வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (26/10/2017)

கடைசி தொடர்பு:11:56 (26/10/2017)

‘தினம் 15 ஆயிரம் குழந்தைகள்!’ காப்பாற்றாமல் பறி கொடுக்கிறோம்! #WHOReport #VikatanExclusive

செல்விக்கு என்ன வயசாச்சு... எட்டு இருக்குமா, காளையனுக்குப் பத்து வயசு இருக்குமா, என்ன தப்பு பண்ணுச்சுங்க இதுங்க. மருத்துவ வசதியில்லாத இந்த ஊர்ல பிறந்ததுதான் அதுங்களோட தப்பு..." 

மெர்சல் படத்தில் நித்யாமேனன் பேசும் வசனம் இது...

தீ விபத்தில் சிக்கி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்த குழந்தைகளைப் பார்த்து நித்தியாமேனன் சொல்லும் இந்த வார்த்தைகளை, அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. ஒரு குழந்தை சரியான மருத்துவ வசதியில்லாமல் இறக்கிறது என்றால், அது அந்தக் குழந்தையின் தவறல்ல. இந்தச் சமூகத்திற்கான, நம்மை ஆளும் அரசுக்கான மிகப்பெரும் அவமானம். அதை உணர்த்தும் வசனம்தான் அது.  

child death

நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்வு பெறும் உரிமை உள்ளவர்கள்; அதை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. ஆனால் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அரசுகள் இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு அலட்சியமாகவும் மோசமாகவும் நடந்து கொள்கின்றன என்பதற்குச் சாட்சியமாக இருக்கின்றன.  

உலக அளவில், எளிதில் தடுக்கக்கூடிய நிமோனியா, ஊட்டச்சத்துக் குறைபாடு,  வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால், தினமும் ஐந்து வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும்,  இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் இந்த இறப்புகளில் பாதி நிகழ்கிறது என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.  

உலக சுகாதார நிறுவனம் (World Health Organasation), ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் (UNICEF), உலக வங்கி (World Bank of Group) ஆகிய அமைப்புகள் இணைந்து 2016 ல் ஓர் ஆய்வை முன்னெடுத்தன. 

2016-ல் மட்டும் உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 56 லட்சம் குழந்தைகள், எளிதில் தடுக்கப்படக்கூடிய அல்லது குணப்படுத்தக்கூடிய நோய்களால் இறந்து போனதாக அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 1 கோடியே  26 லட்சமாக இருந்தது பெரும் அவலம். மருத்துவமும், அறிவியலும் பெருமளவு வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் தினமும் 15 ஆயிரம் குழந்தைகளைக் குணப்படுத்தவல்ல மிகச்சாதாரண நோய்களுக்கு வாரிக்கொடுப்பது என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம். இதேநிலை தொடர்ந்தால்,  2030-ம் ஆண்டுக்குள், குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 6 கோடியாக உயரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை. 

குழந்தை

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகள் இருந்தும்,  உரிய பராமரிப்பு, போதுமான மருத்துவர்கள் இல்லாததே, குழந்தைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி, சேலம் அரசு மருத்துமனைகளில் நடந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மையாக்குகின்றன. 

சில மாதங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததும் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமே காரணமல்ல, மருந்துகள் பற்றாக்குறையும்தான் என்றும் அப்போது கூறப்பட்டது.

இந்தியாவில் இந்த அவலம் எப்போது தீரும்..? எப்பாவமும் செய்யாத அப்பாவிக் குழந்தைகளுக்கான வாழ்வுரிமைகள் எப்போது உறுதி செய்யப்படும்? 

“இந்தியாவில் மக்கள்தொகை மற்றும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும் குழந்தை இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.

 2016-ம் ஆண்டுக்கான, ஒரு வயதுக்குள்ளான  குழந்தைகளின் இறப்பு விகித (Infant mortality)  புள்ளிவிவர அறிக்கை இந்தியாவின் மாதிரி பதிவு அமைப்பு (Sample Registration System) கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. அதில் 1,000 குழந்தைகளுக்கு 34 குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் இறந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு சதவிகிதம் 17 என்ற நிலையில்தான் உள்ளது. குழந்தைகள் இறப்பிற்கான காரணங்களை,  தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் நோய் தொற்றுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறைப்பிரசவம் போன்ற தவிர்க்ககூடிய காரணங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். ஒட்டும்மொத்தமாக குழந்தை இறப்பே இல்லை என்ற நிலையை எட்ட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் தடுக்கக் கூடிய காரணங்களால் உயிரிழக்கக் கூடிய காரணிகள் அனைத்தையும் குறைக்க வேண்டும். 

பச்சிளம் குழந்தை

மருத்துவத்தைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முன்னோடியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில், ஒரு பெண் கருவுற்ற உடனே அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தனது பெயரைப் பதிவு செய்து கொண்டால் போதும். உரிய காலங்களில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்குவதிலிருந்து, தடுப்பூசி போடுவது, ஹீமோகுளோபின், டாக்டர் ஜெகதீசன்சர்க்கரை அளவு, சிறுநீர் பரிசோதனைகளைத் தேவையான காலங்களில் செய்வது என முழுமையாக அப்பெண்ணுக்கான வசதிகள் செய்துதரப்படுகிறது. ஏனெனில், நாள் ஒன்றுக்குப் பிறந்ததும் இறக்கும் (New Born) குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. இவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே, குழந்தை இறப்புகளை ஓரளவுக்குக் குறைக்க முடியும். இதற்கு கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், அரசு வழங்கக் கூடிய வசதிகள் பற்றியும் மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அரசும் இதுபற்றி மேலும் அதிக விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். 

சமீபத்தில் இந்திய அரசு மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியாவில் 50.3 சதவிகித கர்ப்பிணி பெண்கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அதனால், வளரிளம் பருவம் முதலே பெண் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவுகளை உறுதி செய்யவேண்டும். 

முறையான பேறுகால பின் கவனிப்பு, பிறந்தவுடன் மற்றும் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தருவது, தடுப்பூசி போடுவது மற்றும் நோய் தொற்றிலிருந்து காத்துகொள்ளுதல் அதாவது, கழிவறையைப் பயன்படுத்துதல், சோப்பினால் கைகழுவுதல் மற்றும் சுகாதாரமான குடிநீர் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் மூலம் இந்த நிலையை மாற்றமுடியும்..." என்கிறார் யுனிசெப் சுகாதார நிபுணர் டாக்டர் ஜெகதீசன்.

தாய் சேய்

இதுகுறித்து சமூகச் செயற்பாட்டாளரும், குழந்தை உரிமை ஆர்வலருமான தேவநேயனிடம் பேசினோம். 

"தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில் சில ஆசிய நாடுகளில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கைதேவநேயன் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வது போன்றவற்றால் பெண் குழந்தைகளின் இறப்பு தெற்காசிய மற்றும் மேற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. 

18 வயது நிறைவடைந்த பின்னரே ஒரு பெண்ணின் உடல் தாய்மை அடைய தகுதி பெறுகிறது. அதன் பிறகுதான் பெண்களுக்குத் திருமணம் செய்யவேண்டும். குறைந்த வயதில் திருமணம் அல்லது போதிய ஊட்டச்சத்தில்லாமல் இருக்கும்போது கர்ப்பம் தரித்தல் போன்றவற்றால் குழந்தை குறைப்பிரசவத்திலோ குறைந்த எடையுடனோ பிறக்க வாய்ப்புள்ளது. மேலும், பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவும், தகுந்த மருத்துவக் கண்காணிப்பும் அவசியம்.  

இவற்றையெல்லாம் அனைவரும் பெறுவதை அரசு உறுதி செய்யவேண்டும். அதற்குரிய நிதியை, மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். ராணுவம், பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் பெரும் நிதியை ஒதுக்கும் அரசுகள் மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடிய மருத்துவத்துக்கும், உடல் நலம் காக்கக்கூடிய விஷயங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்" என்கிறார் தேவநேயன்.

நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்வு பெறும் உரிமை படைத்தவர்கள் என்பதையும் எப்பாவமும் அறியாத பச்சிளம் சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களைத் தடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பையும் மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்