வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (12/10/2017)

கடைசி தொடர்பு:12:01 (12/10/2017)

“கட்டிலு வேணுமா கட்டில்?!” - கயிற்றுக் கட்டில் பிசினஸில் கலக்கும் ஆஸ்திரேலியக்காரர்!

வேப்ப மர நிழல்... மென்மையாக உடலை வருடும் காற்று... கயிற்றுக் கட்டில்! இந்த சுகத்துக்கு ஈடு எதுவும் இல்லை. மாத்திரை, மருந்துகள் தந்துவிடாத நிம்மதியான உறக்கத்துக்கு முழு உத்தரவாதம். நம் ஊர் பாரம்பர்யக் கயிற்றுக் கட்டில் இப்போது ஆஸ்திரேலியாவில் விற்பனையில் சக்கைபோடு போடுகிறது! உங்களால் நம்ப முடிகிறதா... ஒரு கயிற்றுக் கட்டிலின் விலை 50,236 ரூபாய்! நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியா, சிட்னி நகரத்தில் வசிக்கும் டேனியல் புளூர் (Daniel Bloore) என்பவர்தான் இந்த விலைக்குக் கயிற்றுக்கட்டிலை விற்பனை செய்கிறார். விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.

கயிற்றுக் கட்டில்

டேனியல் புளூரைத் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினோம்... “நான் 2010-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்தேன். கல்கத்தாவில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் நண்பரானார். பீகாரிலுள்ள தன் கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கேதான் கயிற்றுக் கட்டிலை முதன்முறையாகப் பார்த்தேன். ஒவ்வொரு வீட்டிலும் இந்தக் கட்டில் இருந்தது. நடுமுற்றத்தில் இந்தக் கட்டிலைப் போட்டு, பலரும் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய நண்பர் வீட்டிலும் அப்படித்தான். மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. அந்தக் கட்டிலில் அமர்வதே ஒருவித மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

ஒருநாள் வயதானவர்கள் இருவர், கையில் கயிற்றுக்கான நாரோடு வந்தார்கள்; கயிறு பின்ன ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நான் உதவினேன். நானும் மெள்ள மெள்ள அவர்களிடமிருந்து கட்டில் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, இந்தக் கட்டிலால் உடலுக்குப் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினேன். ஒரு கட்டில் தேவைப்பட்டது. அப்போது இந்தியாவில் பார்த்த கட்டில் நினைவுக்கு வந்தது. அதையே செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஆனால், நான் இருந்த இடத்தில் கயிற்றுக் கட்டில் செய்பவர்கள் யாரும் கிடையாது. எனக்கு இந்தியாவில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நானே அதைத் தயார் செய்ய முடிவெடுத்தேன். கட்டிலுக்குத் தேவையான பொருள்களை முதலில் கொண்டு வந்தேன். கயிறு பின்ன ஆரம்பித்தேன். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப் போக அந்த லாகவம் வந்துவிட்டது. எனக்கான கட்டில்... நானே தயார் செய்தது... என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. தயாரானதும், அக்கம் பக்கத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வந்து காட்டினேன். என் கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாக ஆரம்பித்தது. பிறகு இதை, என் நண்பர்களுக்குச் செய்துகொடுக்க ஆரம்பித்தேன். நண்பர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. முதுகுவலி இருந்த என் நண்பர்களில் சிலர், `இப்போது வலி சரியாகிவிட்டது’ என்று சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

டேனியல் புளூர்

நண்பர்கள் அளித்த ஊக்கத்தில், கட்டில் தயார் செய்து மற்றவர்களுக்கும் விற்கலாம் என்று தோன்றியது. ஆர்டர் வாங்கி செய்து கொடுத்தேன். இப்போது கட்டிலுக்கு பலத்த வரவேற்பு! விற்பனையும் அமோகம்! இந்தக் கட்டிலின் கால்களுக்கு மேப்பிள் டிம்பர் (Maple timber) என்னும் மரத்தைப் பயன்படுத்துகிறேன். என்னிடம் இளம் வயதினர்தாம் அதிகளவில் இதை வாங்கிச் செல்கின்றனர். மற்ற மெத்தைகளில் படுப்பதைவிட கயிற்றுக்கட்டில் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலருக்குக் கடற்கரையில் உல்லாசமாக ஓய்வெடுப்பதற்கும் இந்தக் கட்டில் வசதியாக இருக்கிறதாம்" என்கிறார் டேனியல் புளூர்.

வயதானவர்கள்தாம் கயிற்றுக்கட்டிலில் தூங்குவார்கள், ஓய்வெடுப்பார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். கயிற்றுக் கட்டிலில் படுப்பதை கௌரவக் குறைச்சலாக நினைப்பவர்களும்கூட உண்டு. ஆனால் கடல் கடந்து, கண்டம்விட்டு கண்டம் தாண்டியும் கயிற்றுக்கட்டிலின் மகத்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், நம்முடைய பாரம்பர்யமான கட்டிலின் அருமை நமக்குத் தெரியவில்லை.

“கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’’ - சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.சித்த மருத்துவர்

சித்த மருத்துவத்தில் படுக்கைக்கும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைப் பாயில் படுக்கும்போதும் நமக்கு ஒருவித நன்மை கிடைக்கும். படுத்து ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே கயிற்றுக்கட்டில். தென்னை நார், பனை நாரால் திரிக்கப்பட்ட கயிற்றால் இது பின்னப்படுவதால், இதில் படுத்தால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். உடற்சூடு தணியும்.

சித்த மருத்துவ வகைப்பாட்டின்படி 4,448 நோய்கள் உள்ளன. அதில் 4,000 நோய்கள், பித்தம் அதாவது உடற்சூட்டால் உண்டாவது. மூலநோய் முதல் சர்க்கரைநோய் வரை முதன்மைக் காரணமாக பித்தம்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நார்களால், மரத்தால் ஆன நாற்காலிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமே உடலில் சூடு தங்கிவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால் உடலை, எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியக்களால் நமக்கு நன்மை கிடைக்கும்.

இலவம் பஞ்சைத் தவிர மற்ற வகைப் பஞ்சு மெத்தைகளில் படுப்பது நல்லதல்ல. இப்போது கிடைக்கும் ஸ்பிரிங் மெத்தைகளில் படுத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும். கயிற்றுக் கட்டிலில் படுத்தால், அது நம் உடலுக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும். ஆனால் ஸ்பிரிங் மெத்தைகளில், அதற்கு ஏற்றவாறு நாம் உடலை வளைந்து கொடுக்க வேண்டும். தண்டுவடப் பிரச்னைகள், சூடு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்கு மெத்தைகள்தாம் முக்கியக் காரணம்" என்றார் வேலாயுதம்.

“அப்படியானால், தரையில் படுத்துத் தூங்கலாமா?’’ என்று கேட்டோம். ``தரையைவிட மேலானது கயிற்றுக்கட்டில்தான். இப்போதுள்ள மார்பிள் தரைகளில் படுக்கவே கூடாது. அது அதிகக் குளிர்ச்சியாக இருக்கும். அதிகக் குளிர்ச்சி, எந்த வலியையும் அதிகப்படுத்திவிடும். பாய் விரித்து வேண்டுமானால் தூங்கலாம்.

நைலான் கயிறுகளால் செய்யப்பட்ட கயிற்றுக் கட்டில்களைப் பயன்படுத்தக் கூடாது, தென்னை, பனை நாரால் ஆன கயிற்றால் பின்னப்பட்ட கட்டில்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கிடைக்காத பட்சத்தில் வாழை நாரால் ஆன கட்டிலைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

பாய்

உண்ணும் உணவிலிருந்து மருத்துவம் வரை உலகமே இயற்கையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. நாம்தான் அதன் அருமை புரியாமல் புறக்கணிக்கிறோம். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இயற்கையால் ஆன பொருள்களைப் பயன்படுத்துவோம், ஆரோக்கியமாக வாழ்வோம். அதற்கு ஆஸ்திரேலியாவுக்குப் போன நம்ம ஊர் கயிற்றுக் கட்டிலை உதாரணமாகக்கொள்வோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்