வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (06/10/2017)

கடைசி தொடர்பு:18:07 (06/10/2017)

புரட்டாசி மாதத்தில் அசைவத்தைத் தவிர்ப்பது ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விஷேசம். கோயில்களில் கூட்டம் களைகட்டும். அங்கு மட்டுமல்ல, காய்கறிக் கடைகளிலும் கூட்டம் நிறையும். பெரும்பாலானோர், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள். அதனால் இறைச்சிக் கடைகள் காற்றாடும். 

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவத்தை தவிர்க்கிறார்கள்? சைவம் மட்டுமே சாப்பிடுவதற்குக் காரணம் என்ன? விரதமிருக்கும் பலருக்கு இதன் பின்னணி தெரியாது. 

புரட்டாசி

'பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்...' என்பார்கள். `புரட்டாசி மாதத்தில் பகல் வேளையில் தங்கமே உருகிப்போகும் அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் மண் உருகி வழிந்து ஓடும் அளவுக்கு நல்ல மழை பெய்யும்' என்பதே அதன் பொருள். முன்னோர்கள் அவ்வளவு நுட்பமாக நம் தட்பவெப்பத்தை கணித்து நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இன்று இந்த நிலை சற்று மாறிவிட்டது. குளோபல் வார்மிங், ஓசோன் ஓட்டை என்று பல காரணங்களைச் சொல்கிறார்கள். இது வேறு. ஆனால், புரட்டாசியில் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கும், மேலே சொன்ன சொலவடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  

இது குறித்து விரிவாக விளக்குகிறார், சென்னை அரும்பாக்கம்  அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் ஒய்.தீபா. மருத்துவர்  தீபா

"சித்திரை தொடங்கி ஆவணி வரைக்கும் அடிக்கும் கடும் வெயிலால் பூமி வெப்பமயமாகிக் கிடக்கும். புரட்டாசி மாதத்தில் பெய்யும் திடீர் மழை, பூமியின் தன்மையை மாற்றும். அதனால் கடும் சூடு கிளம்பும்.  அது மனிதன் உள்பட எல்லா உயிரினங்களையுமே பாதிக்கும். மேலும், புரட்டாசி மாதத்தில் சூரியனின் தன்மை சற்று மங்கியிருக்கும். அதுவும் உயிரினங்களின் செயல்பாட்டைப் பாதிக்கும். செரிமானக் கோளாறில் தொடங்கி சளி, காய்ச்சல் என நோய்கள் வரிசை கட்டி நிற்கும். இக்காலக்கட்டத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது நோயின் தீவிரத்தை அதிகமாக்கி விடும். இந்தப் பருவ மாற்றத்தை அவ்வளவு நுட்பமாகக் கணித்து, இப்படியொரு விரதத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். 

புரட்டாசி மாத தட்பவெப்பம் என்பது கொசு போன்ற நோய் பரப்பும் உயிரிகள் பெருகுவதற்கு ஏற்ற காலம். கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களான டைபாய்டு போன்ற விஷக்காய்ச்சல்களும் அதிகமாகும். கொசு போன்ற உயிரிகளை அழிக்க, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.  விரதமிருக்கும் காலங்களில் இயல்பாகவே  நாம் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்போம். எதையும் ஆன்மிகத்துடன் இணைத்துச் சொன்னால் நம் மக்கள் தீவிரமாகக் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இந்தக் காலகட்டத்தில் புரட்டாசி விரதம் ஏற்படுத்தப்பட்டது. 

துளசி

புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களும் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம். உடல்நிலை பாதித்த உயிரினங்களைச் சாப்பிடுவதால் நமக்கும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இனவிருத்திக் காலத்தில் அவற்றைச் சாப்பிடுவது பாவம் என்று கருதியே மீன் சாப்பிடக் கூடாது என்று வகுத்திருக்கிறார்கள். 

 சூரிய வெளிச்சம் குறைந்துபோவதால் உடல்நலத்துக்குத் தேவையான வைட்டமின் -டி  கிடைக்காமல் போகும். இதனால் ஏற்படும் உடல்நலக்குறைபாட்டை `சீஷனல் அபெக்டிவ் டிஸ்ஆர்டர்' என்று சொல்வார்கள். உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படும். வைட்டமின் டி  என்பது ஸ்டீராய்டு மாதிரி. இதன்மூலம் நம் உடலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அது கிடைக்காமல்போகும் சூழலில் பனியின் தாக்கமும் சேர்ந்து மூட்டுத் தேய்மானம், வலி, வீக்கம் உள்ளிட்ட மூட்டு தொடர்பான நோய்கள் வரும். இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவற்றின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

சூரியனின் கதிர்கள் வைட்டமின் டி மட்டுமல்லாமல் `செரட்டோனின்' ஹார்மோன் சுரக்கவும் உதவும். இந்த ஹார்மோன் சுரப்பதன்மூலம் மகிழ்ச்சியான மனநிலையும், எனர்ஜியும் கிடைக்கும். மேலும் செரிமான சக்தி அதிகரிக்கும். சூரிய சக்தி கிடைக்காதபோது யோகா இயற்கை மருத்துவத்தை எடுத்துக்கொள்வதன்மூலம் செரிமான சக்தியைப் பெறுவதுடன் மனச்சோர்வு ஏற்படாமலும் காத்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கலாம் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தெரிவித்துள்ளது.

புரட்டாசி

`செரட்டோனின்' ஹார்மோன் சுரக்காமல் போவதால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, மாரடைப்பு ஏற்படுவது என்று பிரச்னைகள் தொடரும். இத்தகைய சூழலில் நாம் கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளை உண்டால் கூடுதல் பிரச்னைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே அசைவ உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். மனிதனின் நிம்மதியான தூக்கத்துக்கு `மெலட்டோனின்' என்ற ஹார்மோனே காரணமாகும். சூரிய ஒளி கிடைக்காமல் போவதால் `செரட்டோனின்' சுரப்பு குறையும்போது `மெலட்டோனின்' ஹார்மோனின் சுரப்பும் குறைந்துவிடும். இதனால் தூக்கமின்மை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற காலகட்டங்களில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதன்மூலம் சளி, செரிமானக் கோளாறுகள், இதய பாதிப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். குறிப்பாக துளசியை `குயின் ஆஃப் ஹெர்பல்' என்று சொல்வார்கள். அந்த அளவு சக்தி வாய்ந்தது. துளசியில் பயோபிளாவினாய்டு, குளோரோபில் போன்றவை அதிகம் இருப்பதால் இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. துளசியைச் சாப்பிடுவதன்மூலம் சைனஸ், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். சூரிய சக்தி கிடைக்கப்பெறாத சூழலில் தினமும் 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.  துளசி சேர்த்த நீரைக் குடிப்பதோடு துளசி இலைகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கவே, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் நடைமுறையை உருவாக்கினார்கள். சூரிய நமஸ்காரம் செய்வது, பிராணாயாமம் செய்வதன்மூலம் இந்தக் காலகட்டங்களில் நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்