உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை உயிரைக் குடிக்குமா? #Analysis

டல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்னையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. 

உடல் பருமன்

சாதாரணமாக உடல் எடையை குறைக்க மாத்திரை,  டயட் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையை தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். 

ஆனால், உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. மேலும் எல்லோருக்கும் இது பொருந்திப் போவதும் இல்லை.  சில மருத்துவமனைகள் அந்த அபாயங்களை மறைத்து வருவோர் அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து காசு பார்ப்பதும் நடக்கிறது.  

அண்மையில்,  சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடை குறைக்கும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வளர்மதி என்ற பெண், உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்று ஏராளமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல் படும் இளம் தலைமுறையை, இந்த அறுவை சிகிச்சை ஈர்க்கிறது. இச்சூழலில் அண்மைக்காலமாக இந்த அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 

உடற்பருமன்

"அறுவை சிகிச்சை மூலம் எடை குறைப்பது  சாத்தியமா? யாருக்கெல்லாம் இந்த சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்..?" 

குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர், பட்டா ராதாகிருஷ்ணன் கேட்டோம்.டாக்டர் ராதாகிருஷ்ணன்

"நிச்சயமாக, அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.  உடல் எடை குறைக்க, உதவும் பேரியாட்ரிக் (Bariatric Surgery)   அறுவை சிகிச்சைகளில், ஸ்லீவ் கேஸ்ட்ரோக்டமி  (Sleeve Gastrectomy), கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை  (gastric bypass surgery) ஆகியவை முக்கியமானவை. 

ஸ்லீவ் கேஸ்ட்ரோக்டமி  அறுவை சிகிச்சையில் இரைப்பையின் ஒரு பகுதி லேப்ராஸ்கோபி (Laparoscopically) மூலம் அகற்றப்படும். இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.  இதனால் இரைப்பையின் அளவு குறைந்து விடுவதால், சாப்பிடும் உணவின் அளவு குறையும். இந்த அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் உள்ள பசியைத் தூண்டும்  'க்ரெலின்' (Ghrelin) என்கிற ஹார்மோனை சுரப்புப்பகுதி அகற்றப்படும். இதன் விளைவாக, பசி மட்டுப்படும். சாப்பிடத் தோன்றாது. அதனால் இயல்பாகவே எடை குறையும்.  அறுவை சிகிச்சைக்குப்பின், உணவின் அளவு குறைவதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் குறையும். இதை ஈடுசெய்ய ஊட்டச்சத்து நிபுணர், கொழுப்பற்ற ஊட்டச்சத்து உணவுகளைப் பரிந்துரைப்பார். சிகிச்சை மேற்கொண்ட பிறகு உரிய உணவுப் பழக்கத்தை (டயட்) மேற்கொள்ளாவிட்டால் 3 வருடங்களுக்குப் பிறகு மேலும் இரைப்பை பெரிதாகி உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் இரைப்பையின் அளவில் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும்.  நாம் உண்ணும் உணவு சிறுகுடல்களில் தான் சத்துகளை உட்கிரக்கும். சிறுகுடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகள் குறைக்கப்படுகிறது. அதனால் எடை கட்டுக்குள் வரும். 

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள்

உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்‌ஷன்(Liposuction) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

லைப்போசக்‌ஷன் சிகிச்சையின் மூலம் கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும். அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண  ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும். இந்த சிகிச்சையில்  ரத்த இழப்பு பெருமளவு குறைக்கப்படும். ஆனால், அதிகளவு உடல் எடையைக் குறைக்க இந்த முறை, உதவாது. 

சிகிச்சையின்போது உயிரிழப்பு ஏன் ஏற்படுகிறது? 

பொதுவாக,  உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு நோயாளியும்  ஒத்துழைக்கவேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு 10 நாள்களுக்கு முன்பிருந்தே,  திரவ டயட் முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த சிகிச்சையில் உணவியல் நிபுணர்களும் அங்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சுரப்பியல் நிபுணர், இதய நோய் மருத்துவர், சுவாச மருத்துவர் எனப் பல கட்ட பரிசோதனைக்குப் பிறகே அறுவை சிகிச்சையைத் தொடங்க வேண்டும். 

நோயாளிகளின் அவசரத்துக்காக நேரடியாக அறுவை சிகிச்சையைத் தொடங்கக் கூடாது. அதேபோல  மற்ற துறை வல்லுநர்கள், போதுமான மருத்துவ வசதி இல்லாத இடங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சையைச் செய்தால் உயிரழப்பு ஏற்படவே செய்யும் . மற்றபடி, தகுந்த வாய்ப்புள்ள, வசதியுள்ள, தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கொண்ட இடங்களில் அறுவை சிகிசை செய்துகொண்டால் உயிருக்குப் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை.  

இந்த அறுவை சிகிச்சையை யாரெல்லாம் செய்துகொள்ளலாம்? 

 நாள்பட்ட டைப் 2 சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், அதிகக்கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீண்டநாள் செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல்பருமனால் வரும் புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைப்பதே ஒரே வழி.   

உடல் எடை குறைக்கும் பயிற்சி

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களது, குறைந்தபட்ச பி.எம்.ஐ. அளவு 40-க்கு மேலும், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.  ஆனால், இந்த பி.எம்.ஐ அளவு குறைவாக இருக்கும் நிலையில், அழகுக்காக சிலர் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருகிறார்கள். அது தேவையற்றது. விபரீதத்திலும் முடியலாம். 

உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக் கட்டுப்பாடுகள், நடைபயிற்சி, சைக்ளிங் போன்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்..." என்கிறார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!