மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay | Share the power... World heart day!

வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (29/09/2017)

கடைசி தொடர்பு:18:07 (30/09/2017)

மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay

தயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்குக் கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்'-ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 'சக்தியைப் பரப்புவோம்' ('Share the power') என்ற கருத்தின் அடிப்படையில் உலக இதயக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு இந்த நாளைக் கொண்டாடவிருக்கின்றன.

இதயம்

இந்த உலக இதய நாளில், நம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயத்தை பாதுகாப்பது குறித்தும், இதய நோய்கள் குறித்தும்,  முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

 

இதயம் நம் கைகளில்!

இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும்.  ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக  72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது.  உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும். 

 

ஓய்வின்றி இயங்கும் இதயம்!

நம் உடலில் தொடர்ந்து இயங்கும் இதயத்தின் துடிப்பு நின்றுபோனால் அசுத்த ரத்தம் இதயத்துக்குள்ளேயே தேங்கிவிடும். உடலில் உள்ள திசுக்களுக்குத் எனர்ஜியைத் தரும் குளூக்கோஸ், தாது உப்புகள் போன்றவை தேவையான அளவு கிடைக்காதுபோகும். திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும்.  புதுப்பிக்க முடியாத நிலை உண்டாகும். இறுதியில், உடல் செயலிழந்து போகும். இறுதியில் உயிரிழப்பு நேரிடும். 

 

இதய நோய்கள் எவை...

கரோனரி தமனி நோய், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, பிறப்பிலேயே இதயம் சிறிதாக இருப்பது, இதய வால்வு பிரச்னை, இதயத் தசை நோய், மூச்சுத் திணறல், புற தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் வீக்கம், தலை சுற்றல், இதய சுற்றுப்பை அழற்சி, கணைய சுரப்புக் குறைபாடு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இதயம் சார்ந்த நோய்களாகும். 

 

எதனால் இதய நோய் ?

* இதய ரத்தக் குழாய்களின் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவாக இருந்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும். 

* நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாய்களின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். 

* அதிக அளவு உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம் இது போன்ற நிலைகளில் இதய ரத்தக் குழாய்கள் சில விநாடிகளில் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு உண்டாகும். 

* புகைப்பழக்கம், மது அருந்துபவர்கள் போன்றவர்களின் கல்லீரலில் அதிகமாக உருவாகும் கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை உண்டாக்கும். இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும். 

* எதிர்மறையான எண்ணங்கள் கார்டிசால் மற்றும் அட்ரீனல் ஹார்மோன்களின் சுரப்பை ரத்தத்தில் கலக்கச் செய்யும். இது உடலின் எந்தப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களிலும் அடைப்பை உண்டாக்கும். 

* பெரும்பாலும் இதய நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் ரத்தக்குழாய் அடைப்பேயாகும்.

இதயம்

 

ரத்தக் குழாய் அடைப்புக்கு காரணங்கள்...

* உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவைச் சாப்பிடுதல்.

* தினசரி உடற்பயிற்சி செய்யாதது 

* அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வது.

 

இதய நோய்க்கான அறிகுறிகள்

* இடது புற மார்பு மற்றும் தோள்ப்பட்டைப் பகுதியில் வலி

* தாடைப் பகுதியில் வலி

* மார்பு இறுக்கம்

* மூச்சு விடுவதில் சிரமம்

* படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாது போவது போன்ற பொதுவான அறிகுறிகளும் இதில் அடங்கும். 

 

இதய நோய்க்கு வழிவகுப்பவை... 

* அதிக ரத்த அழுத்தம்

* அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் 

* புகைப்பழக்கம் 

* முறையற்ற உணவுப்பழக்கம்

* உடல் பருமன்

 

இதய நோய்களுக்கான பரிசோதனைகள்...

30 வயதைக் கடந்தவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனை போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். 

ரத்தத்தில் - சி.பி.கே - எம்.பி (CPK-MB) என்ற பரிசோதனையையும்,  இதயத்தில் - எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், நியூக்ளியர் ஸ்கேன் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். 

 

இதய நோய் யாருக்கு வரலாம்...

* மனஅழுத்தம், மனஉளைச்சல் உள்ளவர்களுக்கு

* புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு

* 140/90 mm Hgக்கு அதிகமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு

* ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு

* உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு

* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு

 

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்...

பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு பெண்களை இதய நோயிலிருந்து காக்கும். அதேநேரத்தில் இதய நோய்க்கு வழி வகுப்பதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்தான் காரணம். மனஅழுத்தத்தினால் நிகழும் ஹார்மோன்களின் எதிர்மறையான சுரப்பு இதய நோயை ஏற்படுத்தும்.

 

இதய நோயாளிகள் செய்ய வேண்டியவை?

* ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்துநாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும். 

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவுச் சேர்த்துக்கொள்ளலாம். 

செய்யக் கூடாதவை?

* அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது. 

* கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை இதயத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும். 

இதய நோய்க்கான சிகிச்சைகள்

 

இதய நோய்க்கு செய்யப்படும் சிகிச்சைகள்...

ஆஞ்ஜியோ பிளாஸ்டி: அடைப்புள்ள ரத்தக் குழாய்க்குள் ஸ்டென்டை உள்செலுத்தி ஸ்டென்டில் உள்ள பலூனை விரிக்கச் செய்வதன் மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி: இதயத்தில் ஓட்டை, வால்வு பழுது, வால்வு சுருக்கம், ரத்தக் குழாய் வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தைச் சரிசெய்து சீராக்கும்.

பேஸ்மேக்கர்: பேஸ் மேக்கர் கருவி மூலம் செயற்கை இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும்.

ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ்: அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை உடலுக்குச் செலுத்தும் செயலின் தன்மையை இதயம் இழக்கும்போது ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ் பொருத்தப்படுகிறது. இது இதயத்துக்குள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தைப் பரவச் செய்யும். 

எக்மோ: ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்றவற்றால் இதயம் முழுவதுமாக செயலிழந்துபோகும்போது 'எக்மோ' என்னும் கருவி பொருத்தப்படும். இது இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளைச் செய்யும். செயற்கை இயந்திரம் மூலம் இதயத்தின் பணியை செய்யும்.

 

சைலன்ட் அட்டாக்!

பெரும்பாலும் மதுப்பழக்கம் உடையவர்களுக்கும், 70 - 80 வயதைக் கடந்தவர்களுக்கும் சைலன்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரை சைலன்ட் அட்டாக் வரும். நீண்ட நேரம் இரவில் விழித்திருத்தல், அடுத்தடுத்த பணிகளால் உண்டாகும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சைலன்ட் அட்டாக் வரலாம். 

 

திடீரென மாரடைப்பு ஏற்பட்டால்...

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் சில முதலுதவிகளின் மூலம் அவர்களின் உயிரைக் காக்கலாம்.

மயக்கம் அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைக்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. இதயத் துடிப்பு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட பட்சத்தில், இடது மார்புப் பகுதியில் நமது கைகளை வைத்து லேசாக அழுத்த வேண்டும். மிகவும் வேகமாக அழுத்தக் கூடாது அது மார்புப்பகுதியில் உள்ள எலும்புகளைப் பாதிக்கும். அவற்றால் இதயத்துக்கு பாதிப்பு நேரலாம். மயக்கம் அடைந்தவர் சுவாசம் இல்லாது இருக்கும்போது வாயோடு வாய்வைத்து வேகமாக ஊத வேண்டும். பிறகு, மீண்டும் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உடனடியாக மருத்துவரின் உதவியைப் பெறுவது நல்லது. நெஞ்சுவலி ஏற்பட்டவர்களுக்கு 350 மி.கிராம் ஆஸ்பரின் மாத்திரையைக் கொடுக்கலாம். இது அதிக பட்சம் 4 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 

 

 


டிரெண்டிங் @ விகடன்