அசைவம் தவிர்த்து, சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே!

சென்னை, கொளப்பாக்கத்தில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிலையத்தில், மருத்துவ தாவரங்கள் சாகுபடி மற்றும் வர்த்தகம் தொடர்பான தேசியப் பயிலரங்கத் தொடக்கவிழா நேற்று  (3.10.2017) நடந்தது.  இதில் பங்கேற்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "காய்கறிகள், கீரைகளில்தான்  சத்துக்கள் அதிகம். சிக்கன், மட்டன் எல்லாம் வேஸ்ட்.. மட்டன், சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். சைவ உணவுகள் சாப்பிட்டால் தான் உடல் இளைக்கும்" என்று பேசியிருக்கிறார். 

சைவம் பற்றி பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  

ஏற்கெனவே மாட்டுக்கறிக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். இச்சூழலில், 'அசைவம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், அதனால் சைவம் சாப்பிடுங்கள்' என்று மாநில அமைச்சர் பேசியிருப்பது உள்நோக்கம் கொண்டது என்ற கொதிப்பும் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது. உணவியல், உடலியல் பற்றி எதுவுமே தெரியாமல், போகிற போக்கில் தனக்குத் தோன்றியதைப் பேசியிருக்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மருத்துவர் பாஸ்கர் ஆனந்த்

உண்மையில், அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? சைவ உணவுகளுக்கு உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உண்டா? 

பொதுநல மருத்துவர் பாஸ்கர் ஆனந்திடம் கேட்டோம் 

" சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்க வாய்ப்பேயில்லை.  அரிசி சாதம், பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை  குறைத்துக்கொண்டால் உடல் இளைக்கலாம்.  

அசைவம் மட்டுமல்ல, எந்த உணவையும் அதிகமாக சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும். சைவம் சாப்பிட்டால் குறைவாக சாப்பிடுவார்கள், அதனால் உடல் எடை குறையும் என்ற கருத்து உள்ளது. சைவமோ, அசைவமோ சாப்பிட்ட உணவுக்கு ஏற்ப உடல் உழைப்பு இருந்தால் எடை அதிகரிக்காது. அதேசமயம், அசைவ உணவுகளில் எண்ணெயில் பொறிக்கப்படும்  உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

சைவ உணவுகளில் இல்லாத ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அசைவ உணவுகளில் அதிகமாக இருக்கின்றன. சில புரதச்சத்துக்கள் அசைவ உணவுகளில் தான் அதிகமுள்ளன. எல்லா சத்துக்களும் நிறைந்த காய்கறிகள் அரிது. ஆனால், அசைவ உணவுகளில் அது எளிதாகக் கிடைக்கின்றன.

அதேபோல் அசைவ உணவுகளில் இல்லாத சில மினரல்கள் காய்கறிகளில் அதிகமாக இருக்கின்றன . எனவே, இரண்டும் கலந்த ஒரு உணவுப் பழக்கத்தைதான் நாம் கடைபிடிக்க வேண்டும்.

சைவ உணவுகள்

தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்னைகள் உள்ள பெண்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவற்றுக்கும் உணவுக்கும் சம்பந்தம் இல்லை. " என்கிறார் மருத்துவர் பாஸ்கர் ஆனந்த்.

இது பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணாகரனிடம் பேசினோம்  

0செந்தில் கருணாகரன்" சைவம் சாப்பிட்டால் உடல் இளைத்து விடலாம் என்பது 100  சதவிகிதம் தவறான கருத்து. சைவ உணவுகள் சாப்பிடும்  அனைவரும் ஒல்லியாக இருப்பதில்லை. தற்போது கிடைக்கும் பால் உணவுகளைச் சாப்பிட்டால் கூட உடல் எடை அதிகரிக்கும். பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்கள் அதிகமாகச் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கும்.

சைவ உணவுகளில் இல்லாத வைட்டமின் பி 12, மக்னீசியம், பொட்டாசியம், சில புரதங்கள் அசைவ உணவுகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. உழைக்கும் மக்கள், அசைவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். சித்த மருத்துவத்திலேயே வெள்ளாட்டுக் கறி, நாட்டுக்கோழி, வஞ்சர மீன், விரால் மீன், காடை போன்ற புலால் உணவுகள் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், வயதான காலத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய வகையில் சமைத்துச் சாப்பிடவேண்டும். அளவாகவும் உண்ணவேண்டும். அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால்  சில கெட்ட கொழுப்புக்கள்  உடலில் தங்கிவிடும். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அசைவ உணவுகள்

ஆனால், இது சைவத்துக்கும் பொருந்தும். நிலக்கடலை உடல் நலத்துக்கு நல்லதுதான். ஆனால் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். தண்ணீரை அதிகமாகக் குடித்தால் கூட பாதிப்பு உண்டாகும். எந்த உணவாக இருந்தாலும் தங்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு அளவாகச் சாப்பிட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை" என்கிறார் சித்த மருத்துவர் கருணாகரன்.

உணவியல் நிபுணர் மேனகாவின் கருத்தும் இப்படித்தான் இருக்கிறது.0உணவியல் நிபுணர் மேனகா

 "சைவத்துக்கும், ஸ்லிம்மான உடலமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதம், பருப்பு வகைகள், நெய் அதிகமாகச் சாப்பிட்டால் கூட  உடல் எடை அதிகரிக்கும். 

ஆனால், ஒரு கப் சாதத்துக்குப் பதில் இரண்டு கப் காய்கறிகள் எடுத்துக்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்துக்கள் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும். எடை அதிகரிக்காது. 

அசைவத்தைப் பொறுத்தவரை, வாரத்துக்கு இரண்டு முறை, முழு முட்டை சாப்பிடலாம். வெள்ளைக்கரு மட்டும் என்றால் தினமும் இரண்டு சாப்பிடலாம். மீன் வகைகள் வாரத்துக்கு இரண்டு முறையும், நாட்டுக்கோழி வாரத்துக்கு ஒருமுறையும் சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால்  அதிக அளவிலான புரதம் சிறுநீரகத்துக்குச் செல்லும். இதனால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்புகள் உண்டாகும்.

காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கும் உடல்பருமன் உண்டாகும் வாய்ப்புண்டு. காலை உணவு கண்டிப்பாகச் சாப்பிட்டு விடவேண்டும். முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு பழமாவது சாப்பிடவேண்டும். திணை, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை வாரத்துக்கு மூன்றுமுறையாவது கண்டிப்பாகச்  சாப்பிடவேண்டும். இது மிகவும் ஆரோக்கியமானது" என்கிறார் உணவியல் நிபுணர் மேனகா. 

சிறுதானியங்கள்

சைவமோ, அசைவமோ எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியத்துடனும்,  உடல் கட்டமைப்புடனும் வாழலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. உணவுப் பழக்கவழக்கத்தால் மட்டுமின்றி, மரபணு காரணமாகவும் உடல் பருமன் ஏற்படலாம் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசாமல் இருப்பது நல்லது..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!