வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (26/10/2017)

கடைசி தொடர்பு:19:09 (26/10/2017)

நோ ஃபீஸ்’ டாக்டர்! ராயபுரத்தில் ஒரு 'மெர்சல்' டாக்டர் #VikatanExclusive

``நைட் ரெண்டு மணி இருக்கும். என் மகன் பூவரசன் ஒடம்பு கொதியாக் கொதிக்குது. அடிக்கடி வாந்தி வேற எடுத்துட்டே இருந்தான். நானும் என் வீட்டுக்காரரும் பதறிப்போயி, டாக்டர் அப்பாகிட்ட கூட்டிட்டு வந்தோம். அந்த நட்ட நடு ராத்திரியிலயும் என் மகனுக்கு வைத்தியம் பார்த்தாரு. அவர் என் மகன் கையைத் தொட்டு பார்த்த கொஞ்ச நேரத்துலயே, ஜுரம் சரியாப்போச்சு. எத்தனை மணிக்கு வந்தாலும் சலிக்காமப் பார்ப்பாரு. ஃபீஸ்னு ஒண்ணைக் கேட்கவே மாட்டாரு. நாமளா ஏதாவது கொடுத்தா வாங்கிப்பாரு. கொஞ்சம் அதிகமா நாம கொடுத்துட்டதா தெரிஞ்சா, அவரே திருப்பிக் கொடுத்துடுவாரு. ரொம்ப நல்ல மனுசன். எங்களுக்கெல்லாம் சாமி மாதிரி, எங்க டாக்டர் அப்பா’’ என்று சிலாகித்துப் பேசுகிறார் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி.

டாக்டர் ஜெயச்சந்திரன்

யார் இந்த டாக்டர் அப்பா... எங்கே இருக்கிறார்?

சென்னை, வண்ணாரப்பேட்டை, வெங்கடாச்சலம் தெருவில் இருக்கிறது டாக்டர் ஜெயச்சந்திரனின் கிளினிக். ஜெயச்சந்திரனின் வீடும் அதுதான். கிளினிக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ``கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. ரொம்ப நேரமா நிக்குறாங்க முடிச்சுட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிட்டுப் பணியில் தீவிரமாகிறார். அங்கே சிகிச்சைக்காக வந்திருந்த ரூமானா யாஸ்மின் என்பவரிடம் பேசினோம்...

ருமானா யாஸ்மின்``நாங்க கொடுங்கையூர்ல இருந்து வர்றோம். என் பொண்ணு ஃபௌமிதாக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி மிக அதிகமான காய்ச்சல். ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போனோம். உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. எங்களுக்கு பயமாப் போயிடுச்சு. பதறிப்போயிட்டோம். உடனே என் பொண்ணை டாக்டர் அப்பாகிட்ட கூட்டிட்டு வந்துட்டோம். அப்பா பார்த்துட்டு, பிளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க, ரத்த தட்டணுக்கள் 80 ஆயிரம்தான் இருக்குனு சொல்லி, மாத்திரை எழுதிக் கொடுத்தாங்க. பப்பாளி ஜூஸும் கொடுத்தாங்க. அந்த மாத்திரையைத்தான் என் பொண்ணு தொடர்ந்து சாப்பிட்டுட்டு வந்தா. நேத்து மறுபடியும் பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுல ஒரு லட்சம் தட்டணுக்கள் அதிகமாயிருக்கு. அப்பா ரொம்ப கைராசியான டாக்டர். அப்பாகிட்ட வைத்தியம் பார்க்க, ஃபீஸே கிடையாது. நாமா ஏதாவது கொடுத்தா வாங்கிப்பாரு. வைத்தியமும் பார்த்துட்டு, இவர்கிட்டயே பணமும் வாங்கிட்டு தங்களோட சொந்த ஊருக்குப் போறவங்க நெறயா பேரு இருக்காங்க. இப்பக்கூட என் மகளுக்குக் காய்ச்சல், எனக்கு முதுகுவலி, என் அம்மாவுக்கு மூட்டுவலி... அத்தனைக்கும் இவர்கிட்ட வைத்தியம் பார்த்தோம். மாத்திரை, மருந்தெல்லாம் அவரே குடுத்துட்டாரு. அதையும் வாங்கிக்கிட்டு மொத்தம் ஐம்பது ரூபாதான் கொடுத்தோம். அதுவும் அவர் எதுவும் கேட்கலை... நாங்களா கொடுத்ததுதான்’’ என்று நெகிழ்ந்துபோய் டாக்டர் ஜெயச்சந்திரனின் பெருமையை விளக்குகிறார் ருமானா யாஸ்மின்.

காந்திமதி தன் மகனுடன்

கூட்டம் குறைந்ததும் நம்மை அழைத்தார் ஜெயச்சந்திரன். அவராகவே பேச ஆரம்பித்தார்... ``செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்துக்குப் பக்கத்துல இருக்குற கொடைப்பட்டினம்தான் என் சொந்த ஊரு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே படிக்காதவங்க. விவசாயம் பார்த்தாங்க. சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டம். ரொம்ப ஏழ்மையான நிலையில்தான் என் பள்ளிப் படிப்பை முடிச்சேன்.

முதல்ல லயலோ கல்லூரியில பி.எஸ்சிதான் படிச்சேன். முடிச்சதும் 1966-ம் வருஷம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ஸீட் கெடச்சது. என் தாய் மாமா உதவி செஞ்சதால, மருத்துவம் படிக்க முடிஞ்சுது. சேர்ந்த கொஞ்ச நாள்லயே எனக்குக் கனகவேல் நண்பனா கெடச்சான். அவங்க குடும்பம் ரொம்ப வசதியான குடும்பம். என்.வி.எஸ் பட்டணம் பொடி கம்பெனி அவங்களோடது. அவனோட நட்பு கெடச்சதுக்கு அப்புறம் அவங்க வீட்டுல இருக்குற நாலு புள்ளைகளோட, நான் அஞ்சாவது புள்ளையா ஆகிட்டேன்.

எனக்குச் சோறு போட்டதுல இருந்து மருத்துவம் படிக்கவெச்சது வரைக்கும் எல்லா உதவியையும் செஞ்சது அந்தக் குடும்பம்தான். படிப்பை முடிச்ச பின்னாடி கனகவேலுக்கும் எனக்கும் வண்ணாரப்பேட்டையில மகாராணி தியேட்டர் பக்கத்துல கிளினிக்வெச்சுக் கொடுத்ததுகூட அவங்கதான். அப்போ ரெண்டு ரூபாதான் ஃபீஸ் வாங்கினேன். அப்போ ஆரம்பிச்ச பழக்கம் இப்ப வரைக்கும் தொடருது. நண்பன் கனகவேல் இப்ப லண்டன்ல இருக்கான்.

சிகிச்ச செய்யும் மருத்துவர் ஜெயச்சந்திரன்

அந்த கிளினிக்லதான் 35 வருஷமா மருத்துவம் பார்த்தேன். இப்போ அஞ்சு வருஷமாத்தான் வீட்டுலயே பார்த்துட்டு இருக்கேன். நானா யார்கிட்டயும் ஃபீஸ் கேட்குறது இல்லை. அவங்க கொடுத்தா வாங்கிப்பேன். வைத்தியம் மட்டும் இல்லை. மாத்திரை, மருந்து, ட்ரிப்ஸ்னு எல்லாத்தையும் இலவசமாத்தான் பண்றேன். மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் பலபேரு இலவசமா மருந்துகள் கொடுப்பாங்க. பொதுமக்கள்ல சிலரும் உதவி செய்யுறாங்க. அதைவெச்சுத்தான் இதைச் செய்யுறேன்.

2012-ம் வருஷம், காசிமேடு ஜீவரத்னம் சாலையில ஒரு கிளினிக் வச்சுருந்தேன். அந்த நாள்கள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதவை. அந்தப் பகுதி முழுவதும் மீனவ மக்கள்தான். என் மேல ரொம்பப் பாசமா இருப்பாங்க. `அண்ணா’, `அப்பா’ன்னுதான் என்னைக் கூப்பிடுவாங்க. அவங்க வீட்டு பல திருமணங்கள் என் தலைமையில நடந்திருக்கு. எனக்கு மீனவ மக்களை ரொம்பப் பிடிக்கும். அவங்க அன்பும் பாசமும் ரொம்ப தூய்மையானதா இருக்கும்.

சிகிச்சை

`நேதாஜி சமூக சேவை இயக்கம்’னு ஒண்ணைத் தொடங்கி பல சமூக சேவைகளையும் செஞ்சிட்டு வர்றோம். கண்தானம், ரத்ததானம், கண் புரை நீக்குதல்னு ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மருத்துவ முகாம்களையும் நடத்தியிருக்கிறோம். அதுக்குப் பல மருத்துவர்கள் உதவியிருக்காங்க. பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறோம். ஏழை எளியோருக்கு மருத்துவம், சுகாதாரம் தொடர்பா பல்வேறு விழிப்புஉணர்வு பிரசாரங்களையும் செய்துவருகிறோம். புயல் காலங்களில் எல்லாம் கடலூர்ல பல்வேறு பல மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கோம். ஆண்டவன் புண்ணியத்துல நல்லபடியா போயிட்டிருக்கு.

நம்ம இளம் மருத்துவர்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான். தயவுசெஞ்சு கிராமங்களுக்குப் போங்க. நெறையா மருத்துவ முகாம்களை நடத்துங்க. ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்க. அவங்க வீட்டு உறுப்பினர்களைப்போல பழகுங்க. நம்ம ஜனங்க மருத்துவர்களைக் கடவுளாப் பார்க்குறாங்க. அவங்களைக் குழந்தைகள்போலப் பார்த்துக்க வேண்டியது, நம்ம கடமை. அதேபோல மருத்துவக் கல்லூரியிலேயே சேவைகளைப் பத்தி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். மருத்துவம் புனிதமானது. அது வியாபாரமாகிடக் கூடாது. இன்னிக்கும், என்னிக்கும் அது சேவையா மட்டும்தான் இருக்கணும்’’ என்கிறார் டாக்டர் ஜெயச்சந்திரன்.

 

டாக்டர் ஜெயச்சந்திரன்

ஒரு ஜவுளிக் கடை அதிபர் வீட்டிலிருந்து ஜெயச்சந்திரனுக்கு மதிய உணவும், மாலையில் தேநீரும் கடந்த ஒரு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. டாக்டர் ஜெயச்சந்திரன் எவ்வளவு மறுத்தும் அந்த ஜவுளிக் கடை அதிபர் விட்டபாடில்லை. அவரும் டாக்டரிடம்தான் பல வருடங்களாக சிகிச்சை பெற்றுவருகிறார்.

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், மகிழ்ச்சியோடு தன்னிடம் வருபவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார் ஜெயச்சந்திரன். இன்றைய இளைய தலைமுறையினர் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியது டாக்டர் ஜெயச்சந்திரன் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களைத்தான். அதுதான் நம் அனைவரின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கும் நல்லது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்