Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரவுகிறது மெட்ராஸ் ஐ... கண்கள் பத்திரம் மக்களே!

வெயில்... திடீர் மழை... மீண்டும் உடம்பை உருக்கும் வெயில் என சென்னை சீதோஷ்ணம் மாறி மாறி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் டெங்கு, இன்னொரு பக்கம் மலேரியா... போதாக்குறைக்கு இப்போது 'மெட்ராஸ் ஐ'-யும் தன் பங்குக்கு புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. 

'மெட்ராஸ் ஐ' -யை தமிழில், 'விழி வெண்படல அழற்சி நோய்' என்று கூறலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியா மூலமாக உருவாகும் ஓர் தொற்றுநோய் இது. எளிதாகப் பரவக் கூடியது.  'இன்ஜக்டிவ்ஸ் கஞ்சங்டிவிடிஸ்' (Insectious Conjunctivitis) என்னும் மருத்துவப் பெயர் கொண்ட இந்தக்கண் நோய்க்கு 'மெட்ராஸ் ஐ' என்று ஏன் பெயர் வந்தது? 

மெட்ராஸ் ஐ

1918-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் புதுவிதமான கண் நோய் ஒன்று பரவியது. குறிப்பாக சென்னை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.  சென்னையில் அதிகம் பேரை பாதித்ததால் ஊடகங்கள் இந்நோயை 'மெட்ராஸ் ஐ' எழுதத் தொடங்கின. ஒரு கட்டத்தில் அதுவே பெயராகிப் போனது. 

இதை 'பிங்க் ஐ' என்றும் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த நோயின் பாதிப்பு சென்னையில் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு இப்போது தான் பரவத் தொடங்கியிருக்கிறது. 

இதுகுறித்து,  கண்மருத்துவர் நவீனிடம் பேசினோம்.

" இது  இரண்டு வகைகளில் உருவாகும் ஒன்று பாக்டீரியா, மற்றொன்று வைரஸ். வெயில்காலங்களில் தான் அதிகமாகப் பரவுகிறது. இப்போது சீதோஷ்ண மாற்றத்தால் மெல்ல பரவத் தொடங்கியிருக்கிறது.  இந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். இதன் பாதிப்பு ஐந்து நாள்களுக்கு இருக்கும். தானாகவே சரியாகி விடும். நோயின் பாதிப்பு காலத்தைக் குறைக்க விரும்பினால் மருத்துவரை அணுகி ஆண்டி பயாக்டிக்  மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

பிங்க் ஐ

 'அடினோ'  (Adeno) என்னும் வைரஸ் மூலமாகவும் இது பரவும்.  இதனால் பாதிக்கப்பட்டால் தொண்டை கரகரப்பு உண்டாகும். கண்களை அழுத்துவது போல் இருக்கும்.  வெப்பநிலை அதிகரிக்கும். மேலும் கண்கள் பொங்கியபடி இருக்கும்.  காதருகே நெரிகட்டிக் கொள்ளும். சில நேரங்களில், கழிவுகள் சேர்ந்து கண்கள் ஒட்டிக்கொள்ளும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இந்தப் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதற்கு ஆண்டி பயாக்டிக் மட்டும் போதாது.  ஸ்டீராய்டு கலந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இது ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும்.   இந்தப் பாதிப்புள்ளவர்கள் தொட்ட பொருளை,  மற்றவர்கள் தொட்டபிறகு,  கண்களில் கை வைக்கும் போது இது பரவும். கண்களை நேரடியாகப் பார்த்தால் பரவும் என்பது தவறான தகவல்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற ஒளிரும் திரைகளைப் பார்க்காமல் இருப்பது நல்லது. கண்களில் தூசி படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கருப்புக் கண்ணாடி அணியலாம். அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவிக் கொள்வதும் நல்லது.  இதனால் பாதிப்படைந்தவர்கள் அடிக்கடி கைகளை நன்றாகக் கழுவவேண்டும்.  அப்படிச் செய்தால் தொற்று அடுத்தவர்களுக்கு பரவாமல் இருக்கும். தனியாக ஒரு அறையில் தங்கவேண்டும்.  பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை போன்ற பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது " என்றார் அவர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close