“ஜம்மு சம்பவம்... என் ஈகோவையும் கர்வத்தையும் விரட்டுச்சு..!” - ‘டெல்லி’ கணேஷின் ரகசியம் | Secrets of Delhi Ganesh's stress management

வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (26/10/2017)

கடைசி தொடர்பு:09:18 (26/10/2017)

“ஜம்மு சம்பவம்... என் ஈகோவையும் கர்வத்தையும் விரட்டுச்சு..!” - ‘டெல்லி’ கணேஷின் ரகசியம்

'பட்டினப் பிரவேசம்' படத்தில்தான் டெல்லி கணேஷின் சினிமா பிரவேசம் நடந்தது. பசி, சிந்து பைரவி, அவ்வை சண்முகி என அவரின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வந்த படங்கள் ஏராளம். திரையில் மட்டுமல்ல... நேரிலும் கூட அவர் இயல்பான மனிதர்தான். எந்தச் சூழலிலும் பதற்றமே இல்லாமல் 'கூல்' மனிதராக இருக்கிறார் டெல்லி கணேஷ். "எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாகிறது" என்று கேட்டோம்.

டெல்லி கணேஷ்

கலகலவென சிரித்தபடி, தன் 'ஸ்ட்ரெஸ் ரிலீவ்' ரகசியத்தைச் சொல்லத் தொடங்குகிறார் அவர். 

“முயற்சித் திருவினையாக்கும்'னு சொல்லுவாங்க. முயற்சிகள் எல்லா நேரமும் பலிக்கும்னு சொல்ல முடியாது. சில சமயம் தோல்வியிலயும் முடியும். அப்படி நாம சரியா முயற்சி பண்ணி தோற்றுப் போகும்போது நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுது. அதேமாதிரி உதவிகேட்டு சில பேர்க்கிட்ட நம்பிக்கையோட போவோம். ஆனா,  அவங்க பெருசா கண்டுக்காம ரொம்ப ஈஸியா நம்மைக் கடந்து போயிடுவாங்க. உதவின்னா என்ன? இந்த உலகத்துல பெரும்பாலானவர்களுக்குத் தேவைப்படுற உதவி பண உதவிதான். நாம ரொம்ப எதிர்ப்பார்த்தவங்க உதவ மாட்டாங்க. எதிர்பார்க்காதவங்க நமக்கு உதவி செய்வாங்க.

வாழ்க்கையில, தொழில், வியாபாரம், உடல் நலம் இதை வெச்சுதான் நமக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும். அப்படி ஏற்படும்போது யாரையும் நம்பி இருக்காம பாதுகாப்போட இருக்கணும்னா இன்ஷூரன்ஸ் ரொம்ப முக்கியம். அதனாலதான் 'வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும்'னு அதைச் சொல்றாங்க.

டெல்லி கணேஷ்

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியதாகிப் போச்சு. யாருக்கிட்ட, என்ன உதவி கேட்கிறது, எப்படிக் கேட்கிறதுனு தெரியாம இருந்தேன். வீட்டுல இருந்தவங்களுக்கும் ரொம்ப பதற்றமா இருந்துச்சு.  

அப்போ, ஆபத்பாந்தவான் மாதிரி என் நண்பர் ஆடிட்டர் சீனிவாசன் இரண்டரை லட்ச ரூபாய் பணத்தோட வந்துட்டார். அப்படியே பணப்பையைக் கொடுத்துட்டு,'கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லவிதமா முடியும்'னார். என் கண்களில் கண்ணீர். இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஆடிட்டர் கிடையாது. அவர் கிட்ட பணம் தேவைப்படுதுனு கூட நாங்க கேட்கலை. என் நண்பர்... அவ்வளவுதான். விஷயம் கேள்விபட்டதும் 'டான்'னு பணத்தோட வந்துட்டார். அப்போ நான், 'சார், இன்ஷூரன்ஸ் இருக்கு. அதுல கிளைம் பண்ணிக்கிறோம்'னு  சொன்னேன். 'இப்போ வெச்சிக்கங்க சார். அது கிடைச்சதும் திருப்பிக்கொடுங்க'ன்னு சொன்னார்.

லைப்ஃல ஸ்ட்ரெஸ் ஏற்படாம இருக்கணும்னா பொருளாதார ரீதியா யாரையும் சார்ந்திருக்காம இண்டிபென்டட்டா பணம் சம்பாதிச்சு வெச்சிருக்கணும். இல்ல, நல்ல நண்பர்களைச் சம்பாதிச்சு வெச்சிருக்கணும். 

தகுதிக்கு மீறின வாழ்க்கையை வாழ நினைக்கும்போது, அதைக் குறுக்கு வழியில சீக்கிரமா அடைய நினைக்கும்போது, அதை அடைய முடியாமல் போனாலோ, அல்லது அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கு அவஸ்தைப்பட்டாலோ  ஸ்ட்ரெஸ் உண்டாயிடும். அப்போ நான், மாருதி ஜென் கார் வெச்சிருந்தேன். அதை வித்துட்டு பெருசா 25 லட்சத்துல ஒரு கார் வாங்கலாம்னு நினைச்சேன். இந்தத் தகவலை நான் ஆடிட்டர் சீனிவாசன்கிட்ட சொன்னேன். அவர், ஒரு நண்பர்கிட்ட அனுப்பி வெச்சார். 

டெல்லி கணேஷ்

அந்த நண்பர் ரொம்ப சந்தோஷமா என்னை வரவேற்று உபசரிச்சார். நான் வந்த விஷயத்தைச் சொன்னேன். 'நான் உங்கக்கிட்ட மூணு கேள்வி கேட்பேன் சார். அதுக்கு நீங்க சொல்ற பதிலை வெச்சு நான் உங்களுக்கு கார் வாங்கித் தர்றேன்'னு சொன்னார்.  

'இப்போ நீங்க என்ன கார் வெச்சிருக்கீங்க?'

'மாருதி ஜென்'

 'டிரைவர் வெச்சிருக்கீங்களா? செல்ஃப் டிரைவிங்கா?'

'செல்ஃப் டிரைவிங் சார்'.

'குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா போவீங்களா?'

'சார், நான் ஷூட்டிங்காக அடிக்கடி வெளியூர் போயிடுவேன். எப்போவாச்சும் அவங்களோட டூர் போவேன்'.

'சார், அப்போ உங்களுக்குப் புது கார் தேவையில்ல. நீங்க வெச்சிருக்கிறது சின்ன கார். சென்னை சிட்டியைப் பொறுத்தவரை சின்னச்சின்ன சந்துகளுக்குக் கூட போயிட்டு வந்துடலாம். செஃல்ப் டிரைவிங். பிரச்னையே இல்ல. அதனால உங்களுக்குப் புதுகார் வேணாம்ன்னு சொன்னார். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. ஆனாலும் அவரிடம், 'சார், நான் சினிமாவுல இருக்கேன்... பெரிய கார்ல போனாதான் மதிப்பா இருக்கும்'னேன். 

'நீங்க கார்ல போனாலும் சைக்கிள்ல போனாலும் டெல்லி கணேஷ்தான். சைக்கிள்ல போனா 'அட... டெல்லி கணேஷ் சைக்கிள் போறார்னு புகழத்தான் செய்வாங்க'னு சொல்லி அனுப்பி வைத்தார். 

டெல்லி கணேஷ்

அவர் ஒரு நல்ல மனிதர் என்பதால், இப்படி செய்தார். விலை உயர்ந்த காரை வாங்கிக் கொடுத்திருந்தால், அவருக்குக் கணிசமான தொகை கமிஷனா கிடைச்சிருக்கும். ஆனால், அவர் அப்படிச் செய்யலை. எனக்கு எது தேவை என்பதை உணர்த்தி அனுப்பினார். 

ஆசைகள் அதிகமாக ஆக பிரச்னைகளும் அதிகமாகும். இதைத்தான் நம் மூதாதையர்கள் பழமொழிகளாக, வாழ்க்கையின் அனுபவப் பாடங்களாகச் சொல்லி வெச்சாங்க. பழமொழிகளை அவ்வளவு ஈஸியா விடக் கூடாது. ஒவ்வொரு பழமொழியிலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கை இருக்கும். 

' அகலக்கால் வைக்காதே',  

'அம்பலத்தில் ஏறினால்தான் தன் பலம்தெரியும்', 

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து'

'வருவது தானே வரும், வருவதுதானே வரும்...'- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்..."

உற்சாகமாகப் பேசுகிறார் டெல்லி கணேஷ். 

"ஈகோ... கர்வம்... இது ரெண்டும் நம்மை விட்டு விலகிட்டா, எந்தக் கஷ்டமும் இல்லாம நிம்மதியா வாழலாம்" என்கிறார் டெல்லி கணேஷ். அதையும் தன் அனுபவத்தின் மூலமாகவே சொல்கிறார். 

"சினிமாவுக்கு வருவதற்கு முன்னால், இந்திய விமானப்படை அலுவலகத்துல வேலை பார்த்தேன். என்னுடைய பணிக்காலத்துல ஹட்ச் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், பங்களா தேஷ் போர்னு மூன்று போர்களைப் பார்த்தேன். பங்களா தேஷ் போர் நடக்கும்போது ஜம்முவுல இருந்தேன். பங்களாதேஷ் பிறக்கிறதுக்கு முன்னாடி, அதுக்குக் கிழக்கு பாகிஸ்தான்னு பேரு.

அங்கே ரொம்ப உக்கிரமா போர் நடந்ததால, 'திடீர்னு ஜம்முவையும் அட்டாக் பண்ண வாய்ப்பிருக்கு'ன்னு அலர்ட் பண்ணாங்க. ஏர் வைஸ் மார்ஷல் சுப்பையாங்கிறவர், எங்களுக்குப் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். 

‘இவ்வளவு நாளாக நாம சாப்பிட்டோம், எக்ஸர்சைஸ் செய்தோம். இப்போ நம்ம தாய்நாட்டுக்காக எந்தத் தியாகத்தையும் பண்ணத் தயாராக இருக்கவேண்டிய நிலையில இருக்கோம். கவனமா இருங்க'னு சொல்லிட்டுப்போனார். போர் தொடங்கி நடைபெற்ற 14 நாள்களும் திக்திக்னுதான் இருந்துச்சு. விமானப்படையினருக்குத் துப்பாக்கிகளைக் கொண்டு சென்று சேர்க்கும் வேலை எங்களுக்குத் தரப்பட்டிருந்துச்சு. அதேமாதிரி ஒரு நாள் ஃப்ளைட்டுல துப்பாக்கிகளை வெச்சிட்டு திரும்பும்போது திடீர்னு ஜம்மு நகர் முழுவதும் 'பவர் கட்' ஆயிடுச்சு. 

டெல்லி கணேஷ்

அன்றைக்கு இரவு, எங்களோட முகாமுக்குத் தட்டுத் தடுமாறி வந்ததை என்னால மறக்கவே முடியாது. அதுக்குப் பிறகு அங்கு சிறப்பா பணியாற்றிய ஒரு யூனிட்டை அப்படியே ராஜஸ்தான்ல இருக்கிற ஜோத்பூருக்கு மாற்றினாங்க. அதுல நானும் ஒரு ஆள். அங்க சில ஆண்டுகள் இருந்துட்டு தமிழகம் வந்துட்டேன். அதுக்கப்புறம் நடிகனானதெல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே. 

அந்த ஜம்மு சம்பவம் வாழ்க்கையோட நிலையாமையை அன்றைக்கே எனக்கு உணர்த்திடுச்சு. அன்றையோடு எனக்கிருந்த ஈகோ, கர்வம் எல்லாம் என்னை விட்டுப்போயிடுச்சு. இது இரண்டும் போனாலே வாழ்க்கையில எந்த விஷயத்துக்கும் பெருசா டென்ஷன் ஆக மாட்டோம். ஸ்ட்ரெஸ்லயும் அவதிப்படமாட்டோம். இது என்னுடைய சொந்த அனுபவம். எடுத்துகிறதும் வேணாங்கிறதும் அவங்க அவங்க இஷ்டம்'' என்கிறார், மனசுக்கு நெருக்கமான அதே புன்னகையோடு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close