சிறுநீரகம், கல்லீரல் தானத்துக்காக காத்திருக்கும் நடராஜன்! விரிவான மெடிக்கல் ரிப்போர்ட்

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, தமிழக அரசியலில் மையப்புள்ளியாக கருதப்பட்டவர் சசிகலாவின் கணவர் நடராஜன். ஆனால், கடும் உடல் நலக்கோளாறு காரணமாக தொடர் சிகிச்சையில் இருக்கிறார். மன்னார்குடி குடும்பத்தை மையப்படுத்தி தமிழக அரசியலில் புயல் அடித்துவரும் நிலையில், கடந்த சில வாரங்களாக, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு உறுப்புகளையும் மாற்றுவது ஒன்றே தீர்வு என்றும், மாற்று உறுப்புகளுக்காக பதிவுசெய்து விட்டு காத்திருப்பதாகவும், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அளவுக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடராஜன்

சிறுநீரக செயலிழிப்பு, டயாலிசிஸ் போன்ற வார்த்தைகள் இன்று பரவலாகப் பேசப்பட்டாலும்  டயாலிசிஸ் பற்றி பெரிய அளவில் விழிப்பு உணர்வு இல்லை. சிறுநீரகம் முற்றிலும் செயலற்றுப்போன நிலையில் டயாலிசிஸ் செய்யப்படும். சாதாரணமாக 2 மணி நேரம் டயாலிசிஸ் செய்வதுண்டு. 8 மணி நேரம் டயாலிஸ் செய்ய நேருவது எதனால்..? 

சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.ஜி.சேகர் விளக்குகிறார். டாக்டர் எம்.ஜி.சேகர்

"ரத்தத்தில் உள்ள கழிவுகளைச் சுத்திகரிப்பது,  உடலில் தங்கும் உப்பு, தண்ணீர் ஆகியவற்றின் அளவை சீராக பராமரிப்பது, ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டின் போன்றவற்றை வெளியேற்றுவது  ஆகிய பணிகளை  சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் நேரத்தில், இந்தப் பணிகளை எல்லாம் இயந்திரத்தின் மூலம் செய்யவைப்பதுதான் டயாலிசிஸ். 

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட காரணங்கள் ?

சிறுநீரகம் திடீரெனக் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், தேவையற்ற நச்சுக்கள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். பிறவியிலேயே வரும் வளர்ச்சிக் குறைவு,  ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய், சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் போன்ற காரணங்களால்  சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். புகைப்புடித்தல்,  மது, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அதிகளவு  வலிநிவாரணிகளை பயன்படுத்துதல்  போன்ற தவறான பழக்கங்களும் சிறுநீரக செயலிழக்க காரணமாகின்றன. 

நிரந்தரமாக சிறுநீரகங்கள் செயலிழந்தவருக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகிய இரண்டு தீர்வுகள் மட்டுமே உண்டு.  ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis), பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) என இரு வகையான டயாலிசிஸ் இருக்கின்றன.

டயாலிசிஸ் - நடராஜன்

ஹீமோ டயாலிசிஸ், மருத்துவமனையில் செய்யப்படும். இதில், கையில் இரண்டு குழாய்கள் பொருத்தப்படும். ஒரு குழாய் வழியே கெட்ட ரத்தம் இயந்திரத்தினுள் செல்லும். அங்கு அது சுத்தம் செய்யப்பட்டு, மற்றொரு குழாய் வழியே உடலுக்குள் செல்லும். பெரும்பாலும் இந்த வகை டயாலிசிஸ்தான் நோயாளிகளுக்கு செய்யப்படும். பெரும்பாலும், வாரத்துக்கு 12 மணி நேரத்துக்கு டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கப்படும். திடீரென சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் கழுத்து வழியாக குழாய் பொருத்தி டயாலிசிஸ் மேற்கொள்ளலாம். 

பெரிடோனியல் டயாலிசிஸ் என்பது, வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து நிரந்தரமாக குழாய் பொருத்தி செய்யப்படும். இதற்காக மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை.  வீட்டிலேயே செய்துகொள்ளலாம். 

சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் நிலையில், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு அளிக்கும். உறவினர்களிடமிருந்து, இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றைத் தானமாகப் பெறுவது, அல்லது  விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறுவதன் மூலம் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. 

சிறுநீரகங்கள்

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீண்ட நாள் டாயாலிசிஸ் செய்துகொள்ள முடியாதவர்களுக்கும் இந்த மாற்று சிகிச்சை தான் தீர்வு. முன்பு,  ஒரே ரத்தப்பிரிவினரிடமிருந்தே சிறுநீரகத்தை தானமாகப் பெற்று பொருத்தும் நிலை இருந்தது. தற்போது, மாற்று ரத்தப்பிரிவினரிடமிருந்தும் தானம் பெற்று  பொருத்தும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. சிறுநீரக  மாற்று அறுவை சிகிச்சை கொண்டவருக்கு தொற்று பாதிப்புகள் வராத பட்சத்தில், ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும்" என்கிறார் மருத்துவர் எம்.ஜி.சேகர். 

நடராஜனின் கல்லீரலிலும் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்லீரல்

கல்லீரல் மாற்று சிகிச்சை எந்த சூழலில் தேவைப்படும்?

கல்லீரல் மற்றும்  கணைய அறுவை கிகிச்சை நிபுணர் செந்தில்நாதனிடம் கேட்டோம்

 "கல்லீரல் செயலிழப்புகளில் , 'அக்யூட் செயலிழப்பு' (Acute failure) ,  'க்ரானிக் செயலிழப்பு' (Chronic failure) என இருவகை உள்ளன. டாக்டர் செந்தில்நாதன்நீண்டநாள்களாக, அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படும்.  ஹெபடைட்டிஸ் (Hepatitis)  ஏ, பி, இ வைரஸ்கள் கல்லீரலை தாக்குவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் மற்றும் கல்லீரல் புற்று நோய் போன்றவற்றாலும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். .

மஞ்சள் காமாலை நோய், ரத்தம் உறையாமை மற்றும் மூளை பாதிப்பு போன்றவை கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்ததும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சையின்றி குணமாகலாம். ரத்தவாந்தி எடுத்தல், சிறுநீரகச் செயலிழப்பு என மோசமான கட்டத்தை.எட்டும் நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  அவசியமாகிறது.

நோய் எதிர்ப்புசக்தி குறைவது,  ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்களின் தாக்கம்,  நீண்ட கால மதுப்பழக்கம் மற்றும் உடல் பருமனால் கல்லீரலில் படியும் கொழுப்பு போன்ற காரணங்களாலும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்..." என்கிறார் அவர்.

சிறுநீரகம், கல்லீரல் தானமாக பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?  

உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் இருக்கவும் தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டம் 2008-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன.  இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம் (Transplant Authority Government Of Tamil Nadu) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  

அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடையும் நிலையில், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம் வழியாக உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும். மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்பவர்களையும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும்  இந்த ஆணையம்தான் ஒருங்கிணைக்கிறது. உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே, இந்தத் ஆணையத்திடம் ரூ.1,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும். இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச் சாவு ஏற்பட்டால், உடனே உறுப்பு தான ஆணையத்துக்குத் தெரிவிப்பார்கள். ஆணைய அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச் சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி, அவர்களின் சம்மதம் கிடைத்ததும் அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள். 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள், அருகாமை மருத்துவமனையில் இருப்பவர்கள், பதிவு மூப்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த உறுப்புகள் பொருத்தப்படும். சிறுநீரகத்தை அதிகபட்சம் 72 மணிநேரத்துக்குள்ளும், கல்லீரலை 24 மணி நேரத்துக்குள்ளும் பொருத்தியாக வேண்டும்.  

தற்போது, தமிழகத்தில் சிறுநீரகத்துக்காக 6,766 பேர்  பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்.  இதில், 'ஓ'  ரத்தப்பிரிவினர் - 2652 பேர், 'ஏ' ரத்தப்பிரிவினர் - 1457 பேர், 'பி' ரத்தப்பிரிவினர் - 2241 பேர், ஏ பி ரத்தப் பிரிவினர் - 416 பேர். கல்லீரலுக்காக பதிவுசெய்து காத்திருப்பவர்கள் 92 பேர் . 

நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் இரண்டும் முழுமையாக செயலிழந்துவிட்டதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில், காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், அவரது உறவினர் ஒருவரும் சிறுநீரகத்தை தானமாகத் தர முன்வந்திருக்கிறார். அதேபோல கல்லீரலையும் உறவினரிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தோ தானமாகப் பெற முடியும் என்பதால், அதற்கு காத்திருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!