்டத்தில் அவர்களை ஒருவர் பாராட்டிப் பேசும்போது, அவர்களது ஆழ்மனதின் விஷயங்கள், அழுத்தங்கள் வெளிப்படுவதுடன் அவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வர். அன்பு காட்டுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு பாராட்டுகளும் ஒருவருக்கு முக்கியம். எங்களிடம் வருபவர்கள்மீது அன்பு காட்டுவதற்கும், பாராட்டுவதற்கும் நாங்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் கலை வடிவம்.

அதிகளவு உணர்ச்சிகள் தூண்டப்படுவது ஆபத்தை ஏற்படுத்திவிடாதா? ஆர்ட் தெரபிஸ்ட்டின் நோக்கமும் சிகிச்சைகளும் என்ன?

ஆம். ஆனால், கைதேர்ந்த ஒரு தெரபிஸ்ட்டால் மட்டுமே இதுபோன்ற சூழல்களை எளிதாகக் கையாள இயலும். பொதுவாக மனநல மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகுதான் நோயாளிகள் எங்களை அணுகுவர். எங்களது முக்கியப் பணி, ஒருவரது மனதில் உள்ள விஷயங்களை வெளிக்கொண்டு வருவதே. அதற்கு நாங்கள் பயன்படுத்தும் வழி, ஆர்ட் எனப்படும் கலை. சம்பந்தப்பட்டவர் எதனால் பாதிக்கப்பட்டுள்ளார், அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை வெளிவர உதவுவோம். அவ்வளவுதான். பெரும்பாலும் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மனநல மருத்துவருக்கு தகவல் அனுப்பி விடுவோம். அதற்குப்பிறகு அவர்கள் மனநல மருத்துவருடனான தொடர்பில் மட்டுமே இருப்பர்.

ஆர்ட்

யாருக்கெல்லாம் இந்தச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்?

இது சிகிச்சை இல்லை; ஒருவகை தெரபி. அதேபோல, இங்கு வருபவர்களை நாங்கள் நோயாளிகளாகக் கருதுவதில்லை. அவர்கள் ஆலோசனைக்காக எங்களை அணுகுபவர்களாக மட்டுமே நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வோம். உதாரணமாக, யார் ஒருவர் தன்னைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றாரோ, அவர்களுக்கு இந்த தெரபி மூலம் சில ஆலோசனைகளைப் பரிந்துரைத்து, அவர்களுடைய பாதையை அவர்களே உருவாக்க உதவிபுரிவோம். ஒருவரது தனிப்பட்டத் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம், அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை உயரும் என்ற உளவியல் உண்மையை அடிப்படையாகக் கொண்டு, இந்த தெரபி தொடரப்படும். 

அதேநேரத்தில், எங்களிடம் வருபவர்களில் கணிசமானோர் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும், குடும்ப உறவுகள் மற்றும் தத்தம் தனித்திறமைகளின் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களாகவுமே  இருப்பார்கள்.  பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற நிலையை எட்டியவர்களே இங்கு அதிகம் வருவார்கள். அந்த எண்ணத்தில் இருந்து மீள விரும்புபவர்களுக்கும் அதில் சிக்கிக்கொண்டவர்களுக்கும் மனநல மருத்துவர்களால்  இந்த தெரபி பரிந்துரைக்கப்படும்.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!