சோர்வுக்கு அக்ரிமனி, சகிப்புத்தன்மைக்கு பீச், ஆழ்ந்த உறக்கத்துக்கு ஆப்ஸ்பென்... மகிமை மிக்க மலர் மருத்துவம்!

லர் மருத்துவம்... ஆங்கிலத்தில் 'Bach Flower Remedies' என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் 'சகோதரி' என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது.  `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்' என்கிறார் அகத்திய சித்தர். 'மனமது குணமானால் மருந்துகள் தேவையில்லை' என்பது மலர் மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் எட்வர்ட் பாச்-சின்  கருத்து.

மலர் மருத்துவம்


லண்டனைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாச் நோய்களை முழுமையாக குணப்படுத்த வேண்டும் எனமுடிவு செய்தார். அலோபதி மருத்துவத்தை விட்டு, ஹோமியோபதிக்கு மாறினார். ஆனாலும் ஹோமியோபதியை  இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 

எட்வர்ட் பாச்சின் ஆராய்ச்சியில் 'எந்த ஒரு நோய்க்கும் மனமே காரணம்' என்ற உண்மை புலப்பட்டது. மனதைச் சரி செய்தால் பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும் என்று உறுதியாக நம்பினார். இதையடுத்து, மனதை சரி செய்யும் மருந்துகளைத் தேடி மலைகள், காடுகள் என அலைந்தார். மூலிகைகளையும் மலர்களையும் பறித்து அவற்றை உண்டு பரிசோதனைகள் செய்தார். சில மலர்களைப் பயன்படுத்தியபோது அவர் சில மாற்றங்களை உணர்ந்தார். அந்த இழையைப் பிடித்துக்கொண்டு ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தினார். 

38 வகையான மலர் மருந்துகள் மனதை ஒழுங்குபடுத்த உதவியதாகக் கண்டுபிடித்து அவற்றை வரிசைப்படுத்தினார். மேலும், இந்த மலர் மருந்துகளை தனியாகவும் ஹோமியோபதி மருந்துகளுடன் சேர்த்தும் கொடுத்துப் பரிசோதித்து,  முறைப்படுத்தினார்.  இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த மலர் மருத்துவம் பரவி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

மலர் மருத்துவம்


மருத்துவத்துக்கு இயற்கையே அடிப்படை. ஆயினும் மலரை அடிப்படையாகக் கொண்ட இந்த மருத்துவம் அபூர்வ ஆற்றல் படைத்தது என்பது பயன்படுத்தியவர்களின் அனுபவமாக இருக்கிறது.  பக்கவிளைவுகள் இல்லாத இந்த மலர் மருத்துவத்தின் மகத்துவம் பற்றி உளவியல் நிபுணரும், மலர் மருத்துவருமான கௌரி தாமோதரன் நம்மிடம் பேசினார்.கௌரி தாமோதரன்

``மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். டாக்டர் பாச்,  இவ்வுலகம் வளமும் நலமும் பெற வேண்டி, தனது சொந்த அனுபவங்கள் மூலம் மக்களுக்கு தனது பங்களிப்பைத் தந்தார். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.


பூக்களை சுத்தமான நீரில் போட்டு வெயிலில் வைத்திருப்பதன்மூலம் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதன்பிறகு அந்த நீரை வடிகட்டி சில மருத்துவப் பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டால் அதுவே தாய்த்திரவமாகும். இதேபோல் அரிய வகை மலர்களின்மீது படர்ந்திருக்கும் அதிகாலைப் பனியின் திவலைகளைச் சேகரித்து சில மருந்துப் பொருள்களைச் சேர்த்து எரு சில மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். இந்த மருந்துதான் மனதில் நன்றாக வேலைசெய்து உடல் நோய்களைப் போக்குகிறது.


நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும். மலர் மருத்துவத்தின் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க ஸ்பிரிட் சேர்க்கப்படும். 
குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். 

மலர் மருத்துவம்

மனதின் ஆற்றலை சீராக்க முடியாதபோது மலர் மருத்துவம் மனதில் ஆற்றலை சீராக்கி மனதின் மேலோட்டத்தில் உள்ள செயலை ஆழ்மனதில் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது. இதுதான் மலர் மருத்துவம் செய்யும் அற்புதமான பணியாகும். இதனால் பல்வேறுவிதமான அரிய மாற்றங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன. 

`ரெஸ்க்யூ ரெமடி' எனும் மலர் மருந்தானது ஐந்து மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கக்கூடியது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பாதிப்புக்கு ஆளானவர்களின் மனநிலையை சீர் செய்து அவர்களது உடல் நலனை காக்கக்கூடியது.

`அக்ரிமனி' என்ற மருந்து, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும். 

நாள்பட்ட சில நோய்களால் உடல் நலிந்து மனதளவிலும் வலுவிழந்துவிடும். அந்தச் சூழலில், `ராக்ரோஸ்' என்னும் மருந்து நல்ல தீர்வைக் கொடுத்து மனச்சோர்வை நீக்கும். `ஆப்ஸ்பென்'  என்ற மருந்து நிம்மதியான உறக்கத்தை வரவழைக்கும். `பீச்' மருந்து சகிப்புத்தன்மை போக்கக்கூடியது. `சென்டாரி' அடிமை உணர்வு மற்றும் குற்ற உணர்வு உடையவர்களுக்கும் தீர்வு தரக்கூடியது. `செரட்டோ' சந்தேகப்படுவோருக்கு சிறந்த நிவாரணம் தரும். `செரிப்ளம்' என்ற மலர் மருந்து உடல் உபாதை மற்றும் மன உபாதைகளைப் போக்கக்கூடியது. `கிராப் ஆப்பிள்' என்ற மருந்து உடலைச் சுத்திகரிப்பதுடன் ரத்தத்தை சுத்திகரித்து ஆன்மாவை சுத்திகரிக்கக்கூடியது.
இவைதவிர டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்களையும் தீக்காயம், வெட்டுக்காயம், உளவியல் சிக்கல்கள், பாம்புக்கடி, தேள்கடி போன்ற பாதிப்புகளையும்  நீக்கி உற்ற துணையாக இருந்து உயிர் காக்கக்கூடியவை.

இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன. ஆனால், மலர்  மருத்துவ நோக்கில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை. ஒருசிலர் தனிப்பட்ட ஆர்வத்தில் செய்துவருகிறார்கள். அரசு இந்த மருத்துவ முறையை முறைப்படுத்தினால் மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படும்..." என்கிறார் கௌரி தாமோதரன். 

மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எசிச்ரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!