மூளை அழற்சி ஏன் குழந்தைகளைத் தாக்குகிறது? - சொல்கிறார் மருத்துவர்!

குழந்தைகள் மூளை அழற்சி நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்நோய் எதனால் ஏற்படுகின்றது... நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து சொல்கிறார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன். 

மூளையில் ஏற்படும் வீக்கம் அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கம் போன்ற காரணங்களால் மூளை அழற்சி (Brain inflammation) ஏற்படுகிறது. 

Brain inflammation

போலியோ வைரஸ்: 

போலியோ வைரஸால், மூளை அழற்சி பாதிப்பு ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே போலியோ தடுப்பூசி போடப்படுகின்றன. இதனால், தமிழ்நாட்டில் இந்த நோய்த்தொற்று பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுவதில்லை. எனவே, போலியோ சொட்டு மருந்தைச் சரியான காலத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். 

மூளை அழற்சி

ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis) வைரஸ்: 

இது கொசுக்களினால் ஏற்படும் வைரஸ். அதிலும், பன்றிகளைக் கடித்துவிட்டு நம்மைக் கடிக்கும் கொசுவினால் இந்த நோய்த்தொற்று உருவாகிறது. சுகாதார சீர்கேடு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் இருக்கும். 'கியூலெக்ஸ்' என்கிற கொசு கடிப்பதினாலேயே இவ்வித தொற்று உருவாகிறது. இதற்கு உடனடி சிகிச்சை அவசியம். பெரும்பாலும் 15 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. தற்போது, இந்த நோய் அதிகமாகப் பரவிவருகிறது. தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே நோயினை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம். 

ஜிகா வைரஸ் (zika): 

இந்த வைரஸ் பெரும்பாலும் தம்பதிகளுக்கு ஏற்படுகின்றது. இதனால், பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும். உடல் உறுப்புகள் நலமாக இருந்தாலும், மூளை வளர்ச்சி இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகள் 'ஜிகா வைரஸினால்' பாதிக்கப்பட்டவர்களே. டெங்கு காய்ச்சலுக்கு ஏற்படும் அறிகுறிகள் இதற்கும் பொருந்தும். காய்ச்சல், தோல் அழற்சி, மூட்டுவலி, தலைவலி போன்றவை 2 முதல் 7 நாள்கள் தொடர்ந்து இருக்கும். 

பாக்டீரியாவினால் மூளைக்கு ஏற்படும் பிரச்னைகள்: 

காசநோய்: 

இந்தத் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. அதையும் மீறி சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. டிபியினால் ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சலை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.

சீழ் வடிதல்: 

குழந்தைகளுக்குக் காதுகளில் ஜவ்வு கிழிந்து சீழ் வடியும். அந்தச் சீழ், மூளையைப் பாதிக்கும்போது மூளைக்காய்ச்சல் ஏற்படும். காதுகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உண்டு. காதில் சிறு வலி ஏற்பட்டாலும், அது மூளையைப் பாதிக்கும். எனவே, காதுகளில் சீழ் வடிந்தால், ஆரம்பத்திலேயே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். அலட்சியமாக தவிர்த்து விடக் கூடாது.

மூளைக் காய்ச்சல்/மூளை அழற்சி ஏற்படாமல் தடுக்கும் முறைகள்: 

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். 

வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். 

வீட்டின் அருகே பன்றிகள் சுற்றித் திரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

முறையாகத் தடுப்பூசி போட வேண்டும்.

தொடர் காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.

சுத்தமான குடிநீரைப் பயன்படுத்தினால், இது போன்ற வைரஸ் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம்.

சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

மேற்கூறியவற்றை முறையாக செய்தாலே மூளை அழற்சியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!