Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முடி உதிர்தல், இள நரை, ஒற்றைத்தலைவலி... எளிதாகத் தீர்க்கும் ‘அடடே’ அரோமா தெரபி!

நோய்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் அரோமா தெரபி சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண முடியும். வாசனை வீசும் எண்ணெய்களைக் கொண்டு முழுமையான பலன் பெறச் செய்யும் இந்த சிகிச்சை குறித்து அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக் நம்மிடம் பேசினார்.

“அரோமா தெரபியை நறுமண சிகிச்சை, வாசனை வைத்தியம் என்றும் சொல்லலாம். நறுமணம் அல்லது வாசனைகளின் மூலம் உடலையும் மூளையையும் இணைக்கக்கூடிய  மாற்று மருத்துவமாகும் இது. பொதுவாக பெண்கள் காலையில் முகம் கழுவுவது, குளிப்பது என்பதைவிட மாலையில் முகம் கழுவி, பவுடர் பூசி, தலைவாரி பூச்சூடும்போது அவர்களது மனதிலும், உடலிலும் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். மூக்கில் காணப்படும் சிலியா என்ற மெல்லிய முடிகள் அரோமா தெரபி பொருள்களில் உள்ள வாசனையை மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டத்துக்குக் கொண்டு செல்லும். இதனால் ரிலாக்ஸான ஒரு உணர்வை ஏற்படுத்தி மூளைக்கு அனுப்புவதால் மனமும் ரிலாக்ஸ் ஆகிறது. மனம் ரிலாக்ஸ் ஆவதால் உடலும் ரிலாக்ஸ் ஆகிறது.

அரோமா தெரபி

பூக்களில் பல வண்ணங்கள் உண்டு. அவற்றில் சில மணமூட்டக்கூடியவை. வேறு சில மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதை உணர்ந்தே அரோமா தெரபி எனும் இந்த நறுமண சிகிச்சை ஏற்படுத்தப்பட்டது. வாசனைப் பூக்கள் மட்டுமல்லாமல் இலை, காய், கனி, விதை, பட்டை, பிசின், வேர் என தாவரங்களின் அனைத்து பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட திரவங்களே எசன்ஷியல் ஆயில் எனப்பட்டன. 

உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்களும் சந்தனம் போன்ற மரக்கட்டைகளும் எலுமிச்சை, இஞ்சி, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறுகளை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்த எண்ணெய்கள் அபூர்வ ஆற்றல் நிறைந்தவை. எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசை வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்பு போன்றவை மறையும். 

டாக்டர் கீதா அசோக்ஆயுர்வேத மருத்துவத்தில் பின்பற்றப்படும் எண்ணெய்க் குளியல் மற்றும் மசாஜ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களைப் போலவே இந்த வாசனை எண்ணெய்களுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. இந்த எண்ணெய்களை ஆவியாக்கி புகைமூட்டுவதால் அந்த இடத்திலுள்ள கிருமிகள் அகன்றுவிடும். மேலும் அந்தப் புகையை சுவாசிப்பதன்மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும். 

அரோமா தெரபியைப் பொறுத்தமட்டில் எல்லாமே சாத்தியப்படும். பண்டைய காலங்களில் பிளேக் நோய் பரவியபோது அரோமாதெரபி மூலமே குணப்படுத்தப்பட்டது. பைபிளில் `பரிமளத்தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருந்தது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்து பிரமிடுகளில் மனித உடல்கள்மீது நறுமணத்தைலங்களைப் பூசி 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகள் அழியாமல் பாதுகாத்திருக்கிறார்கள். பாக்டீரியாக்கள் உடலை அழிக்கக்கூடியவை. மிர் என்ற ஆயில் பாக்டீரியாக்கள் உடலை அழிக்காமல் பாதுகாக்கும். அதேபோல் சிடர்வுட் என்ற ஆயில் உடல் உடைந்து போகாமல் பாதுகாக்கும்.  

ஆதிகாலத்தில் பூக்களை அரைத்துப் பயன்படுத்துவது, பூக்களை எரித்து அதன் புகையை நுகர்வது போன்றவையும் அரோமாதெரபிதான். ஆனால், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியல் விஞ்ஞானியான கேடிஃபோசே என்பவரது காலத்தில்தான் இது எண்ணெய் வடிவத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. ஒருநாள் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது ஆசிட் அவரது கையில் பட்டுக் காயம் ஏற்பட்டது. உடனே அவரது ஆய்வகத்தில் இருந்த லாவண்டர் ஆயிலை அந்தப் புண்ணின்மீது ஊற்றி கட்டு போட்டார். மறுநாள் காலையில் புண் ஆறி தோல் மூடியிருந்தது. இதைக்கண்டு ஆச்சர்யப்பட்ட அவர், தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு முழுநேரமும் அரோமாதெரபி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 450 ஆயில்களைக் கொண்டுவந்தார். அதன்பிறகுதான் அரோமா ஆயில் நடைமுறைக்கு வந்தது. கடந்த 100 ஆண்டுகளாக இது புழக்கத்தில் இருந்து வருகிறது.

நாம் அன்றாடம் குளிக்கும் தண்ணீரில் சில சொட்டு அரோமா தெரபி ஆயிலைக் கலந்து குளித்துவந்தால் உடல் சுத்தமாவதுடன் ஓர் அலாதியான சுகம் கிடைக்கும். மேலும், இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் சேர்த்து உடலில் பூசினால் சருமம் பளபளப்பாகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் அரோமா ஆயிலைப் பூசி வந்தால் அவர்களது பாதங்களில் வரும் தொந்தரவுகளை முன்கூட்டியே தடுக்கலாம். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகுத் தொந்தரவு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவற்றுக்கு இந்த ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முழுமையான நிவாரணம் பெறலாம்.

அரோமா தெரபி

அரோமா தெரபியில் சருமத்தின் தன்மை எத்தகையது என்று ஸ்கேன் செய்து பார்த்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். முகப்பருக்களுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளது. அதாவது முகத்தில் வரும் பரு எப்படிப்பட்டது என்று அதன் அடிப்படை குறைபாடுகளைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்தலாம். பருத்தொல்லை என்றில்லை; சிலருக்கு தேமல், கரும்புள்ளிகள் வந்து முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு அரோமா தெரபியில் உலகத்தர சிகிச்சை உள்ளது. 

பனிக்காலங்களில் சருமம் டிஹைட்ரேட் ஆகி விடும். அப்போது ஒவ்வொருவரின் சருமத்துக்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்த வேண்டும். அப்படியானால்தான் தேவையில்லாத அலர்ஜிகளைத் தடுக்கும். அடுத்ததாக பெரும் பிரச்னையாக இருப்பது பொடுகு. இதை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் மிக எளிதாகச் சரி செய்துவிடலாம். நாள்பட்ட பிரச்னை என்றால் தலைமுடியின் வேர்க்கால்களில் பதிந்து முடி உதிர்வை ஏற்படுத்துவதுடன் அரிப்பை ஏற்படுத்தும். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் புழுவெட்டு, சொரியாசிஸ் போன்ற தீவிரப் பிரச்னைகளுக்கு கொண்டுபோய் விடும். இதை ஸ்கேன் செய்து பார்த்து பொடுகின் தன்மையை அறிந்து அதற்கேற்ப அரோமா தெரபி சிகிச்சை அளிப்பதன்மூலம் 100 சதவிகிதம் முழுமையான குணம் பெறலாம். மேலும், சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் வராமலிருக்கவும் இதில் வழிகள் உண்டு.

கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, போதிய உணவின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கு அரோமா தெரபியில் சிறப்பான தீர்வு உண்டு. அதாவது ஒற்றைத் தலைவலியுடன் போராடிக் கொண்டிருக்கும்போது பல்வேறு நறுமணங்களை உடலில் பூசி இனிமையான சூழலை ஏற்படுத்தலாம். சாமந்தி, துளசி, யூகலிப்டஸ் போன்ற தலைவலியைக் குணப்படுத்தும் பொதுவான நறுமண மூலிகைகளில் எது பொருந்துகிறதோ அதைச் சோதனை செய்துபார்த்து சிகிச்சை அளிப்பதன்மூலம் நிவாரணம் பெறலாம். 

இவை தவிர தலைமுடிப் பிரச்னைகள், தூக்கமின்மை மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் குறைபாடுகளுக்கு அரோமா தெரபி சிகிச்சையில் முழுமையான நிவாரணம் பெறலாம்'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement