வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (08/10/2017)

கடைசி தொடர்பு:18:27 (10/10/2017)

டெங்குவுக்கு ஏன் தடுப்பு மருந்துகள் இல்லை - மருத்துவர்கள் அடுக்கும் காரணங்கள் #Dengue

`டெங்குவுக்குத் தடுப்பு மருந்து இருக்கிறதா?’ இதுதான் இப்போது அத்தனை பேரின் கேள்வி, எதிர்ப்பார்ப்பு! சமீப நாள்களில் அந்த அளவுக்கு பீதியைக் கிளப்பியிருக்கிறது இந்தக் காய்ச்சல். டெங்குக் காய்ச்சல் வந்தால், நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்ற சில மருந்துகள்தாம் தடுப்பு மருந்தாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், `இது போன்ற மருந்துகள், நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டும்தான் அதிகரிக்கும். மற்றபடி, டெங்குவின் பாதிப்பை நேரடியாகக் குறைக்கும், வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மருந்துகளுக்கு இல்லை’ என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள்.

டெங்கு தடுப்பு மருந்து

அதிக பாதிப்பு இல்லாத ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்துகளை (Rotavirus vaccine) எல்லாம் அனைவருக்கும் தானாக முன் வந்து கொடுக்கும் அரசாங்கம், டெங்கு பாதிப்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவரும் வேளையில், அதற்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஏன் தயங்குகிறது? டெங்குவுக்குத் தடுப்பு மருந்து இருக்கிறதா, இல்லையா?

2015-ம் ஆண்டே உலக சுகாதார நிறுவனம், ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'டெங்வாக்ஸியா' (Dengvaxia) என்னும் மருந்தை உலக நாடுகளுக்குப் பரிந்துரை செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த மருந்து அனுமதிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இந்தியாவில் மட்டும் இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இந்தியாவில், பல்வேறு மருந்து நிறுவனங்கள் டெங்குவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்க ஆர்வமாக இருக்கும் நிலையில், அரசு ஒப்புதல் அளிக்க இவ்வளவு தாமதிப்பது ஏன் ?

டெங்வாக்ஸியா

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் காசியிடம் பேசினோம். ``இந்த மருந்துடாக்டர் காசி இப்போது சில நாடுகளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உலகளவில் இந்த மருந்து ஃபீல்டு ட்ரையலின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. ஆய்வு முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில், உலகமெங்கும் இதைப் பயன்படுத்தலாம். சில நாடுகளில் இப்போதே அனுமதித்திருக்கிறார்கள். அங்கே அந்த மக்களுக்கு இழப்பீடு (Compensation) வழங்குவார்கள். ஆனால், இங்கே அதற்கான சாத்தியம் இல்லை.

அதே நேரத்தில், `தடுப்பு மருந்தால் நோய் வராது’ என்ற கண்ணோட்டமே தவறானது. தடுப்பு மருந்துகளை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. ஒரு நோய்க்குப் போடப்படும் தடுப்பு மருந்தால், வேறொரு நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. டெங்குவுக்குத் தடுப்பு மருந்து வந்தாலும், அதன் விலை மிக மிக அதிகமாக இருக்கும்.

`டெங்குவுக்குத் தடுப்பு மருந்து இல்லை. அதனால்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி அரசாங்கம் தப்பிக்கக் கூடாது. அதேபோல, `தடுப்பு மருந்து இருக்கிறது; அரசாங்கம்தான் கொடுக்கவில்லை’ என்று அரசாங்கத்தின் மீதும் பழி சுமத்தவும் கூடாது.

பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து ஆட்சியாளர்கள் டெங்குவை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் கவனத்தைச் செலுத்த வேண்டும். வாரத்தில் வியாழக்கிழமையை மட்டும் `டெங்கு ஒழிப்பு நாளா’கக் கடைப்பிடிக்காமல் 24x7 அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் என அனைவரையும் டெங்குவுக்கான விழிப்புஉணர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்’’ என்கிறார் காசி.

டெங்கு தடுப்போம்

மருத்துவர் சுந்தரராமன்இது பற்றி பொது மருத்துவர் சுந்தரராமனிடம் கேட்டோம்.''இதுவரை டெங்கு வைரஸ் டைப் 4-தான் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான மருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், இங்கே டெங்கு டைப் 5 இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான மருந்து இங்கே இல்லவே இல்லை.

வருடா வருடம் எந்த வகையான வைரஸ் பாதிக்கிறது என்பதை பூனாவில் உள்ள நேஷனல் வைராலஜி லேபரட்டரியில் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அப்படிச் செய்தால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும். ஆனால், இந்த முயற்சிகளில் அரசு ஈடுபடுவதில்லை’’ என்கிறார் மருத்துவர் சுந்தரராமன்.

``இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பயோ வாராக (Biowar) இருக்கலாம்’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி. அதற்கான காரணங்களையும் ஒவ்வொன்றாக அடுக்குகிறார். ``1976-ம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஹரியானாவில் உள்ள சோனாபட்டில் டெங்குவைப் பரப்பும் கொசு பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால், அவர்கள் கொசுவை அழிப்பதற்காக வரவில்லை; பரப்புவதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். மேலும், இந்த ஆய்வுக்குப் பின்னணியில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ இருப்பது தெரியவந்ததால், ஒப்பந்ததை ரத்து செய்தார்.மருத்துவர் புகழேந்தி

1996-ம் ஆண்டு டெல்லியில் டெங்குவால் 10,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள். 400-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். அவர்களில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவர்களும் அடக்கம்! பாதிப்பு அதிகமாக இருந்ததால், முதன்முறையாக பாஷா என்னும் மூலக்கூறியல் விஞ்ஞானியின் தலைமையில் வைரஸின் முலக்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் அந்த வைரஸ் அதுவரை இந்தியாவில் இருந்ததில்லை என்பதையும், அதன் வீரியம் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தார்கள். பூனாவில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியிலும் டெங்கு வைரஸ் -5 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2001 -ல் மேற்கு வங்கத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அதிகளவில் மக்கள் இறந்தனர். அப்போது அது தொடர்பாக பாராளுமன்றத்தில் அக்டோபர் 6, 2001-ம் ஆண்டில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறைச் செயலாளர் கமல் பாண்டே `இந்தியாவில் மூன்று வியாதிகள் `பயோ வார்’ என்ற கேட்டகிரியின் கீழ் வருகின்றன’ என்றார். அவை, 1994-ம் ஆண்டில் சூரத்தில் வந்த பிளேக், 1996-ம் ஆண்டில் வந்த டெங்குக் காய்ச்சல், 2001-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் பரவிய மூளைக் காய்ச்சல்.

2015-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியும், சில மருத்துவர்களும் இணைந்து ஆய்வு ஒன்றைச் செய்தனர். அதில் எடுக்கப்பட்ட சாம்பிள்களைக் கொண்டு சோதித்ததில், `95 சதவிகிதம் பேருக்கு டெங்குவின் பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வருடத்துக்கு 2,800-க்கும் அதிகமானோர் இறக்க வாய்ப்பு உண்டு’ என்றும் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கட்டுரை 'சென்னையில் டெங்கு ' என்ற தலைப்பில் ஃபிளாப் என்னும் இணையதளத்தில் வெளியானது.

`இந்தக் கொசு இரண்டு கிலோமீட்டருக்கு உள்ளேதான் பரவும்’ என்கிறார்கள். ஆனால், எப்படி தமிழ்நாடு முழுவதும் பரவியது. தற்போது உள்ள வைரஸ் பற்றி மூலக்கூறு ஆய்வு செய்யப்படாதது ஏன்?

ஆய்வு செய்து முடித்தால்தான் தடுப்பு மருந்தைப் பற்றியே பேச முடியும். எந்த ஆய்வும் செய்யாமல், மருந்தைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை. இது பயோ வாராக இருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கின்றன. முதலில் இந்த அரசு அதைக் கண்டுபிடிக்கட்டும்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

பயோ வார்

டெங்கு பாதிப்பு ஏற்பட்டதற்கும், அது பரவியதற்கும் தொடர்ச்சியான வரலாறு இருக்கும்போது அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும் மந்தமாக இருக்கின்றன. வருடத்துக்கு 20,000-க்கும் அதிகமான மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் இந்த நோய்க்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் இவ்வளவு அலட்சியமாக இருப்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்