கொஞ்சம், உங்கள் உடம்பையும் கவனியுங்கள் சகோதரிகளே! #NationalWomensHealthFitnessDay

ரு தேசத்தின் வளர்ச்சி என்பது, அங்கு பெண்களும் குழந்தைகள் எவ்வளவு ஆரோக்யமாக, சுதந்திரமாக, சுகாதாரமாக வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு வரையறை உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களின் நிலை வளர்ச்சி நோக்கியதாக இல்லை என்பதே எதார்த்தம். 

NationalWomensHealthFitnessDay

பெரும்பாலும், இந்தியக் குடும்பங்களின் பெண்கள் சுமைதாங்கிகளாகவே இருந்து வருகிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்த வாழ்க்கை முறை மாற்றத்தாலும், பொருளாதாரத் தேவைகள் அதிகரிப்பாலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிக்குச் செல்ல நேர்கிறது. அதனால் குடும்பச்சுமை மட்டுமின்றி அலுவலகச் சுமையும் பெண்களை வதைக்கிறது. 

இதனால் ஏற்படும் மன அழுத்தம், மாறிப்போன உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் உடலியல் மற்றும் மனம் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். 

அப்படி எண்ணற்ற போராட்டங்களை நாளும் சந்திக்கும் பெண்களின் உடல்நலனை பேணுவதற்கான அவசியத்தை உணரச் செய்வதற்காகவே ஒவ்வோராண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி புதன்கிழமையை 'நேஷனல் வுமன்ஸ் ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸ் டே' (NationalWomensHealth&FitnessDay) ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. தேசிய  சுகாதாரத் தகவல் வள மையம் 2002 முதல் இந்நாளை அறிவித்து கடைபிடித்துவருகிறது.  

பெண்கள் தங்களை உடல் அளலிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து, இந்நாளில் தேசிய சுகாதார வள மையம் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும். அரசு மருத்துவமனைகளிலும் இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வைட்டமின்கள்,  மினரல்கள் குறைபாடுதான். 

NationalWomensHealth&FitnessDay

இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் நியூரோ பிசியோதெரபிஸ்ட் ஃபாமிதா... 

“மினரல்களும் வைட்டமின்களும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு  உதவுகின்றன. இதில் குறைபாடு ஏற்படும்போது  பல நோய்கள் உண்டாகின்றன. சிலருக்கு சிறுவயதிலேயே  முதுமையான தோற்றம் ஏற்படவும் இதுதான் காரணம்.  மருத்துவர் ஃபாமிதா

பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள  உணவுகளை சாப்பிடவேண்டும்.  பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். 

காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். 

உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். 

கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே  நாளொன்றுக்கு 7 மணி நேரம்  தூங்க வேண்டியது அவசியம். 

உடலில் ஏதேனும்  குறைபாடு இருப்பதாக தானாக நினைத்துக்கொண்டு சிலர்,  மருத்துவரின் ஆலோசனையில்லாமல், அதிகளவில்  மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். அது மிகவும் தவறானது...” என்கிறார் ஃபாமிதா.

பழங்கள்

பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள் எவை? 

ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் ஷைனியிடம் கேட்டோம். 

"பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய்  அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால்,  இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. 

ஷைனி ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.  உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்யத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற  'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும்  பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். 

35  வயதுக்கும் மேற்பட்ட  பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

அடுத்ததாக உடற்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடற்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே,  ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள  திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும் " என்கிறார் ஷைனி.

பெண்கள் மனநலம்

பெண்கள், மனதளவில் ஆரோக்யமாக வாழ வழி சொல்கிறார் மன நல ஆலோசகர் ஜெயமேரி. மனநல மருத்துவர் ஜெயமேரி

"பெற்றோர்கள், சிறு வயதில் இருந்தே பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்கவேண்டும். பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணங்களைத் தீர்மானிக்கின்றன. பெண்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். பொறுமையாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். எதற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்படவேண்டும்.

பொறுமையும், மன்னிக்கும் தன்மையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிகமாக கோபப்பட்டால் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் பழைய விஷயங்களை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக எதிர்மறையான சம்பவங்களை மறந்து விடுவதே நல்லது. யாருக்காகவும் தங்களை வருத்திக்கொள்ளக் கூடாது. உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு  இக்கட்டான சூழலிலும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்" என்கிறார் ஜெயமேரி.

NationalWomensHealthFitnessDay

தாயாக, சகோதரியாக இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் பெண்களின் ஆரோக்யத்திலும் மன நலத்திலும் மொத்த சமூகமும் அக்கறை காட்ட வேண்டும். அதை உணர்த்துவதற்காகத்தான் `நேஷனல் வுமன்ஸ் ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸ் டே!’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!