வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (08/10/2017)

கடைசி தொடர்பு:18:34 (08/10/2017)

உயிரிழப்பை ஏற்படுத்தும் கருக்கலைப்பு... தடுக்கும் வழிமுறைகள்! #AbortionAlerts

த்தனை சட்டங்கள் போட்டாலும் கருக்கலைப்பு என்பது இன்றும் பரவலாக நடைபெற்று வருகிறது. 25 வயதுக்குட்பட்ட பெண்கள்தாம்  அதிகமாகக் கருக்கலைப்பு செய்கிறார்கள் என்கிற புள்ளிவிவரமும் அதிரவைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடைபெறுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இப்படிப் பாதுகாப்பில்லாமல் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் ஹேமலேகா. 

கரு

கருக்கலைப்பு செய்யும் முறை: 

சட்ட விதிமுறையின்படி, கருக்கலைப்பு மேற்கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். கருவுற்று 10 வாரங்களுக்குள் மருத்துவரை அணுகி, சரியான காரணம் சொல்ல வேண்டும். பிறகு, மாத்திரைகளின் வழியே சுலபமாக கருக்கலைப்பு செய்யலாம். 

15 வாரத்துக்கு மேலாகிவிட்டால், இரண்டு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தக் கருக்கலைப்பினால் தாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் உறுதியளிக்க வேண்டும். பின்னர்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும். 

பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அவரின் உயிருக்குப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த பின்னரே கருக்கலைப்பு செய்யப்படும். 

சிசேரியன் செய்தவர்களின் கவனத்துக்கு: 

சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில், சிசேரியன் செய்யும்போது ஏற்பட்ட வடு மறைவதற்கு சில மாதங்கள் ஆகும். அதற்குள் கர்ப்பமானால், குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எல்லாத் தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனாலும், சிசேரியன் முடிந்த நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். 

பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும். 

முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது எனில், அடுத்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளி அவசியம். ஒருவேளை கர்ப்பமாகிவிட்டால், மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். தாயும் சேயும் நலமாக இருக்கும். 

கரு

மாத்திரைகள் பயன்படுத்துபவர்களின் கவனத்துக்கு: 

கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இது கர்ப்பப்பையை பாதிப்பதோடு உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும். இந்த மாத்திரைகளினால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும். 

35 முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு: 

கிராமப்புறங்களில் இன்றளவும் நான்கு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இருக்கின்றனர். அப்படிக் குறிப்பிட்ட வயதுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது அவர்களின் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், இயற்கையாகவே அவர்களது கர்ப்பப்பை வலுவிழந்து இருக்கும். அந்தச் சமயத்தில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனில், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தவிர்த்து முறையற்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. 

அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களின் கவனத்துக்கு: 

அடிக்கடி கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள், தொற்று நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும். பெண்ணுறுப்பில் அழற்சி ஏற்படுவதோடு, வலியும் அதிகரிக்கும். கர்ப்பப்பை சேதமடைந்து வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் கூட போகலாம். 

அபார்ஷன்

கண்டிப்பாக செய்யக் கூடாதவை: 

மருத்துவரின் பரிந்துரையில்லாத மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. 

இரண்டு முறைக்கு மேல் கருக்கலைப்பு செய்யக் கூடாது. 

கர்ப்பமுற்று 20 வாரத்துக்கு மேல் எந்தக் காரணமாக இருந்தாலும், கருக்கலைப்பு கூடாது. 

கருக்கலைப்பு செய்து ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகக் கூடாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்