வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (23/10/2017)

கடைசி தொடர்பு:15:32 (23/10/2017)

தினம் 600 - 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை? #VikatanExculsive

மிழகத்தில் டெங்கு பீதி குறைந்தபாடில்லை. டெங்கு மரணங்களை, 'மர்ம மரணங்கள்' என்று பதிவுசெய்து, பழியிலிருந்து தப்பிக்கத் துடிக்கிற அரசு, சுகாதாரத்துறையில் இத்தனை ஆண்டுக்காலத்தில் அடிப்படையான காலிப் பணியிடங்களைக்கூட நிரப்பாமல் எந்த அளவுக்கு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை டெங்குக் காய்ச்சல் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. 

மருத்துவத்துறையின் அடிப்படை என்று கருதப்படும் ஆய்வகங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. குறிப்பாக, நோயின் தன்மையைக் கண்டறியும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை. 

டெங்கு

டெங்கு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியெடுத்துவரும் நிலையில், ஆய்வகப் பரிசோதனை மூலம்தான் நோயின் தன்மை உறுதி செய்யப்படும். டெங்கு காய்ச்சலை உரிய நேரத்தில் கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சையின் தன்மையைத் தீர்மானிக்க முடியும். ஆனால், போதிய லேப் டெக்னீஷியன்கள் இல்லாததால் நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவே காலதாமதமாகிறது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். 

காய்ச்சலோடு வரும் நோயாளிகளை மருத்துவர்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். சி.பி.சி (Complete Blood Count), வைடால் (Widal) சுகர், கிரியேட்டினைன் (Creatinine), யூரின் கம்ப்ளீட் போன்ற டெஸ்ட்கள் எடுக்கப்படும். இவைதான் டெங்குக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான அடிப்படைச் சோதனைகள். 

பரிசோதனை முடிவில் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் டெங்கு என்.எஸ்-1, ஐ.ஜி.ஜி, ஐ.ஜி.எம் போன்ற டெங்குவுக்கான உறுதிப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். என்.எஸ்-1 சோதனையில், 'பாசிட்டிவ்' என்று வந்தால், ஆரம்பநிலை டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படும். இவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படும்.

காய்ச்சலுக்கான மாத்திரைகள்

டெங்கு சற்று தீவிரத் தன்மையோடு இருப்பவர்களுக்கு ஐ.ஜி-ஜி, ஐ.ஜி-எம் சோதனைகளில் 'பாசிட்டிவ்' என்று வரும். அவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து, 24 மணி நேர சிகிச்சை வழங்கப்படும். தேவைக்குத் தகுந்தவாறு ரத்தம், குளூக்கோஸ் ஏற்றப்படும்.

இப்படி அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தினமும் இரண்டு முறை, ரத்த வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுகள், ரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைச் சரிபார்க்க வேண்டும். அதற்கேற்றவாறே சிகிச்சை தீர்மானிக்கப்படும். ஆக, டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் லேப் டெக்னீஷியன்களின் பணி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. அதனால், டெங்கு சோதனைப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும், உரிய காலத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழப்புகள் அதிகமாகின்றன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவச் சுகாதாரப் பணிகள் நிறுவனத்தின்கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் தாலுகா மருத்துவமனைகள் இயங்குகின்றன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின்கீழ் 1,442 ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. மெடிக்கல் ரெக்ரூட்மென்ட் போர்டு மூலம் இந்த மருத்துவமனைகளுக்கு லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்படுகிறார்கள். 

டெங்கு காய்ச்சல்

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிமுறைப்படி, 10 படுக்கைகளுக்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், ஒரு துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். இது 1956-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறை. பல மடங்கு மக்கள்தொகை உயர்ந்துவிட்ட, புதிது புதிதாக நோய்கள் உருவாகிவிட்ட இந்தக் காலத்திலும் அப்போது நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்கள்தான் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களிலும் இப்போது ஏகப்பட்ட இடங்கள் காலி.

“தமிழகத்தில் 1,776 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பவற்றைக் கழித்தால் 1,442 ஆரம்ப சுகாதார மையங்களில் வெறும் 550 நிரந்தர லேப் டெக்னீஷியன்கள்தான் பணியில் இருக்கிறார்கள். இதிலும் 200 பேர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். 900-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஒரு லேப் டெக்னீஷியன் மூன்று அல்லது நான்கு மையங்களைச் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. லேப் டெக்னீஷியன்களின் வேலை என்பது நேரடியாக நோயுடன் தொடர்புடையது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி 30 நோயாளிகளுக்கு ஒரு லேப் டெக்னீஷியன் என்பதே சரியானது. அப்படிச் செய்தால்தான் சரியான சோதனை முடிவுகளைத் தரமுடியும். இப்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணிச்சுமையால் திணறுகிறார்கள். அதனால் சோதனை முடிவுகளில் தரக்குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி செய்தபோது, சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டார்கள். அதனால், பணிகள் முடங்கிவிட்டன. இப்போது டெங்கு தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு கொள்கை முடிவெடுத்து, போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்...’’ என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் தலைவர் கார்த்திகேய வெங்கடேசன்.

அரசு தாலுகா மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, 3,500 லேப் டெக்னீஷியன் பணியிடங்களில் வெறும் 600 பேர்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘அம்மா திட்டம்’, ‘மலேரியா ஒழிப்புத் திட்டம்’, ‘கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புத் திட்டம்’, ‘தொற்றா நோய் சிகிச்சைத் தி்ட்டம்’... எனப் புதிது புதிதாகச் சுகாதாரத் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையும் தற்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்களே பார்க்க வேண்டியிருக்கிறது. ஐ.சி.டி.சி எனப்படும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தால் ஹெச்.ஐ.வி பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட லேப் டெக்னீஷியன்களை நம்பியே தற்போது ஆரம்ப சுகாதார மையங்களும் அரசு மருத்துவமனைகளும் இயங்குகின்றன.

பரிசோதனை

“எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தால், எய்ட்ஸ் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டவர்கள் நாங்கள். 'ஆள் இல்லை, ஆள் இல்லை' என்று சொல்லி, இப்போது அனைத்துச் சோதனைகளையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். மலேரியா, டெங்கு, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை என அனைத்தையும் நாங்களே செய்துவருகிறோம். ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேருக்கு டெஸ்ட் எடுக்கிறோம். குறைந்தது 600 முதல் 700 டெஸ்ட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை முடித்துவிட்டு, பதிவேடுகள் வேறு தயாரிக்க வேண்டும். மிகப்பெரும் மன அழுத்தத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நாங்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிறோம். என்றேனும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது எங்களுக்கு முன்னுரிமை தருவார்கள் என்ற எண்ணத்தில்தான் எல்லாப் பணிகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், இதுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. ஒவ்வோராண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போதே, `சங்கம் வைக்கக் கூடாது, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பக் கூடாது என்று சொல்லித்தான் கையெழுத்தைப் பெறுகிறார்கள். அதனால் எங்கள் அவஸ்தையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்" என்று புலம்புகிறார் பெயர் வெளியிட விரும்பாத, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க லேப் டெக்னீஷியன் ஒருவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்