“எட்டுப் பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருத்தரே செய்றோம்” - குமுறும் அரசு மருத்துவமனை நர்ஸ்கள்! #VikatanExclusive | Stresses and Struggles of Nursing work

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (24/10/2017)

கடைசி தொடர்பு:12:44 (04/11/2017)

“எட்டுப் பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருத்தரே செய்றோம்” - குமுறும் அரசு மருத்துவமனை நர்ஸ்கள்! #VikatanExclusive

த்மார்த்தமாகச் செய்கிற புனிதமான வேலை என்றால், அது `செவிலியர்’ எனப்படும் நர்ஸ் பணிதான். இவர்கள் பார்ப்பதை வேலை என்று சொல்வதுகூடத் தவறு... சேவை என்றே சொல்ல வேண்டும். கடுமையான பணிச்சூழல், ஆனாலும் அக்கறையுடன்கூடிய கவனிப்பை இவர்கள் நோயாளிகளுக்குத் தந்தே ஆக வேண்டும். டெங்கு, பன்றிக் காய்ச்சல், மலேரியா எனப் பெரும் நோய்கள் படையெடுக்கையில், களத்தில் நின்று பம்பரமாகப் பணியாற்றுபவர்கள் இவர்கள்தாம். மருத்துவர்களைவிடவும் ஒரு நோயாளியுடன் நெருக்கமாக இருந்து, சிகிச்சையளித்து கவனித்துக்கொள்வது நர்ஸிங் சேவையில் உள்ளவர்களே. நெருங்கவே பயப்படும் காசநோய் போன்ற தொற்று நோய்க்கு ஆட்பட்டவரானாலும், நர்ஸிங் பணி நிற்பதில்லை. ஆனாலும், நர்ஸ் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமோ, மரியாதையோ இந்தச் சமூகத்தில் கிடைக்கிறதா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசுத்தரப்பிலோ இவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை என்பதே யதார்த்தம். இவர்களின் இன்றைய நிலை பரிதாபத்துக்குரியது என்றால், அது மிகையில்லை. 

நர்ஸ் பணி

24 மணி நேரமும் வேலை நேரம் என எப்போதும் மூடாத கதவுகளாக இயங்கிவருவதில் மருத்துவமனைகளுக்கே முதலிடம். ஆனால், மருத்துவமனையில் நர்ஸ்களுக்கு நேரும் அவலம், நாம் எல்லோருமே கவனிக்கவேண்டியது; வருத்தப்படவேண்டியது. 

சமீபத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் இரவுப் பணியிலிருந்தார். அவரது மேற்பார்வையில் இருந்த ஒரு நோயாளி இறந்துவிட்டார். அதனால், வேலையில் கவனக்குறைவுடன் இருந்ததாக அந்த நர்ஸ்மீது நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுத்தன. உலக சுகாதார நிறுவனம், இந்தியன் நர்ஸிங் கவுன்சில் விதிமுறைகளின்படி பார்த்தால், `ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ்’ என்பதுதான் ஆரோக்கியத்தைக் காக்கும் நியதி. ஆனால், ஒரு நர்ஸின் பணி நேரம் 8 மணி என நிர்ணயிக்கப்பட்டிருக்கையில், அங்குள்ள நெருக்கடியின் காரணமாக 12 மணி நேரம் வரை பணி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள். இப்போதுள்ள டெங்குக் காய்ச்சல் பரவலால் 24 முதல் 32 மணி நேரம் வரை சிலர் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரையில் எட்டு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் என்ற விகிதத்தில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், உடன் பணியிலிருப்பவர் நீண்ட நாள்கள் விடுப்பு எடுத்தால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அந்தப் பணியிடத்துக்கு நியமிக்காது நிர்வாகம். மீதியிருப்பவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையே வந்துசேரும் நிலை. இப்படியாக, எட்டுப் பேருக்கான வேலை ஒருவர்மீது திணிக்கப்படுகிறது. 

காலி பணியிடங்கள்... நிரப்ப மறுக்கும் அரசு!

2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக அரசு மருத்துவமனையில் தற்காலிக நர்ஸ் பணிக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த முறையில் வயது வரம்பு இருந்தது. பெரும்பாலும், திருமணம் ஆகாத 20 வயதைக் கடந்த பெண்களே தற்காலிகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், தற்போது எம்ஆர்பி (MEDICAL SERVICES RECRUITMENT BOARD(MRB)) வழியாகத் தேர்வு எழுதி நர்ஸ் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இந்தத் தேர்வு முறையில் வயது வரம்பு இல்லை. ஆகையால், தேர்வில் 40 வயதானவரும் பங்குகொள்ளலாம். பழைய மற்றும் புதிய முறையிலும் பணிக்கு வரும் நர்ஸ்கள் சொந்த ஊரைத்தாண்டி கிட்டத்தட்ட 300 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பணிபுரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்தச் சூழல் திருமணம் ஆகாதவர்களுக்குச் சரியானதாகவோ அல்லது பொருளாதாரநிலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவோ இருக்கலாம். ஆனால், திருமணமானவர்களின் நிலை கவலைக்குரியது. பொருளாதாரத்தில் தொடங்கி, வீட்டைக் கவனித்துக்கொள்ளும் சூழல் வரை அனைத்தும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இவர்களுக்கு இருக்கும். வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் சூழலில் உள்ளவர்களுக்குத் தங்குமிடம், உணவு, போக்குவரத்து, பண்டிகைக்காலச் செலவு, குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் தினசரிச் செலவு எனப் பொருளாதாரம் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். தினசரி செலவினத்துக்கான பணம் இல்லாமல் பற்களைக் கடித்துக்கொண்டு நாள்களை நகர்த்தும் நர்ஸ்களே இங்கு அதிகம். 

நர்ஸ் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குழந்தை நல மருத்துவமனைகள் என அனைத்தையும் சேர்த்து 2,000-க்கும் மேற்பட்ட நர்ஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. `ஐசியூ-வில் உள்ள ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸும், மூன்று குழந்தைகளுக்கு ஒரு நர்ஸும், தீக்காயம் அடைந்த மூன்று நோயாளிகளுக்கு ஒரு நர்ஸும் தேவை’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். 

உதாரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்குத் தோராயமாக, 10,000 புறநோயாளிகள் வருகின்றனர். ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் உள் நோயாளிகள் இருக்கின்றனர். இப்படியான சூழலுக்கு 1,500 செவிலியர்கள் என்பது தேவைக்குச் சற்றுக் குறைவான அளவு. ஆனால், அங்கு பணியிலிருக்கும் நர்ஸ்களின் எண்ணிக்கை வெறும் 900. ஊசி மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தற்காலிக நர்ஸ்கள் பணியிலமர்த்தப்பட்டிருந்தனர். தற்போது, அவர்களையும் வேலையிலிருந்து நிர்வாகம் நீக்கிவிட்டது. இப்படியான நர்ஸ் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோவை போன்ற பல ஊர்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் இதே நிலைதான்.

இந்திய மக்கள்தொகைக்கு 24 லட்சம் நர்ஸ்கள் தேவை; ஆனால், 12 லட்சம் நர்ஸ்கள்தான் பணியிலிருக்கின்றனர். மீதியுள்ள பற்றாக்குறையை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனா, இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள மருத்துவ விதிமுறைகளின்படி, ‘ஒரு நோயாளிக்கு மூன்று நர்ஸ்கள் தேவை’ என்ற அடிப்படையில் பணியிலமர்த்தப்படுகின்றனர். ஒரு நர்ஸின் வேலை நேரம் 8 மணி நேரம் எனக் கணக்கிடப்படும்போது, நாள் ஒன்றுக்கு மூன்று ஷிஃப்ட். அதாவது 24 மணி நேரத்துக்கு ஒரு நோயாளியைக் கண்காணிப்பில் வைத்திருக்க மூன்று நர்ஸ்கள் தேவைப்படுகிறார்கள். இது நோயாளியின் பாதுக்காப்புக்கும் அவர்கள் விரைவில் குணமடைவதற்கும் வழிவகுக்கும்.

செவிலியர் துறை

படிப்படியாகக் குறையும் நிதி!

நிதியைப் பொறுத்தவரை மருந்து, மாத்திரை என மருத்துவமனை சார்ந்தும், பணிபுரிபவர்களுக்கான நிதி என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், நோய்க்கான மருத்துகள் அரசு மருத்துவமனைகளில் சேமிப்பில் இல்லாமல் இருப்பதே பல பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் செயலுக்குக் காரணமாக இருக்கிறது. மருந்துப் பற்றாக்குறை, மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவமனை பற்றாக்குறை... எனத் தேவைகள் அதிகமான நிலையில், அவற்றுக்கான நிதிகள் மட்டும் குறைக்கப்படுவதால், அரசு மருத்துவமனையைச் சார்ந்திருக்கும் ஏழை மக்களின் நிலை எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. 

‘இப்படித் தற்காலிகப் பணியிலுள்ள நர்ஸ்களுக்கு மாத ஊதியத்தை அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கையின் எண்ணிக்கையின் அடிப்படியில் வழங்கலாம் அல்லது நர்ஸ்களின் மாத ஊதியம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்க வேண்டும்’ என்று மத்திய செவிலியர் குழு, மத்திய மற்றும் மாநிலச் சுகாதார அமைப்பு மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளடங்கிய குழு பரிந்துரைக்கிறது. மேலும், இந்தக் குழுவின் பரிந்துரை, அரசு நர்ஸுகளுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தைத் தற்காலிகப் பணியிலிருக்கும் நர்ஸுகளுக்கும் வழங்க வேண்டும்’ என்கிறது. ஆனால், தற்காலிகப் பணியிலிருக்கும் நர்ஸ்களின் மாத ஊதியம் ரூ. 7,700 மட்டுமே. இந்தியாவிலேயே மருத்துவ நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் குஜராத். விரைவில் தமிழகமும் முதலிடத்தைப் பங்குபோட்டுக்கொள்ள குஜராத்துடன் போட்டிக்கு நிற்கும். 

ரவீந்திரநாத்எம்ஆர்பி செவிலியர் சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

“எம்ஆர்பி தேர்வு மூலமாக அரசு மருத்துவமனையில் தற்காலிக நர்ஸ் பணியிலமர்த்தப்பட்ட 11,000 பேருக்கு ஊதிய உயர்வையும் நிரந்தரப் பணியையும் ஏற்படுத்தித் தர அரசு ஆணையிட வேண்டும். இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் என்ற ஒன்றை உருவாக்கிய பெருமை ஜெயலலிதா அவர்களுக்கே உரியது. ஆனால், எம்ஆர்ஐ அடிப்படையில் கடந்த 2015-ம் வருடம் முறையாகத் தேர்வு நடத்தப்பட்டு, அரசு விதிகளைப் பின்பற்றி, மதிப்பெண் அடிப்படையில் 7,243 நர்ஸ்கள் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக நர்ஸ் பணிக்குப் பணியிலமர்த்தப்பட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றவும், மாத ஊதியத்தை அதிகரிக்கவும் வேண்டும். இதற்குச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. மாறாகச் சட்டமும் இவர்களைப் பணியில் நிரந்தரம் செய்யவே விரும்புகிறது. இந்தக் கோரிக்கையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் வரும் நவம்பர் 1 முதல் 15-ம் வரை கறுப்புப் பட்டை அணிந்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவோம். நவம்பர் 15-ம் தேதிக்கு மேல் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அறவழியில் எங்களது போராட்டம் நடைபெறும்’’ என்கிறார் ரவீந்திரநாத் வேதனையுடன்.

அரசு மணி‘வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நர்ஸ்கள்...’ என்று கேள்வியை முழுவதுமாகக் கேட்பதற்குள்ளாகவே ஆவேசத்துடனும் பேச ஆரம்பித்தார் எம்ஆர்பி செவிலியர் சங்கத்தின் துணைத் தலைவர் அரசு மணி.

“இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு, மென்பொருள் பணியாளர்களுக்கு அடுத்ததாக நர்ஸ்களே அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். இதற்குக் காரணம், இந்தியாவில் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வருவது. இந்தியாவில் ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் பணத்தை ஒரே மாதத்தில் வெளிநாடுகளில் சம்பாதிக்க முடியும் என்பதே இதற்கான மற்றொரு காரணம். இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது நம் நாட்டில் உள்ள நோயாளிகளே. தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் நிதி ஒதுக்கியுள்ளனரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். மேலும், நர்ஸ்களின் பணியிடப் பாதுகாப்பு, நலன், அவர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா போன்றவற்றைக் கண்காணிக்க தொழிலாளர் நல வாரியத்தின் சார்பாக ஓர் அமைப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எட்டு சதவிகிதம் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் இருந்தன. ஆனால், இந்த வருடப் புள்ளிவிவரத்தின்படி தனியார் மருத்துவமனையின் வளர்ச்சி 77 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்ஸ்களுக்கும் தனியாக அமைப்பை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்று கோரிக்கைவைத்தார் அரசுமணி. 

நர்ஸ்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகள் குறித்து நர்ஸ் ராதாமணியிடம் பேசினோம். ராதாமணி

“ஆண்களைவிட நர்ஸிங் பணியில் அதிகமாக இருப்பது பெண்களே. நாங்கள் பணிபுரியும் இடங்களில் நோயாளிகள், அவர்களைப் பார்க்க வருபவர்கள், மருத்துவர்கள் என ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஒரு வார்டுக்குள் சென்றால் கிட்டத்தட்ட 80 ஆண்களுக்கு நடுவில் தனியாக நின்று வேலை செய்யவேண்டிய நிலை இருக்கும். அந்தச் சமயங்களில் மாதவிடாய் ஏற்பட்டதுகூட அறியாமல் வேலை செய்துகொண்டிருப்போம். யாரேனும் ஆடையைப் பார்த்துச் சொல்வார்கள். அப்போது ஏற்படும் அசௌகரியத்துக்கும் சங்கடத்துக்கும் அளவே இல்லை. நர்ஸுக்கான வெண்ணிற ஆடையில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டால், அதைச் சரிசெய்து மீண்டும் பழையநிலைக்கு மனதைக் கொண்டுவருவது பெரும் போராட்டமாக இருக்கும். கைவசம் நாப்கின் இல்லாத சமயங்களில் எஞ்சியிருக்கும் காட்டன், கட்டுப்போட பயன்படுத்தப்படும் வெள்ளைத் துணிகளையே பயன்படுத்தி பணியை மீண்டும் தொடர்வோம். தவிர, பணிபுரியும் இடத்துக்கு அருகில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளுக்குச் சென்று பணிபுரியும் சூழலுக்கும் தள்ளப்படுவோம். `மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்’ என்று சில தனியார் நிறுவனங்களில் விதிமுறையே கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது மருத்துவ விடுமுறைகூட அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணிபுரியும் செவிலியர்களுக்குக் கிடையாது. மேலும், பணியிடங்களில் பாதுப்புத்தன்மை இல்லாமல் இருப்பது இன்னும் சிரமத்துக்குள் எங்களை இட்டுச்செல்லும்’’ என்கிறார் ராதாமணி. 

`கால்காசா இருந்தாலும் கவர்மென்டு வேலை’, `அரைக்காசா இருந்தாலும் அரசாங்க உத்யோகம்’... என அரசாங்க வேலையைச் சிலாகிக்கும் வரிகளை அதிகமாகவே கேட்டிருப்போம். அரசாங்க வேலை... கடைசி வரை சம்பளம், பென்ஷன், நிரந்தரமான வாழ்வு, நிம்மதியான வேலை என்று பல மாயப் பிம்பங்கள் அரசு உத்யோகத்தின் மீது அழிக்க முடியாதபடி படிந்துகிடக்கின்றன. இந்தச் சிலாகிப்புகள் ஒருபுறமிருக்க... மறுபுறம், அரசுப் பணியாளர்கள் ஒவ்வோர் அமைப்பாகச் சேர்ந்து சரியாக ஊதியம் வழங்கவில்லை, வேலைச் சுரண்டலுக்கு உள்ளாகிறோம், சரியான உபகரணங்கள் இல்லை, போதுமான அளவு பணியாளர்கள் இல்லை, விடுப்பு இல்லை... எனப் பல கோரிக்கைகளோடு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். என்னதான் அரசு அதிகாரிகளை இந்தச் சமூகம் பழித்தாலும், அவர்களின் கோரிக்கைகளையும் வார்த்தைகளையும் சற்று காது கொடுத்துக் கேட்டால்தான் அவர்களின் அவலமும் வெளிச்சத்துக்கு வரும்!


டிரெண்டிங் @ விகடன்