வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (11/10/2017)

கடைசி தொடர்பு:20:13 (11/10/2017)

70,000 அறுவை சிகிச்சைகள், 5 அரிய கண்டுபிடிப்புகள்... அசத்தும் அரசு மருத்துவர் பெரியசாமி!

சாதிக்கவும் புதுமைகள் படைக்கவும் எல்லாத் துறைகளிலுமே சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், மருத்துவத்துறையில் நிகழும் ஒருசாதனையோ, புதிய கண்டுபிடிப்போ அது தொடர்புடையவருடன் நின்றுவிடுவதில்லை; எத்தனையோ பேரின் சிகிச்சைக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது. இதைத் தெளிவாக உணர்ந்தவர்கள்தான் ஈடுபாட்டோடு புதிய புதிய கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையில் நிகழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவர், புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அரசு மருத்துவர் பெரியசாமி!

சிறந்த மருத்துவர் விருது பெற்ற அரசு மருத்துவர் பெரியசாமி

ஆலங்குடி மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணிபுரியும் பெரியசாமியைச் சந்தித்தோம். பரபரப்பான தன் மருத்துவப் பணிகளுக்கு இடையே நம்மிடம் பேசினார்... ``புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வளவம்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். படிச்சதெல்லாம் அரசுப்பள்ளியிலதான். 10-வதுல மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்தேன். அதனால எனக்கு மருத்துவம் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைச்சது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலதான் யூஜி, பிஜி படிச்சேன். நுழைவுத் தேர்வுவெச்சு மருத்துவக் கல்லூரிக்குப் படிக்கப் போன முதல் பேட்ச் நாங்கதான். தஞ்சாவூர்ல படிப்பெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒன்றரை வருஷம் வேலை செஞ்சேன். அங்கே வேலை பார்த்துக்கிட்டே மேற்படிப்பும் படிச்சு முடிச்சேன்.

மருத்துவத்தில், எல்லாருக்கும் பலனளிக்கும்விதமா இதுவரைக்கும் ஐந்து கருவிகளைக் கண்டுபிடிச்சிருக்கேன். 1995-ம் வருஷம் பாண்டிச்சேரி ஜிப்மர்ல இருக்கும்போதுதான் என்னுடைய முதல் கண்டுபிடிப்பு உருவானது. அந்தக் கருவிக்கு பேரு `பெரி’ஸ் பிரீத்திங் சர்க்யூட்’ (Peri's Breathing circuit). முன்னாடியெல்லாம் செயற்கை சுவாசம் கொடுக்கணும்னா, நோயாளியை மயக்கநிலைக்குக் கொண்டு போகணும். அதற்கப்பறம் ஒரு மெஷின்ல இருந்து டியூப் மூலமா செயற்கை சுவாசத்தை அவங்களுக்குக் கொடுப்போம். இந்த முறையே, பெரியவங்களுக்கு வேற மாதிரியும், சிறியவர்களுக்கு வேற மாதிரியும் இருக்கும். நான், `இப்படி ரெண்டுவிதமாக ஏன் இதைச் செய்யணும்?’னு நினைச்சேன். பெரியவங்களுக்கும் சிறியவர்களுக்கும் ஒரே டியூப்ல கொடுக்கணும்னு முடிவு பண்ணி வடிவமைச்சதுதான் இந்தக் கருவி. இதை 1999-ம் வருஷம் கொச்சியில நடந்த அகில இந்திய அறிவியல் மாநாட்டுல அறிமுகப்படுத்தினேன்.

அவசர சிகிச்சை

2002-ம் வருஷத்துல என்னோட இரண்டாவது கண்டுபிடிப்பு. அதுக்கு `பெரி’ஸ் நாஸல் மாஸ்க்’னு (Peri's nasal mask) பெயர். இது, சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மூக்குக் கவசம். இப்போ, இருக்குற மாஸ்க்கெல்லாம் மூக்கை மட்டும் மூடாம, வாயையும் மூடிடுது. அதுவும் இல்லாம ஒரு தடவை கழட்டிட்டு, திரும்பப் போடும்போது முன்னாடி எந்தப் பக்கம் மாஸ்க் போட்டிருந்தோம்னு தெரியாது. ஒருவேளை மாத்திப் போட்டுட்டா, முன்னாடி இருந்த அழுக்கெல்லாம் வாய் வழியா உள்ளே போயிடும். அதுக்கப்புறம் பேசவும் முடியாது. அதனால மூக்குல மட்டுமே உபயோகப்படுத்துற மாதிரி மாஸ்க் கண்டுபிடிச்சேன். அதை எடுத்து மூக்குல மாட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். ரொம்ப எளிமையானது.

மூன்றாவதை 2012-ம் வருஷம் வடிவமைச்சேன். அதுக்கு, `பெரி’ஸ் மௌத் கேக் ஹோல்டர்’ (Peri's mouth gag holder). இது, தொண்டைப்பகுதியில் செய்யும் அறுவை சிகிச்சை தொடர்பானது. முன்னாடியெல்லாம் ஒருத்தருக்கு வாயில் அறுவைசிகிச்சை செய்யணும்னா, வாய் ஆடாமல் இருக்க மூன்றுவிதமான கருவிகளை வைக்கணும். சில நேரங்கள்ல அறுவைசிகிச்சை செய்யும்போது, அதுல ஒண்ணு காணாமப் போயிடும். மூணுல ஒண்ணு இருந்தா, இன்னொண்ணு இருக்காது. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதை எளிமையாக்க நானே இந்தக் கருவியை வடிவமைச்சேன். இந்தக் கருவியை வாயில வெச்சாலே போதும். மிகச் சுலபமாக வாய் மற்றும் தொண்டைப்பகுதியில் அறுவைசிகிச்சை செய்ய உதவும். இது, எல்லா வயதினருக்கும் ஏற்றது.

நவீன கருவி

2013-ம் வருஷம் என்னோட நான்காவது கண்டுபிடிப்பு. அதுக்கு, `பெரி’ஸ் லிம்ப் ஹோல்டர்’னு (Peri's limb holder) பெயர். இது கை மற்றும் கால் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படுது. முன்னாடியெல்லாம், ஒருத்தருக்கு கையில அறுவைசிகிச்சை செய்யணும்னா ஒருத்தர், நோயாளியின் கையைப் பிடிச்சுக்கணும். ஒருத்தரோட கை ரெண்டு கிலோ இருக்குதுனா, அனஸ்தீஷியா கொடுத்ததுக்கு அப்புறம் பத்து கிலோவாகிடும். இதனால தூக்கிப் பிடிக்கிறவங்களுக்கு கை ரொம்ப வலிக்கும். சிரமப்படுவாங்க. கைக்கே இப்படினா, காலுக்கெல்லாம் இருபத்தைந்து கிலோ வரைக்கும் ஆகும். அதற்காகத்தான் இந்தக் கருவியை வடிவமைச்சேன். இந்தக் கருவி, கை மற்றும் காலில் செய்யும் அறுவைசி‌கி‌ச்சைக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

நான் ஐந்தாவதாக கண்டுபிடிச்சது, மூக்கில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்கறதுக்கான கருவி. அதுக்கு, `பெரி’ஸ் ஹீமோஸ்டேட்டிக் நாஸக் க்ளாம்ப்’னு (Peri's Hemostatic nasal clamp) பெயர். பொதுவாக, மருத்துவமனையில மூக்குல ரத்தக்கட்டினு வர்றவங்களைப் படுக்கவெச்சு, மூக்கின் ரெண்டு பக்கமும் பஞ்சைவெச்சு அடைப்பாங்க. இது சம்பந்தப்பட்டவங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். கடவுள் மூக்கை சுவாசிக்கத்தான் கொடுத்திருக்கார். மூக்கு வழியாகத்தான் காற்று உடம்புக்குப் போகணும். ஆனா, இப்படி பஞ்சை வைக்கிறதால மூக்கு வழியாக சுவாசிக்க முடியாது. மூக்குல குறிப்பிட்ட இடத்துலதான் அந்தக் கட்டி இருக்கும். அது எங்க இருக்கும்னு நமக்குத் தெரியும். அதனால எதுக்கு மூக்கையே அடைக்கணும்? இதை எளிமையாகப் பண்ணணும்னுதான் இந்தக் கருவியை வடிவமைச்சேன்.

இவை தவிர, புதிதாக இரண்டு எளிமையான மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். ஒண்ணு, `Nasopharyngeal ventilation.’ அதாவது, மூச்சுத்திணறல் இல்லாமல் சீராக சுவாசத்தை ஏற்படுத்தும் முறை. ஒருவர் மயக்கமாக இருக்கும்போதும் அறுவைசிகிச்சை செய்யும்போதும் மூச்சு ஒரு சீராக இருக்காது. இதற்காகத் தடையற்ற பிராண வாயு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இன்னும்மருத்துவர் பெரியசாமி சிலருக்கு சுய நினைவு இல்லாதபோது நாக்கு உள்ளிழுக்கப்பட்டு தொண்டைப் பகுதியில் நாக்கு பந்துபோல அடைத்துக்கொள்ளும். மேற்கண்ட இரு காரணங்களினால் சுவாசப்பாதை அடைபட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். முன்பெல்லாம், மூச்சுத்திணறலை சரிப்படுத்த, இடுக்கி போன்ற ஒரு கருவி மூலம் பந்துபோன்ற நிலையில் இருக்கும் நாக்கை ஒதுக்கி, அதன்வழியே பிராண வாயுக்கான குழாயைச் செலுத்துவார்கள். இந்த முறையை அவசரத்துக்கு கையாளுவதில் நிறைய சிரமங்களும் இருந்தன. இதை எளிமையாக்க வேண்டுமென்றே மிகச் சிறிய குழாயை மூக்கின் வழியே சுவாசக் குழாய் வரை செலுத்தி மூச்சுக்காற்று அளிக்கக்கூடிய ‘தொண்டைக்குழி சுவாசம்’ என்னும் புதிய முறையை கண்டுபிடித்தேன். இந்த முறையின் மூலம் மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு தடையற்ற சுவாசக் காற்று உடனே கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கும். மேலும், இது எளிமையான முறை என்பதால், அவசர காலத்தில் செவிலியர்களும் கையாளலாம். இந்த ஆராய்ச்சியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தேன். இதை, நிறைய பேர் வியந்து பாராட்டினார்கள்.

இது தவிர, `Delayed umbilical cord clamping in ceasarean section’ என்ற ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தேன். அதாவது, குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் வீணாகாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு வழிமுறை. ஒரு குழந்தை பிறந்து, நஞ்சுக்கொடி பிரிய இரண்டு நிமிடம் ஆகும். அந்த இரண்டு நிமிடத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு 150 மி.லி ரத்தம் போகிறது. ஆனால், நிறைய பேர் நஞ்சுக்கொடி பிரியறதுக்குள்ளயே வெட்டிடுவாங்க. இதனால் குழந்தைக்கு போகவேண்டிய ரத்தம் வீணாகப் போயிடும். நான் புதுக்கோட்டையில் இருக்கும் மருத்துவர்களிடம் சொல்லி இரண்டு நிமிடம் கழிச்சு, தொப்புள்கொடியை வெட்டச் சொன்னேன். இதை இருநூற்றம்பது பேருக்குப் பண்ணி பார்த்தோம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடம்பில் இருக்கும் மொத்த ரத்தமே 240 மி.லிதான். அதுலயும் முழுசாப் போகவிடாமத் தடுத்துட்டு இருந்தாங்க. ஆனா, இந்த மாதிரி செய்து பார்த்தப்போ குழந்தைங்க நன்கு சுறுசுறுப்பாக இருந்தன. எடையும் சரியான அளவில் இருந்துச்சு. இந்த முறையை வேலூரில் நடந்த அகில இந்திய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிப்பிச்சேன். இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைச்சுது. 2,000 ரூபாய் பரிசுத்தொகையும் கொடுத்தாங்க.

இதுவரை 70,000 அறுவைசிகிச்சைகள் பண்ணியிருக்கிறேன். 16 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவியல் மாநாடுகளில் சமர்ப்பிச்சிருக்கேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் தெற்காசிய மாநாட்டிலும், ஐந்து கட்டுரைகள் தேசிய அளவில் நடைபெற்ற மாநாட்டிலும் மற்றவை தென்னிந்திய மற்றும் தமிழக மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டன. இதில் இரண்டு முறை சிறந்த ஆராய்ச்சிக்கான பரிசு வழங்கப்பட்டது’’ என்கிற டாக்டர் பெரியசாமி 2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது, அதே 2013-ம் ஆண்டில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் சிறந்த மருத்துவர் விருது, 2014-ம் ஆண்டு, தேசிய அளவில் இந்திய மருத்துவ சங்கத்தால் வழங்கப்படும் `Award of merit’ என்னும் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

சிறந்த மருத்துவர் விருது வழங்கும் விழா

``இப்படிக் கண்டுபிடிப்புகளின் பக்கம் டாக்டர் பெரியசாமிக்கு ஆர்வம் வந்தது எப்படி?’’ என்று கேட்டால், நெகிழ்ச்சியான நிகழ்வொன்றைச் சொல்கிறார்...

``ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கடியாப்பட்டிங்கிற கிராமத்துக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்றதுக்காக ஒரு குழுவாப் போயிருந்தோம். அந்த கிராமத்துல குடும்பக் கட்டுப்பாடு பண்றதுக்கு இருபது பேர் வந்தாங்க. முதல்ல ஒரு பொண்ணுக்கு பண்ணினோம். குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டு இருக்கும்போதே அந்தப் பொண்ணுக்கு மூச்சு இழுக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் காலத்துல இப்போ இருக்கிற வசதிகல்லாம் கிடையாது. அந்த பெண்ணுக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சு. அப்போ இருந்த கருவிகளைவெச்சு என்னால ஒண்ணும் பண்ண முடியலை. நொந்து போனேன். அந்தக் கருவிகள் மேல எனக்குக் கோபம் வந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்தப் பொண்ணைக் காப்பாத்திட்டோம். அதுக்குப் பிறகுதான் சிகிச்சை செய்வதற்கான கருவிகளை எளிமையாக்கணும்னு இந்த மாதிரி கண்டுபிடிப்புகளில் இறங்கினேன்.’’ என்கிற பெரியசாமி, தன் ஐந்து ஐந்து கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வாங்கியிருக்கிறார்.

``இதை மக்களுக்காகத்தான் கண்டுபிடித்தேன். இதை அரசாங்கம் மக்களுக்குப் பயன்படுத்த விரும்பினால், அரசுக்கு காப்புரிமை கொடுக்கவும் தயாராக உள்ளேன். புதுக்கோட்டையில் நிறைய மருத்துவர்களுக்கு இந்தக் கருவிகளை இலவசமாக கொடுத்து வருகிறேன். எல்லோருக்கும் இந்தக் கருவிகள் பயன்பட வேண்டும் என்பது தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை. அதேபோல எனக்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதற்கு தேவையான நிதியுதவியை, எப்படி, எங்கு வாங்க வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு கண்டுபிடிப்பு வெளியே தெரிய ஆரம்பித்தவுடன், அரசாங்கமே கண்டுபிடிப்பாளர்களுக்கு தானே முன்வந்து நிதியுதவி செய்ய வேண்டும். நான் எனது சொந்தச் செலவில்தான் இந்தக் கருவிகளைத் தயாரித்தேன். ஓர் உயிரைக் காப்பாற்றுவதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருந்துவிட முடியும். அதற்காக எவ்வளவு கஷ்டங்களை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்’’ என்கிறார் இந்த டாக்டர்.

`தொட்டதற்கெல்லாம் காசு!’ என்று மருத்துவமனைகளைப் பார்த்தாலே எல்லோரும் அலறியடித்து ஓடிக்கொண்டிருக்கும் காலம் இது. மக்கள் நலனில் அக்கறைகொண்ட இப்படியும் ஒரு டாக்டர்... அதுவும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் என்பது நம்மை ஆச்சர்யப்படவைக்கிறது. மக்கள் நலனில் அக்கறையிருந்தால் மருத்துவம் ஒரு வரம்! அந்த வரம் டாக்டர் பெரியசாமிக்கு வாய்த்திருக்கிறது. இதற்காகவே அவரை மனமாரப் பாராட்டலாம்!


டிரெண்டிங் @ விகடன்