செல்லப்பிராணிகளிடமும் எச்சரிக்கை தேவை! இன்று உலக ரேபிஸ் தினம்

தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புஉணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் இறந்த தினமான செப்டம்பர் 28ஐ, ’Global Alliance for Rabies Control’ என்ற தன்னார்வ அமைப்பு, ரேபிஸ் குறித்து மக்களிடையே விழிப்புஉணர்வு வந்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்து, 'உலக ரேபிஸ் தினமாக' அனுசரிக்க வலியுறுத்தியது. 2015 முதல், ரேபிஸ் தினத்தை, 'ஜீரோ பை 30' என்ற தலைப்பில் கொண்டாடுகின்றனர். 2030க்குள் ரேபிஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, பூஜ்ஜியத்தைத் தொடவேண்டும் என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.

தெருநாய்

எப்படி தப்பிப்பது?

ரேபிஸ் என்பது, மூளையைத் தாக்கும் ஒரு வைரஸின் பெயர். இந்த வைரஸ் ஒரு மிருகத்தைத் தாக்கும்போது, அதற்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். அந்த மிருகம் நம்மைத் தாக்கும் பட்சத்தில், நமக்கும் அது ஏற்படும். நாய் மட்டுமன்றி, காட்டுவிலங்குகள் நரி, ஓநாய், குதிரை முதலியவற்றைக்கூட இதுதாக்கும். வீட்டில் வளரும் பூனைகளையும் இது தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, நாய், பூனை போன்றவை கடித்துவிட்டாலோ, நகத்தால் பிராண்டினாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை தொடர்ந்து சில நாள்கள் போட்டுக்கொள்ள வேண்டும். ரத்தம் வருவது தெரிந்தவுடன், சிறுசிறு இடைவேளைகள் விட்டு, அவற்றைத் தொடர்ந்து கழுவிக்கொண்டே இருப்பது அவசியம்.

முன்னெச்சரிக்கை:

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், அவற்றிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். தனிமையில் இருக்கும் குழந்தைகளை நாய், பூனையோடு விளையாட விட்டுச் செல்லவேண்டாம். முறையாக செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பட்சத்தில், பிரச்னை இல்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள், எச்சிலை வடித்தபடியும், காலை அடிக்கடி நக்கிக்கொண்டும் இருக்கும். அப்படி ஏதாவது தெரியும் பட்சத்தில், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவேண்டும்.

ரேபிஸ் நோய்

தடுப்பூசி விலங்குக்கும் அவசியம்!

வைரஸ் தாக்கிய நாய்கள், ஆக்ரோஷமாக பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் என்றில்லை. சில நாய்கள் மிகவும் அமைதியாககூட இருக்கும். அதேபோல, பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில்கூட பாதிப்பு இருக்கும். அதன்மூலமாககூட பாதிப்பு பரவலாம். எனவே, வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை அவற்றை கால்நடை மருத்துவர்களிடம் காட்ட வேண்டியது அவசியம். அவற்றுக்கும் வைரஸ் தடுப்பூசி போட்டுவிடுதல் வேண்டும். நாய், பூனை போன்றவை கடித்தவுடன் சாதாரண டெட்டணஸ் டாக்ஸாய்ட் (TT) ஊசி போட்டுக்கொள்பவர்கள், அப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். முறையாக மருத்துவரை அணுகி அமர்வுகள் எடுத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களில் பாதிக்கப்பட்ட மிருகம் கடித்தால், அந்த இடத்தைப் பொறுத்து அந்த காயத்தைப் பொறுத்து பாதிப்பு மூளையை அடைய சில மாதங்கள் ஆகலாம். அதை டிடி ஊசி ஒன்று போடுவதன் மூலம், நிச்சயமாக சரிசெய்யமுடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!