வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (12/10/2017)

கடைசி தொடர்பு:18:02 (12/10/2017)

டெங்கு... இப்போது நமக்குத் தேவை விவாதங்கள் அல்ல, செயல் மட்டுமே! - அ.மார்க்ஸ்

நிலவேம்புக் கஷாயத்தின் மூலம் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்திவிட இயலுமா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னர் ஒரு அலோபதி மருத்துவர், `அது சாத்தியமில்லை’ எனச் சொல்லியிருந்ததைப் பார்த்தேன். இன்று சித்த மருத்துவர்கள் சிலர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, `டெங்குவை மட்டுமல்ல... சிக்குன் குனியாவையும் நிலவேம்புக் கஷாயத்தால் குணப்படுத்திவிட முடியும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவாதங்களுக்கிடையில் தமிழகத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

இதில் எதை நம்புவது? 

ஹோமியோபதி மருத்துவ மேதை டாக்டர் ஹானிமன் (Samuel Hahnemann) தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அலோபதி மருத்துவராகக் கழித்தவர். இறுதி ஆண்டுகளில்தான் அவர் ஹோமியோபதி மருத்துவத்தை அனுபவபூர்வமாகக் கண்டறிந்து உலகுக்கு ஈந்தார். தன் உடலையே ஆய்வுக் களமாக்கிப் பரிசோதனைகளைச் செய்து, அவர் இந்த வைத்திய முறையைக் கண்டுபிடித்தார். அவரது, `Organon of Medicine' நூலை வாசித்தால், அது ஒரு மருத்துவ நூலா, தத்துவ நூலா, அல்லது ஓர் இலக்கியமா என மயங்கும் வகையில் அது அமைந்திருக்கும்.


டெங்கு

 

அந்த நூலின் முதல் பதிப்பு (1810) வெளிவந்தபோது அதற்கு ஹானிமன் இட்ட தலைப்பு, `Organon of the Radical Medical Science.’ அதாவது `ஒரு தீவிரமான மருத்துவ அறிவியல் குறித்த தத்துவம்’ என இதை மொழியாக்கம் செய்யலாம். ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர் (1819) அதன் இரண்டாம் பதிப்பை அவர் வெளியிட்டபோது அதற்கு அவர் இட்ட தலைப்பு, `Organon of the Healing Art.’ அதாவது `நோயாற்றுக் கலை குறித்த ஒரு தத்துவம்.’  இரண்டு தலைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மிக முக்கியமானவை.
 

தொடக்கத்தில் தன் கண்டுபிடிப்பை `அறிவியல்’ (Science) எனவும், `பகுத்தறிவுக்குட்பட்டது’ (Rational) எனவும் உரிமை கோரிய ஹானிமன், பின்னர் அப்படிச் செய்யவில்லை. இதன் பொருள் `அவர் அதை விஞ்ஞானமல்ல, பகுத்தறிவுக்குட்பட்டது அல்ல என்றெல்லாம் ஏற்றுக்கொண்டார்' என்பதல்ல. மாறாக, நவீன விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவு முதலான கருத்தாக்கங்களை அவர் கேள்விக்குள்ளாக்கினார். தனது முறையை அவர் ஓர் அறிவியல் (Science) என்பதற்கு மாறாக `நோயாற்றும் கலை' (healing art) என்றார். பகுத்தறிவு என்பதற்குப் பதிலாக `true', `genuine' முதலான கருத்துகளை ஹானிமன் பயன்படுத்தியுள்ளதை மருத்துவர் ரிச்சர்ட் ஹ்யூக்ஸ் சுட்டிக்காட்டுவார்.

டெங்குக் காய்ச்சல்
 

`பகுத்தறிவின் வன்முறை' குறித்து இன்று பின் நவீனத்துவத் தத்துவவியலாளர்கள் பேசுவது இத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.
நவீன அறிவியலின் அடிப்படையிலான சோதனைகள் மூலமும் நவீன பகுத்தறிவுச் சட்டகங்களின் (Framework) மூலமும் உங்களால் ஹோமியோபதியை நிறுவிவிட முடியாது. எடுத்துக்காட்டாக இரண்டு ஹோமியோபதி மருந்துகளை நவீன விஞ்ஞானக் கருவிகளின் ஊடாகவோ, வேதியியல் பகுப்பாய்வுகளின் ஊடாகவோ பிரித்து அடையாளப்படுத்திவிட இயலாது. 'பெரிடா கார்ப்' (Baryta carb) என்று ஒரு ஹோமியோபதி மருந்துள்ளது, `Barium Carbonate' என்கிற வேதியியல் பொருளிலிருந்து அது தயாரிக்கப்படுகிறது. ஆனால், பெரிடா கார்பை வேதியியல் பரிசோதனை செய்து அது பேரியம் கார்பொனேட்டிலிருந்துதான் தயாரிக்கப்பட்டது எனக் கூற முடியாது. நவீன விஞ்ஞானக் கருவிகளால் கண்டறிய இயலாத அளவுக்கு அத்தனை மடங்கு அது நீர்க்கப்பட்ட ஒன்று.

அதேபோல ஹோமியோபதியில் ஒரு மருந்தின் வீரியத்தை அதிகரிப்பது என்பது அதை நீர்க்கச் செய்வதன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதையும் நீங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு விளக்கிவிட இயலாது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு நீர்க்கச் செய்வதன் மூலமாக ஹோமியோபதி மருந்துகளின் நோயாற்றும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது என சுய உடற் சோதனைகளின் மூலம் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர். தி.சா.ராஜு, பட்டுக்கோட்டை சம்பத் குமார் போன்ற ஹோமியோபதி மருத்துவர்கள் தாங்கள் குணப்படுத்திய நோய்கள் குறித்த அனுபவங்களைப் பதியும்போது அவற்றை ஓர் அறிவியல் கட்டுரையாக அல்லாமல், ஒரு கதையாகவும் இலக்கியமாகவும் முன்வைப்பதை நாம் காண வேண்டும்.

மொத்தத்தில் நாம் இவற்றிலிருந்து புரிந்துகொள்வது இதுதான்... ஓர் அறிதல் முறையை இன்னொரு அறிதல் முறையின் சட்டகங்களைக் கொண்டு நிறுவிவிட இயலாது என்பதுதான். ஓர் அறிதல் முறையை இன்னோர் அறிதல் முறையின் சட்டகங்களினடியாக மறுதலித்துவிட இயலாது என்பது இதன் மறுதலை.

அலோபதி என்பது தத்துவ வரலாற்றில் 'மறுமலர்ச்சிக் காலம்' எனச் சொல்லக்கூடிய நவீன அறிவியல் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் தோன்றிய காலகட்டத்தின் ஒரு விஞ்ஞான முறை. இன்னொரு பக்கம் முதலாளியம், ஏகாதிபத்தியம், காலனியம், உலகமயம், நவீன உலக ஒழுங்கமைப்பு ஆகியவற்றுக்கு இணையாக வளர்ந்து வந்த ஒன்று. இந்தக் காலனியாக்கம் மற்றும் கார்ப்பரேட் கொள்ளைகள் ஆகியவற்றுடனும் இணைந்து அவற்றின் கருவியாகவும் ஆன ஒன்று.

அதேநேரத்தில் அலோபதி இன்று பெரிய அளவில் மிகவும் நுட்பமாக வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் தீர்க்கவே இயலாத நோய்கள் என்பதெல்லாம் இன்று எளிதில் எதிர்கொள்ளக்கூடியவையாக மாறிவிட்டன. உறுப்பு மாற்றம் முதலியவற்றில் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. `Bio technology’, `Stem cell’ ஆய்வுகள் ஆகியவற்றின் ஊடாக இன்னும் பெரிய சாதனைகள் விரைவில் நிகழ இருப்பதெல்லாம் உண்மைதான்.

டெங்கு காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படுகிறது. `வைரஸ்களைக் கட்டுப்படுத்த நிலவேம்பால் முடியாது’ என அலோபதி மருத்துவர்களில் சிலர் கூறும் எச்சரிக்கையை நாம் மறுத்துவிட இயலாது என்பதும், அந்த அடிப்படையில் நம் அரசுகள் இதற்கு நிரந்தரத் தீர்வான கொசுக்களை அழித்தல் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நிலவேம்புக் கஷாயத்தைப் பற்றிப் பிரசாரம் செய்துகொண்டிருந்தால் மட்டும் போதாது என அலோபதி மருத்துவர்கள் சொல்வதை ஏற்கும் அதே நேரத்தில் நாம் மேற்கண்ட உண்மைகளை மறந்துவிடவும் கூடாது. அலோபதி அளவுகோல்களைக் கொண்டு நிலவேம்பின் பயன்பாட்டை முற்றாக நிராகரித்துவிட இயலாது.

நிலவேம்பு

சித்தா முதலிய பாரம்பர்ய மருத்துவ முறைகள் மனித உடலை ஒரு முழுமையாக (Holistic) அணுகுகின்றன. நவீன விஞ்ஞானமோ, மனித உடலைப் பல கருவிகள் இணைந்த ஓர் எந்திரத்தைப்போல (Flexnerian model) அணுகுகிறது. ஒரு மருத்துவமுறையை இன்னொன்றால் அளந்து முடிவெடுத்துவிட இயலாது என்பதைத்தான் இவையெல்லாம் திரும்பத் திரும்ப நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

நான் சொல்ல வருவது இதுதான். டெங்கு ஒரு வைரஸ் தாக்குதல் என்றால், வைரஸ்களைக் கட்டுப்படுத்த அலோபதியிலும் முழுமையான மருந்துகள் இல்லாத நேரத்தில், மாற்று மருத்துவங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. வெறும் நிலவேம்பை மட்டுமே நம்பி நோய் குணமாகிவிடும் என இருக்கவும் முடியாது. இரண்டையுமே ஒரு சேர கவனத்தில்கொள்ளும் ஒரு வகையான `ஒன்றிணைந்த’, `முழுமையான’ (Integrated and Holistic) அணுகல்முறையே இன்றைய தேவை. இன்னொரு பக்கம், டெங்கு முதலான நோய்கள் பரவுவதற்கு அடிப்படையாக உள்ள தொற்றுக் காரணிகளை நீக்குவதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்