வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (30/09/2017)

கடைசி தொடர்பு:18:18 (30/09/2017)

இட்லி, கொத்தமல்லித் துவையல், பார்லி கஞ்சி... காய்ச்சல் குறைக்கும் உணவுகள்! #FeverDiet

நோய் அல்லது காய்ச்சல் வருவதற்கு அடிப்படைக் காரணம் உடலில் விஷத்தன்மை அல்லது உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் சேர்வதே. பொதுவாக உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்தச் செயல்பாட்டின்போது உடலில் ஏற்படும் சிரமங்களையே `நோய்’ என்கிறோம். ஆனால், ஒவ்வொரு நோய்க்கும் அதன் தன்மைக்கேற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். காய்ச்சல் வந்தவர்கள் அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிட்டாலே, பாதி நிவாரணம் கிடைத்துவிடும். 
இன்றையச் சூழலில் பலரையும் படுத்தி எடுப்பது காய்ச்சல். காய்ச்சல் என்பது இயற்கையின் தன்னிச்சையான கழிவுநீக்கும் செயல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலில் கலக்கும் உடலுக்கு ஒவ்வாத விஷம், கழிவுகள், விஷமுண்டாக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் உடலில் வெப்பத்தை உண்டாக்கி இயற்கை வெளியேற்றிவிடும். அதுதான் காய்ச்சல். எனவே, காய்ச்சல் வந்துவிட்டால் மருந்துகள் மூலம் தடுக்காமல், இயற்கையின் இதுபோன்ற கழிவு சுத்திகரிக்கும் வேலைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் உணவுகள்

காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக டைபாய்டு, நிமோனியா மற்றும் விஷக் காய்ச்சல்கள்கூட சரியான உணவு முறைக்குக் கட்டுப்பட்டு விரைவில் குணமாகும் வாய்ப்புகள் உண்டு. மருந்துகள் கொடுப்பதால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. ‘காய்ச்சல் குணமாவதற்குத்தான் மருந்து சாப்பிட்டுவிட்டோமே...’ என்று எளிதில் ஜீரணமாகாத உணவுகளைச் சாப்பிட்டால்  மூன்று நாள்களில் சரியாகவேண்டிய காய்ச்சல், மேலும் நீடிக்கும். ஆகவே காய்ச்சலின்போது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் பாதித்த நேரங்களில் சிலருக்கு குமட்டல், வாய்க் கசப்பு, எச்சில் ஊறுதல், புளிப்புத் தன்மை, சுவையற்ற நிலை போன்றவை இருக்கும். எதையும் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் உணவை இரண்டு, மூன்று வேளைகளாகப் பிரித்து, சற்று சிரமப்பட்டாவது சாப்பிட்டுவிடுவது நல்லது. காய்ச்சல் வந்தவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை. இவற்றைத் தனியாகச் சாப்பிட முடியாது. எனவே, சிலர் பாலில் நனைத்துச் சாப்பிடுவார்கள். இது நல்லதுதான் என்றாலும், ஒன்றுக்குமேல் சாப்பிட முடியாது. எனவே, இணை உணவாக கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித்தழை துவையல், புதினாத் துவையல் மற்றும் பச்சை மிளகு, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த துவையல் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். காய்ந்த புதினாக்கீரை, காய்ந்த கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை ஒரே அளவாகச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி (உப்பு சேர்த்து) சாப்பிடலாம்.

பகல் உணவில் குழைய வேகவைத்த புழுங்கலரிசிச் சோற்றுடன் மிளகு ரசம் சேர்த்துச் சாப்பிடலாம். வெள்ளைப் பூண்டு, மிளகு, வெந்தயம் சேர்த்துச் செய்த ரசம், சூப், குழம்பு போன்றவற்றையும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த புழுங்கலரிசிப் பொங்கலும் நல்லது. இரவு உணவு, காலை உணவைப்போல ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பமாக இருந்தால் நல்லது. பாலில் வெள்ளைப் பூண்டு சேர்த்து வேகவைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் அருந்துவது நல்லது. காய்ச்ச்சல் வந்தவர்கள் எப்போதும் வெந்நீர் அருந்துவது நல்லது.

துவையல்

பிரெட், பால் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிடாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். `காய்ச்சல் நேரங்களில் பழமா?’ என்று பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை. இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.

இவை தவிர அரிசிக் கஞ்சியில் செய்த வடகம், வற்றல் போன்றவற்றைக் காய்ச்சல், தலைவலி நேரங்களில் சாப்பிடலாம். இவை சாப்பிடச் சுவையாக இருப்பதுடன் உடலுக்குத் தெம்பு தரும். சளிக்காய்ச்சல், தலைவலி, தும்மல், இருமல், ஜலதோஷம் இருக்கும்போது தூதுவளைத் துவையல் ஓர் அருமையான இணை உணவு.

வீடுகளில் வளர்க்கும் துளசி, ஓமவல்லி, தூதுவளை இலைகளுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து, தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி குடிப்பதும் காய்ச்சல் நேரங்களில் பலன் தரும். பத்து மிளகை வாணலியில் வெறுமனே கருகுமளவுக்கு வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்துக் கஷாயமாக்கிக் குடிக்க வேண்டும். காலை, மாலை, இரவு என குடித்து வந்தால் இரண்டொரு நாள்களில் எந்தவிதமானக் காய்ச்சலும் குணமாகும். இதேபோல் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, நான்கைந்து மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகும். 

தேனுடன் தண்ணீர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சீதளக் காய்ச்சல் சரியாகும். தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட்டால் பசி உண்டாகும். இதனால் வாய்க் கசப்பு நீங்கும். புளித்த ஏப்பம் வருவது நிற்கும். காய்ச்சலின்போது மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சைப் பழங்கள் அருந்தலாம். ஃபுளூ காய்ச்சல், மலேரியா மற்றும் குளிர் காய்ச்சலின்போது எலுமிச்சைச் சாற்றை வெந்நீரில் கலந்து அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

பார்லி சூப்

உடல்நலக்குறைவின்போது நார்ச்சத்து குறைந்த உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்ளச் சொல்வார்கள். அதற்கு ஏற்றது பார்லி. எளிதில் செரிமானமாகும் பார்லி, சளி சவ்வுப்படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றக்கூடியது. ஆகவேதான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுப்பது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

நம் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்தான் உடலில் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணமாக இருப்பவை. அவை அடைக்கப்படும்போது உடலில் தண்ணீர் தேங்கிவிடும். காய்ச்சலின்போது இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்றவே பார்லி கொடுக்கப்படுகிறது. பார்லி கஞ்சிக்கு, பார்லியை அரிசியை வேகவைப்பதுபோல வேகவைத்து உப்புச் சேர்த்துச் சாப்பிடலாம். அதேபோல் பார்லி சூப்பும் அருந்துவதற்கு நல்லது. 

ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை அரை வேக்காடாக வேகவைத்து பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன் ஐந்து பல் பூண்டு சேர்த்து நன்றாகக் குழைய வேகவைக்க வேண்டும். பிறகு இன்ஸ்டன்ட் சூப் பவுடர் சேர்த்துக் கொதிக்கவைத்து மிளகுத் தூள், உப்பு, கொழுப்பு நீக்கிய பால் (சிறிது) சேர்த்துப் பரிமாறலாம். சூப்பை பார்லியுடன் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கலாம். பொதுவாகவே, காய்ச்சல் வந்த நேரங்களில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பதே நல்லது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்