வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (24/09/2017)

கடைசி தொடர்பு:16:34 (24/09/2017)

சாதாரணக் காய்ச்சலுக்கு ஊசி போடுவது நல்லதா? - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

ருத்துவமனை என்றாலே குழந்தைகள் வீறிட்டு அழக் காரணம், ஊசி.  ’எத்தனை மாத்திரை வேண்டுமானலும் சாப்பிடுறேன், ஊசி மட்டும் வேண்டாம்’ என அடம் பிடிக்கும் பெரியவர்களும் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, சின்ன ஜலதோஷம் என்றால் கூட, ’தயவுசெய்து ஒரு ஊசி போடுங்க சார்’ என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.  

காய்ச்சலுக்கு ஊசி

இப்போது, டெங்கு உள்ளிட்ட பலவிதமானக் காய்ச்சல்கள் பரவி வருகின்றன.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி டாக்டர் அருணாச்சலம்வழிகின்றன. பெரும்பாலும் மருத்துவர்கள் காய்ச்சலுக்கு ஊசி போடுவதில்லை. ஆனால், சில மருத்துவர்கள் சர்வ சாதாரணமாக ஊசி போடுகிறார்கள். மருத்துவர்கள், ஊசி தேவையில்லை என்று சொன்னால் கூட சிலர் கேட்பதில்லை.    

”காய்ச்சலுக்கு ஊசி அவசியமா?  அவசியமின்றி ஊசி போடுவதால் என்னமாதிரி விளைவுகள் ஏற்படும்?” 
பொதுநல மருத்துவர் டாக்டர் அருணாச்சலத்திடம் பேசினோம்.

"மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் மனித உடலின் வெப்பமானது,  ஒரே சீராக பராமரிக்கப்படுகிறது. சில நோய்கள் அல்லது  கிருமிகளால் உடலின் இயல்பான வெப்பநிலை  (98.6 டிகிரி பாரன்ஹீட்)  பாதிக்கப்படுவதையே, ’காய்ச்சல்’ என்கிறோம். 

காய்ச்சல் என்பது, சில நேரம் பக்கவிளைவுகளுடன் வரும். உடல் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என பத்துக்கு மேற்பட்ட  பக்க விளைவுகள் ஏற்படும்.  காய்ச்சல் நேரங்களில் உடல் சோர்வாக இருக்கும்போது வழக்கமான வேலைகளை செய்வதால்கூட, கை, கால், இடுப்பு என பல இடங்களில் இயல்பாக வலி  உண்டாகலாம். இதை பலரும் காய்ச்சலால் வந்த வலி என்பதை அறியாமல், தனிப் பிரச்னையாக கருதுவார்கள். 

மருத்துவர் ஆலோசனை

’ஊசி போட்டால், எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடும்,  மாத்திரையால் குணமாவதை விட விரைவாக,  ஊசி போட்டுக்கொண்டால்  குணமாகி விடும்’ என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். 

மாத்திரை சாப்பிட்டவுடன் அது வயிற்றுக்குச் சென்று  கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் கலந்து வேலை செய்வதற்கு சிறிது நேரமாகும்.  ஆனால் ஊசி மூலம்  மருந்தைச் செலுத்துவதால் அது உடனடியாக ரத்தத்துடன் கலந்து விளைவை ஏற்படுத்தும். அதனால் காய்ச்சல் குறைந்தது போலத் தோன்றும். அதனால் தான் சில  ஊசிகளைப்  பயன்படுத்துவது வழக்கம்.  

பொதுவாக,  காய்ச்சல் மட்டுமல்ல, எந்த நோயும் ஒரே ஊசியில் குணமாக கூடியதல்ல.   மாத்திரைகளை எப்படி ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்கிறோமோ, அதேபோல ஊசியையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் போட வேண்டியது அவசியம். இப்படி, அடிக்கடி ஊசி போடும்போது, கிருமிகளின் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும்.  எனவே, சாதாரணக் காய்ச்சலுக்கு மருத்துவராக பரிந்துரைக்காத நிலையில் நோயாளியாகவே ஊசிப் போடச் சொல்லக்கூடாது. 

ஊசி

காய்ச்சல் விரைவாக குணமாக, சில மருத்துவர்கள் ஸ்டீராய்டு வகை ஊசிகளைப் போடுகின்றனர். ஸ்டீராய்டு ஊசி தற்காலிகமாக காய்ச்சலை குறைக்கும். உடனடி பலன் கிடைத்தது போல தோன்றும். இதனால், அவரை 'கைராசியான டாக்டர்' என்று நம்பி  திரும்ப திரும்ப அவரிடமே செல்வார்கள். ஆனால், இந்த வகை ஊசி காய்ச்சலுக்கான காரணத்தை சரிசெய்யாது. அதேபோல, நாளடைவில், ரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், வளர்ச்சிக் குறைபாடு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். உடல் பருமன், சர்க்கரை நோய் வரவும் வழி வகுக்கும். தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல நோய்கள் வர வாய்ப்பாக அமைந்து விடும்.  
அதேபோல, டைக்ளோபினாக் (Diclofenac) ஊசியையும் போடுவது வழக்கமாக உள்ளது. இது ஒரு வகை வலி நிவாரணி மட்டுமே. இதை, காய்ச்சலுக்குப் பயன்படுத்தக்கூடாது. இதை அதிகமாக போட்டுக்கொண்டால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த காய்ச்சல்இரண்டு வகை ஊசிகளையும் தவிர்க்க வேண்டும். 

ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். நோய்தொற்றும் ஏற்படலாம். நோயாளிகள் சுத்தமில்லாமல் இருக்கும்போது, ஊசி போடுவதும்கூட சில நேரங்களில் சீழ் கட்டி வர  வழிவகுக்கலாம். எனவே, தேவை இல்லாத பட்சத்தில்  ஊசியைத் தவிர்க்கலாம்.

ஊசி எப்போது அவசியம்?
ஊசியே தேவையில்லை என்பதில்லை. காயத்தின் மூலம் கிருமித்தொற்றைத் தவிர்க்க,  டி.டி (Tetanus Toxoid)  ஊசியைப் போட்டுத்தான் ஆக வேண்டும். இதனை மாத்திரையாகவோ, மருந்தாகவோ தர முடியாது. இதுபோல, சில மருந்துகளை ஊசிகள் மூலமே செலுத்த முடியும். வாந்தி, வயிற்றுப்போக்கு, பல் வலி, காயத்தால் ஏற்படும் வலி போன்ற சூழலில் உடனடி பலனுக்காக  ஊசி போடவேண்டும். 
காய்ச்சலின்போது, ஒரு ஊசியை போட்டால் குணமாகி விடும்,  வேலைக்கு சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது  தவறு. காய்ச்சல் வந்தால் கண்டிப்பாக, உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தூக்கமும் அவசியம்.

காய்ச்சலின்போது உடலின் ஜீரணசக்தி குறைந்து விடும். இதனால், நீராவியில் வேகவைத்த உணவுகள், நீர் சேர்த்து சமைத்த கஞ்சி போன்ற எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக கலோரி உள்ள உணவுகளையோ, எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல, காய்ச்சலை தணிக்க நீர்ச்சத்து அவசியம்.  எனவே, நீர்சத்துள்ள காய்கள், பழங்களை சாப்பிட வேண்டும்.  

காய்ச்சலின் போது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.   2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை மீண்டும் சந்திக்க வேண்டும். " என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்