Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்போது ஏன் ரோட்டோ வைரஸ் தடுப்புத் திட்டம்? - மருந்து நிறுவனங்களுக்கு துணைபோகிறதா அரசு?!

டந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ‘தூய்மை ரத சேவை' தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் 'ரோட்டோ வைரஸ்' தடுப்பு சொட்டு மருந்து முகாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  இந்த முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சொட்டு மருந்து

வரும் புதன் கிழமை முதல் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வயிற்றுப்போக்கால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வது 20 முதல் 30 சதவிகிதம் குறையும் என்று தமிழ்நாடு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.

அது என்ன 'ரோட்டோ வைரஸ்' ?

ஜரூத் பிஷப் என்பவரால் 1973-ம் ஆண்டு இந்த ‘ரோட்டோ வைரஸ்' கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் 7 முதல் 12 மாதம் வரை உள்ள பச்சிளம் குழந்தைகளைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது. இந்த வைரஸ் தாக்கினால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இதனால் அதிகமான உயிரிழப்புகள் உண்டாகின்றன. இதைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து. 

இந்தியாவில்  2016- ம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு மாநிலங்களில் இந்தத் தடுப்பு மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால், இந்தத் தடுப்பு மருந்துக்கு அவசியமே இல்லை என்ற குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

2014-ல், டெல்லியில் அஃப்சனா என்ற பெண்ணின் 2 மாதக் குழந்தை தடுப்பு மருந்து கொடுத்த சில நாள்களிலேயே இறந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தடுப்பு மருந்துக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது. 

“இந்த வைரஸ் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளால், சுகாதாரமற்ற குடிநீரால் உண்டாகிறது. இதனால் பாதிக்கப்பட்டால்  நீரிழப்பு அதிகமாக ஏற்படும். உப்புச் சத்துக் குறைபாடுகள் உண்டாகும். இதனால் குழந்தைகளின் உடல்நிலை மோசமடையும். இதைத் தடுக்கவே இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இது வயிற்றுப்போக்கை வரும் முன்னே தடுத்துவிடும். 

இந்தியாவில்  தனியார் மருத்துவமனைகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வந்தது.  இது பிறந்த 45-வது நாளிலும், 75-வது நாளிலும் 105 நாளிலும்  குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும். 

சொட்டு மருந்து

இந்தியாவில்  உண்டாகும் ரோட்டோ வைரஸ் பற்றி ஆய்வுசெய்து அதற்கான தடுப்பு மருந்து ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் மூலம்தான் இந்தியா முழுவதும் இந்தத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளைவிட இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள்தான் தரமானவை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகளுக்கான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் ஒன்றைக் கவனத்தில் செல்வம்கொள்ள வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் எதிர்ப்புச்சக்தி சரியாக இருப்பதில்லை. எனவே தடுப்பூசி போட்டு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளால் மற்ற குழந்தைகளுக்கும் இது பரவும்.

நம் நாட்டில் ரோட்டோ வைரஸினால் தான் வயிற்றுப் போக்கு உண்டாகிறது என்பதற்கான ஆய்வுகள் ஏதும் இல்லை. மேற்கத்திய நாடுகளில் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இது கொடுக்கப்படுகிறது. வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்களில் 30 சதவிகிதம் மட்டுமே இந்த ரோட்டோ வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றது என்பது மட்டும் இங்கே கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து அதிகபட்சம் 4-5 மாதங்களுக்குமேல் ஆன குழந்தைகளுக்கு போடக்கூடாது, ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் என்ற அடிப்படையில் போட்டுவிடுவது நல்லது. 

அரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது. வரவேற்கத்தக்கது. இதேபோன்று, தமிழ்நாட்டில் 2018 முதல் அம்மோனியாவுக்கும் இலவச தடுப்பு மருந்து வர இருக்கிறது. தற்போது வட இந்திய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது...” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் செல்வம். 

வேலாயுதம்ஆனால், தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணை மருத்துவ கண்காணிப்பாளரும், சித்த மருத்துவ நிபுணருமான வேலாயுதம், “இதுபோன்ற தடுப்பு மருந்துகள், நம் நாட்டின் தட்பவெப்பத்துக்கும், உணவுப்பழக்கவழக்கத்துக்கும் பொருந்தாதவை. தேவையே இல்லாதவை. மேற்கத்திய நாடுகளின் மருந்துக் கொள்கைகளையும், அங்கு உற்பத்தியாகும் மருந்துகளையும்   நம் நாட்டில் கொண்டுவந்து கொட்டுவதற்காகவே இதுபோன்ற தடுப்பூசித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன” என்கிறார் அவர். 

“நம்ம குழந்தைகளுக்கு, 'நீர் சுருக்கி மோர் பெருக்கி'க் கொடுத்தாலே போதும். எந்தக் கிருமியும் நெருங்காது. மோர் குடித்தால் குடலுக்கு நன்மை தரும் வைரஸ்களான 'லாக்டோ பேசில்லஸ்'-ஐ அது உருவாக்கிவிடும். ஆனால், இந்த ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து, குடலில் உள்ள லாக்டோபேசில்லஸை பாதித்துவிடும். சுண்டைக்காய் வற்றல், பாகற்காய், வேப்பங்கொழுந்து, உறைமருந்து, வசம்புக்கறி ஆகியவை போதும் ரோட்டோ வைரஸ் கிருமிகளை அழிக்க” என்றார்.

பிறந்த ஒருவாரத்தில் இருந்தே  குழந்தைகளுக்கு உறை மருந்து கொடுக்கலாம். உறை மருந்தில் ஜாதிக்காய், கடுக்காய், மாசிக்காய், சுக்கு, வசம்புக்கறி, வெற்றிலைச் சாறு, துளசிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு திரி மாதிரி செய்துகொள்ள வேண்டும். குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் அதைக் கொடுத்தாலே போதும். எந்தக் கிருமியும் அண்டாது. 

குழந்தைகளுக்கு உண்டாகும் நன்மைக்கும் தீமைக்கும் முழுக் காரணம் தாய்ப்பால்தான். எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தாய்க்குதான் மருத்துவம் தேவை. சுண்டைக்காய் வற்றல், வற்றல் குழம்பு, வெந்தயக் குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு, பிரசவ லேகியம்  ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகள்  நமக்குத் தேவையேயில்லை. நம் மரபு வழி குழந்தை வளர்ப்பு முறையைப் பின்பற்றினாலே போதும், எந்தப் பாதிப்பும் வராது” என்கிறார் வேலாயுதம்.

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் இதுபற்றி நம்மிடம் பேசினார். “தடுப்பு மருந்துகள் எதுவுமே தேவையில்லை என்று  சொல்ல முடியாது. தடுப்பு மருந்துகளால்தான் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு பெருவாரியாகத் தடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பி.சி.டி போன்ற தடுப்பு மருந்துகளால் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ஆனால், ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து தற்போது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்பது என் கருத்து. தமிழகத்தில் வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை. அதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகளும் நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது வலுக்கட்டாயமாக இந்த மருந்து திணிக்கப்படுவது சந்தேகங்களை உருவாக்குகிறது. இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் வைத்திருந்து, தேவைப்படுபவர்களுக்கு மட்டும்  வழங்கலாம். ஆனால், அனைத்துக் குழந்தைகளுக்கும் போடுவது ஏன்.

அமீர்கான்

தற்போது மருத்துவ நிறுவனங்கள் அனைத்தும் வணிக மயமாக்கிவிட்டன. உதாரணமாக முத்தடுப்பூசி (டி.பி.டி) இதுவரை குழந்தைகளுக்கு போடப்பட்டது.  அது நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் மருந்து. வெரும் 28 ரூபாய் தான். ஆனால், அது ஐந்து நோய்களுக்கான ( Pentavalent) மருந்தாக சில ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றப்பட்டது. அது தேவையில்லாத ஒன்று.

ஏற்கெனவே இருக்கும் நோய்களுடன் மஞ்சள் காமாலை மற்றும் மூளைக்காய்ச்சலும் சேர்க்கப்பட்டது. மூளைக்காய்ச்சலால் தமிழகத்தில் குழந்தைகள் பாதிக்கப்படாதபோது ஏன் அந்த மருந்து..? அந்த மருந்தின் விலை 550 ரூபாய். தேவையில்லாத ஒன்றுக்காக அதிகமாக செலவு செய்கின்றனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் போடுவதற்குப் பின்னால் வணிக நோக்கமே உள்ளது. இதில் உலக மருந்து நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறது.

தடுப்பூசிகளுக்குப் பதிலாக சுத்தமான தண்ணீரை அனைவருக்கும் வழங்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். காற்று மாசைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதை விடுத்து ஒவ்வொன்றுக்கும் மருந்தை தேடிப்போகக்கூடாது. பல நோய்களுக்கு காரணமாக கொசு இருக்கிறது என்றால் கொசுவைத்தான் ஒழிக்கவேண்டும், அதனால் உண்டாகும் நோய்க்கான மருந்தை மட்டுமே வாங்கினால் போதாது. தடுப்பு மருந்துகளே தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால், தேவையில்லாமல் தடுப்பு மருந்துகளை திணிக்க வேண்டாம் என்பதுதான் என் கருத்து..!” என்கிறார் அவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement