வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/10/2017)

கடைசி தொடர்பு:08:30 (05/10/2017)

சிறுவனின் வயிற்றில் சிக்கிய பேட்டரியை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

நாகையைச் சேர்ந்த 10 வயது  சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரியை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,  நவீன எண்டோஸ்கோப் சிகிச்சைமூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் எண்டோஸ்கோப் சிகிச்சை

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதியழகன். பெயின்டர் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி தனம். இவர்களது மகன் தருண் (வயது 10) கடந்த சில நாள்களுக்கு முன்பு, லேப்டாப் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய, சுமார் 1 செ.மீ அளவுள்ள லித்தியம் பேட்டரியை வைத்து விளையாடும்போது, தவறுதலாக விழுங்கிவிட்டான். அது, உணவுக்குழாயில் சிக்கி அவதிப்பட்டுவந்தான். அதை அகற்ற நாகப்பட்டினம், தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்றும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 

சிறுவனின் உடலைப் பரிசோதித்த டாக்டர்கள், வீடியோ எண்டோஸ்கோப் மூலம் பேட்டரியை அகற்ற முடிவுசெய்தனர். அதன்படி,
இரைப்பை, குடல் சிறப்பு அறுவைசிகிச்சைப் பிரிவின் துறைத்தலைவர் ரவிச்சந்திரன்,  டாக்டர்கள் சுகுமார், ஜெஸ்வந்த், பிரபாகரன், மயக்கவியல் டாக்டர்கள் குமுதலிங்கராஜ், அருண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், உணவுக்குழாயில் தங்கியிருந்த பேட்டரியை வீடியோ எண்டோஸ்கோப் மூலம் வெற்றிகரமாக அகற்றினார்கள்.

பேட்டரி

" அந்த பேட்டரி லித்தியத்தால் ஆனது என்பதால், அது குடலில் அரிப்பு மற்றும் ஓட்டை ஏற்படுத்துவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. உரிய நேரத்தில் செய்யப்பட்ட சிகிச்சையால், அந்த ஆபத்திலிருந்து சிறுவன் தப்பியுள்ளான். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார் மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமசிவாயம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க